கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன அரச மரியாதையுடன் தேசத்திலிருந்து விடைபெற்றார்…

சர்வோதய அமைப்பின் ஸ்தாபகர் ஏ.டி.ஆரியரத்ன அவர்களின் இறுதிக் கிரியைகள் 2024.04.20 அன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் இடம்பெற்ற போது பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் ஆற்றிய அஞ்சலி உரை-

கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன அவர்களை நாம் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். கலாநிதி அவர்களின் மரணம் தேசத்தில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பலர் இந்த துயரத்தில் பங்கு கொள்கிறார்கள்.

ஏ.டி.ஆரியரத்ன அவர்கள் தனது வாழ்வின் தனித்துவத்தினால் இன்று அரச கௌரவத்தைப் பெறுகின்றார். திரு.அரியரத்ன அவர்களின் வாழ்க்கை மக்கள் நலனுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது. துன்புறும் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த அவர் ஆற்றிய பணி உன்னதமானது.

நாட்டின் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, கலாநிதி ஆரியரத்ன அவர்கள் என்றென்றும் நினைவுகூரக்கூடிய ஒரு முன்மாதிரியான பணித்திட்டத்திற்கு பயனுள்ள தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார்.

கலாநிதி ஆரியரத்ன அவர்கள் இன்று மரியாதையுடன் நினைவுகூரப்படும் போது அவர் சிரமதானத்திற்கு அர்த்தமும், செயற்பாடும், முனைப்பும் தந்த உன்னத மனிதர். அந்த பெருந்தன்மையே மனித சமுதாயத்தை மாற்றக்கூடிய மனித மூலதனத்தின் மிகப்பெரிய செயல்பாட்டை நாட்டுக்கு வழங்கியது.

திரு.ஆரியரத்ன அவர்கள், அந்தத் திட்டத்தில் உழைப்பை தானம் செய்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான வாழ்க்கை மாறியது, நாடு முழுவதும் உள்ள எமது சமூகத்தின் மனித நற்பண்புகளுக்கு உரிமை கூறத் தொடங்கியது. அதுவரை உரிமை இல்லாத மக்களுக்கு உரிமைகளை வழங்கியது உங்கள் தலைமையாகும். அதுபோன்று சர்வோதய இயக்கம் நம் நாட்டு மக்கள் வறுமையில் இருந்து வெளிவரவும் இந்த தர்மங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து, நம் நாட்டு மக்களுக்கு கிடைத்த மாபெரும் நிழல் ஆகும். அந்தச் செயற்பாடுகளை நாடு முழுவதும் முன்னுதாரணமாக முன்னெடுத்தவர் நீங்கள்.

இன்று நீங்கள் எம்மை விட்டுப் பிரியும் இந்த வேளையில், சர்வோதயவினால் ஏற்படுத்தப்பட்ட மாபெரும் சமூக மாற்றம் உங்களின் சொந்தத் தலைமையினால் ஏற்பட்டது என்பதை நினைவு கூர்ந்து இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.அதனால்தான் உங்களை கௌரவிக்கும் வகையில் இந்த தினத்தை அரசு பிரகடனப்படுத்தியது.

அரசியல் கட்சிகளோ, அரச திணைக்களங்களோ, அரச நிறுவனங்களோ எதுவுமின்றி, மக்களின் முன்னேற்றத்திற்காக அந்தப் பெரும் சக்தியினை ஆர்ப்பாட்டமில்லாத தலைமைத்துவத்துடன் நீங்கள் வழிநடத்தினீர்கள். அந்த மாபெரும் சவாலை நீங்கள் கடந்து செல்ல உங்களுக்கு மரபுரிமையாக எதுவும் இருக்கவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

இந்த இயக்கத்தில் மக்கள் நம்பிக்கை மற்றும் மக்கள் நலன்களின் அடிப்படையில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய மானிடப் பண்பு என்ற கொள்கையை கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன உருவாக்கினார்.

எனவேதான் திரு.ஏ.டி.ஆரியரத்னவை எம் நாட்டு மக்களுக்கு முன்மாதிரியான உன்னத மனிதராக அறிமுகப்படுத்த முடியும்.அந்த முன்மாதிரியான சுதந்திர மனிதநேயத்தின் நற்பண்புகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இயக்கத்திற்கு நாட்டின் ஒவ்வொரு கிராமமும், குடிமக்கள் மற்றும் அரசு நிறுவனங்களும் செவிதாழ்த்தும் சக்தியாக மாற்றியுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து செல்கிறீர்கள். அன்புள்ள கலாநிதி ஆரியரத்ன அவர்களே, நீங்கள் எமக்கு வழங்கிய வாழ்க்கை முறையை இன்று நாங்கள் மதிக்கிறோம். வருங்கால சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக எடுத்துச் செல்லும் வகையில் அந்த மரியாதை இன்று நினைவுகூரப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் உங்களுக்கு மிக உயர்ந்த கௌரவத்தை வழங்க விரும்புகிறது. ஏ.டீ. ஆரியரத்ன அவர்களே, எங்கள் நாட்டின் பெருமைக்குரிய மனிதராக உங்கள் சேவையை நினைவுகூரும் அதே வேளையில் உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயாவின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய வலேபொட குணசிறி தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் மற்றும் சர்வ மதத் தலைவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தியதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுதாப செய்தி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வாசிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிவில் அமைப்புக்களின் கூட்டணி சார்பில் பெபரல் அமைப்பின் தலைவர் ரோஹன ஹெட்டியாராச்சி, சர்வதேச சர்வோதய சார்பில் ஜோன் குன்றோட், இலங்கை சர்வோதய உறுப்பினர்கள் சார்பில் வடமாகாண ஆளுநர் எஸ்.பி. சார்லஸ், நாலந்தா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் தற்போதைய அதிபர் இரான் சம்பிக்க, குடும்ப உறுப்பினர்கள் சார்பில் டாக்டர் வின்யா ஆரியரத்ன ஆகியோர் உரை நிகழ்த்தினர். இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, ஏ.எச்.எம்., பௌசி, யதாமினி குணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், தூதுவர்கள், அரச அதிகாரிகள், நாடளாவிய ரீதியில் சர்வோதய செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு