பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

உலக வங்கியின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் கலந்துகொண்டார்.

’அனைவருக்குமான டிஜிட்டல் பாதை’ எனும் தொனிப்பொருளின் கீழ் வொஷிங்டன் டீ.சீ.யில் உலக வங்கியின் தலைமையகத்தில் மார்ச் 17ம் திகதியிலிருந்து 20ம் திகதி வரை உலக வங்கி குழுமத்தின் 2025 பூகோள டிஜிட்டல் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கலந்துகொண்டார்.

இந்த மாநாடு டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் பொருளாதார, சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வது மற்றும் அதன் பங்கினை ஆராயும் நோக்கில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல்மயப்படுத்தல் செயற்பாடுகளுக்கென இந்த மாநாடு மிகவும் முக்கியமானதாகும். இலங்கையின் நிரந்தர டிஜிட்டல் பரிணாமத்தை முன்னிட்டு வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உபாய மார்க்கங்கள் தொடர்பில் பூகோள நிபுணர்களுடன் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ தனது கருத்துக்களைப் பரிமாற்றிக்கொண்டார்.

பூகோள டிஜிட்டல் மாநாட்டிற்கு இணைவாக, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கியின் பிரதம அதிகாரிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன், சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பீ.கே.ஜீ.ஹரிச்சந்த்ர உள்ளிட்டவர்களையும் சந்தித்தார்.

இலங்கையின் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதிகளின் (EFF) முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் 2025 பெப்ரவரி மாதத்தில் EFF இன் கீழ் மூன்றாவது மீளாய்வினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் IMF நிறைவேற்றுக் குழுவின் சிரேஷ்ட முகாமைத்துவம் மற்றும் பணிக் குழு வழங்கிய ஒத்துழைப்புக்கு பிரதமரின் செயலாளர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள EFF மீளாய்வின் மைல்கல்லை பூர்த்தி செய்வதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்குமென பிரதமரின் செயலாளர் இதன்போது தெரிவித்தார். பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்குதல், வரி செயன்முறையின் செயற்திறனை மேம்படுத்தல் மற்றும் முழு பொருளாதார பயன்களையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட அரசின் தொடர்ச்சியான டிஜிட்டல்மயப்படுத்தல் முயற்சிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு உலக வங்கி வழங்கும் பூரண ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்து, உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரயிசர் அவர்களுடனும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரீ கூட்டமொன்றில் பங்கேற்றிருந்தார். இலங்கையின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவது மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கென உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென ரயிசர் அவர்கள் இதன்போது உறுதியளித்தார்.

நாட்டின் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கென தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் தேவைப்படும் ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் ஊடக பிரிவு

மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் இடம்பெற்று வருகிறது என்பது எதிர்க்கட்சியினரின் பேச்சு மற்றும் செயல்களில் இருந்து தெளிவாகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சில விமர்சனங்களை அவதானிக்கும் போது மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் (System Change) இடம்பெற்று வருவதாக தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு இன்று (20) உரையாற்றும் போதே பிரதமர் இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற இந்த ஒரு மாத காலமாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இது பற்றி நாம் விவாதம் செய்து உரையாடல்களில் ஈடுபட்டோம். இதன் போது பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்தித்து வரவு செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடினோம்.

எமக்கு முன்வைக்கப்பட்ட அந்த முன்மொழிவுகளின் விமர்சனத்தின் ஊடாக வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்த முடிந்துள்ளது.

என்றாலும், வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் முதல் நாள், எதிர்க்கட்சிகளின் பேச்சுக்களிலும், இன்று நடைபெற்ற உரைகளிலும் முன்னேற்றம் உள்ளதா என நான் ஆராய்ந்து பார்த்தேன். ஏனென்றால் ஒரு மாத உரையாடலில் இருந்து சில வளர்ச்சியையும் மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

ஆனால், எதிர்க்கட்சிகளின் சில பேச்சுக்களின் உள்ளடக்கத்தைப் பார்க்கின்றபோது, அவை இன்னும் அப்படியே இருப்பதாகவே உணர்ந்தேன்.

இந்த விவாதத்தில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு வகையான தாழ்வுச் சிக்கலால் ஏற்பட்ட வலியால் ஏற்பட்டதாக உணர்ந்தேன். இவை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள். வரவு-செலவுத் திட்ட உரையாடல் குறித்து கவனம் செலுத்தும் போது, அரசாங்கம் சாதிக்க முயலும் முறைமை மாற்றம் நிச்சயம் நிகழும் என்று நம்பிக்கையுடன் கூறலாம்.

ஒரு முறைமையை மாற்றினால், அது ஒரே இடத்தில் நடக்கின்ற ஒன்றல்ல. சமூகத்தில் உள்ள அதிகார உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஒரு அமைப்பு மாற்றத்தில், ஒரு இடத்தில் உள்ள உறவுகள் மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுகின்றன. இந்த வரவுசெலவுத்திட்டத்தை விமர்சிக்கின்ற அல்லது, இந்த முறை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று பார்த்தால், முறை மாற்றம் ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

வரவு செலவுத் திட்டம் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் பழைய முறைமையில் அதிகாரத்தை வைத்திருந்தவர்கள் மற்றும் அந்த அதிகாரத்தை ஒரு சிறப்புரிமையாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து தான் வருகிறது. சிறப்புரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகம் ஜனநாயகமானது அல்ல. அதை மாற்றவே நாம் முயற்சிக்கிறோம். அதிகாரத்தை தவறாக அனுபவித்துவந்த சமூகத்தை பெரும்பான்மையானவர்கள் நிராகரிக்கிறார்கள்.

இந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தால் மகிழ்ச்சியடைந்தவர்கள் கடினமாக உழைத்து, மிகவும் நியாயமான முதலீடுகளைச் செய்து, பொறுப்புடன் நடந்துகொள்ளும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகும். இன்று அவர்கள் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற அரசியல்வாதிகளின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை. இன்று அவர்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறது. அவர்களால் பல வருடங்களை திட்டமிட்டு செயற்பட முடிகிறது.

அரச சேவையில் உள்ளவர்கள் தமக்கு ஒரு இடம் கிடைத்துள்ளதால் இந்த மாற்றத்தை பாராட்டுகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் கிடைத்துள்ளது. தங்கள் கடமையை சுதந்திரமாகச் செய்ய முடியும் என்ற மகிழ்ச்சி அடைபவர்களும் உள்ளனர்.

சமூகத்தில் வாய்ப்புகளை இழந்த பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பெருந்தோட்ட மக்கள் உட்பட பலர் இன்று நிவாரணம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரின் எதிர்காலப் பொருளாதார வழிகள் திறக்கப்படுவதை அவர்களால் பார்க்க முடிகிறது. பொருளாதார நன்மைகளை இழந்த பெருமளவிலான மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழி கிடைத்துள்ளது.

வேலையற்ற இளைஞர்கள் குறித்து பல விவாதங்கள் நடந்தன, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தகுதிக்குப் பொருந்தாத வேலைகளை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகளைத் திறக்கும் முறைமையை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதே யதார்த்தமாகும். தற்போதும் பல வேலை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆட்சியில் இருந்த அரசுகள் எடுத்த முடிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன. மேலும் சில வழக்குகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளன.

மக்களின் எரியும் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தமது அதிகாரத்தையும் சலுகைகளையும் பெற்றவர்கள் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

அனைவரையும் உள்ளடக்கிய வகையில் முடிவெடுக்கும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பெரும் தியாகங்களையும் கடின உழைப்பையும் செய்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதமரின் பங்கேற்புடன் சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் நடன நிகழ்ச்சி

பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் (SIBA) ஏற்பாடு செய்திருந்த நடனக் கச்சேரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் தாமரைத் தடாகம் கலையரங்கில் மார்ச் 19 அன்று நடைபெற்றது.

பல்லேகலை சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் தலதா மாளிகையின் தியவதன நிலமே திரு. பிரதீப் நிலங்க தேல அவர்களின் எண்ணக்கருவின் படி, 2016 ஆம் ஆண்டில் சுதேச நடன மரபுகளை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நடனக் கச்சேரியில் கண்டிய நடனம் மற்றும் சப்ரகமுவ மரபுகளை சேர்ந்த பல நடனங்கள் மற்றும் பல இந்திய நடன அம்சங்களுடன் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நடனம் மற்றும் இசை நிகழ்வுகள் அனைத்தும் பல்லேகலை சர்வதேச பெளத்த பல்கலைக்கழகத்தின் (SIBA) மாணவர்களால் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ மகா சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகள் உட்பட பெருந்திரளானவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய இச்சந்திப்பின் போது, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

சமய சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலாப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக பனை எண்ணெய் இறக்குமதி மற்றும் சேதன உரங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் தூதுவர் பிரதமருடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் இலங்கையின் பொதுப் போக்குவரத்து முறைமையில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தோனேசிய தூதுக்குழுவின் பிரதிநிதியாக துணை தூதுவர் ஃபிக்கி ஒக்டானியோன்ட் மற்றும் அமைச்சு ஆலோசகர் லைலால் கே. யுனியார்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மார்ச் 18ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் தொழில்முயற்சியாளர் நிதிக் குறியீடு (WE Finance Code) வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை அறிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஆண்களின் சதவீதம் உலகளவில் 72% மற்றும் உள்நாட்டில் 71% ஆகும். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில், பெண் பங்கேற்பு சதவீதம் முறையே 47% மற்றும் 32% வீதமாகும், பாலின வேறுபாடு தொழிற்படை பங்கேற்பில் வலுவான தக்கத்தை கொண்டுள்ளது என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பெண்கள் தொழில்முயற்சியாளர்களாக முன்னேறுவதைத் தடுக்கும் நிதி அணுகல், சந்தை, தொழிலாளர் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் தற்போதுள்ள கட்டமைப்புத் தடைகளை நீக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

பொதுப் போக்குவரத்து மற்றும் வேலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பின்மையினால் மாத்திரமன்றி, சமூக-கலாசார நியதிகளால் உருவாக்கப்பட்ட பெண்கள் மீது வீட்டுப் பொறுப்புகளை பெருமளவில் சுமத்துவதன் காரணமாகவும் இலங்கையில் பெண்கள் மேலதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

உலகளவில், முறைசார் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) 5.2 டிரில்லியன் அமெரிக்க டொலர்களும் முறைசாரா நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2.9 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளாவிய நிதி இடைவெளி காணப்படுகிறது.

நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களைப் பொறுத்தவரை, இலங்கையின் நிதி இடைவெளி சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21% ஆகும், இதற்கு முக்கியக் காரணம் பெண்களால் நடத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள் சமமற்ற முறையில் அழுத்தங்களுக்கு உள்ளாவதாகும்.

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான நிதி இடைவெளியை நீக்குவதன் மூலம், உலகப் பொருளாதார பெறுமதியில் 5-6 டிரில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும்.

தலைமைத்துவம், செயல் முனைப்பு மற்றும் தரவு அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் பெண் தொழில்முயற்சியாளருக்கான பொருளாதார அபிவிருத்திக்கான பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உலகளவில் செயற்படும் பெண் தொழில்முயற்சியாளர்களின் நிதி இலக்கு பற்றியும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் இதனை நடைமுறைப்படுத்திய முதல் 24 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஆகஸ்ட் மாதம், பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சி நிறுவனங்களுக்கான தேசிய வரையறைகளை தயாரிக்கும் பணி வெற்றிகரமாக சாத்தியமானதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இது தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்தி மேலும் பயனுள்ள கொள்கை உருவாக்கத்திற்கு வழிவகுப்பதாகவும், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி உதவி மற்றும் கொள்கை ஆலோசனைகள் உட்பட ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஆதரவைப் பாராட்டிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் தேசிய கூட்டமைப்பை நிறுவுவதற்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அளவுகோல் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து நாம் தொழில் வழங்குவதில்லை. அதற்கென உரிய செயன்முறை அரசிற்கு உள்ளது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

தொழில் வழங்குவதில் உரிய செயன்முறையொன்று அரசிற்கு இருப்பதாகவும், இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் போன்று உயரமா குள்ளமா என பார்த்து தொழில் வழங்கப்படமாட்டாதெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது எழுப்பிய கேள்விக்கு இன்றைய தினம் (18) பதில் வழங்கிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

சுதந்திர கல்வியில் மாணவர்களுக்கென மேற்கொள்ளப்படும் செலவுகள் பொதுவான கல்வியில் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை கட்டங்களுக்கென வேறாக தரவுகள் இல்லை. இந்த இரு மட்டங்களிலும் பொதுவாக ஒரு மாணவருக்கென 2020ம் ஆண்டிலிருந்து 2025ம் ஆண்டு வரை கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செலவிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டில் 60,136. 2021ம் ஆண்டில் 63,498. 2022ம் ஆண்டில் 75,096. 2023ம் ஆண்டில் 87,594. 2024ம் ஆண்டிற்கென 97,784. 2025ம் ஆண்டிற்கென மதிப்பிடப்பட்ட ஒரு மில்லியன் 15,715 ரூபா தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூன்றாம் நிலைக்கான ஒதுக்கீடு ஒவ்வொரு பாட விதானங்களுக்கமைய மாற்றமடையும். பொதுவாக உயர் கல்வியைத் தொடரும் மாணவர் ஒருவருக்கென நான்கு இலட்சத்து ஐயாயிரத்து முன்னூற்று பதின்மூன்று ரூபா செலவிடப்படுகிறது. இந்த தகவல்கள் தொடர்ச்சியான செலவுகளுக்கமையயே முன்வைத்துள்ளோம்.

சுதந்திர கல்வியைப் பெறும் ஒரு மாணவனுக்கென வருடாந்தம் அரசாங்கம் செலவிடும் நிதிச் சுமை தொடர்பில் கல்வியமைச்சு அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு ஒன்று இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

பல்வேறு பாட விதானங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில் தேடுவதற்கு செலவிடும் காலம் தொடர்பில் பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் வருடாந்தம் இடம்பெறும் ஆய்வு அல்ல. பல்கலைக்கழக கல்வியில் உள்வாரி, வெளிவாரி மற்றும் நீண்டகாலம் என்ற அடிப்படையில் வௌ;வேறாக தகவல்களை பெற முடியாதுள்ளது.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு இருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கமைய பட்டதாரிகளுக்கு வேலையின்மைக்கு ஒரு காரணத்தை கூற முடியாதென்பது இதனூடாக தெளிவாகிறது. பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான கல்வியில் காணப்படும் சந்தர்ப்பங்கள் இதில் கூடுதல் தாக்கம் செலுத்துகின்றன. தொழில் வாய்ப்புக்களைப் பெறும் போது ஒருவருக்கொருவர் காணப்படும் சமூக தொடர்புகளுக்கமையவும் தொழில்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் தீர்மானிக்கப்படுகிறது. விசேடமாக தனியார் துறையில் வேலையின்மை என்பது ஒரு சிக்கலான பிரச்சினையாகும். இதில் பல்வேறு காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் புதிய பட்டதாரிகளுக்கென தொழிற்துறை வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கென தொழில்சார் வழிகாட்டல் குழுக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் காணப்படும் தொழில்சார் வழிகாட்டல் பிரிவுகளின் பணிப்பாளர் அதன் பிரதானியாக செயற்படுகின்றார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொழில்சார் வழிகாட்டல் ஆலோசனை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பட்டதாரி மாணவர்கள் மற்றும் கைத்தொழில் கேள்விக்கிடையிலான பரஸ்பரத்தை பூர்த்தி செய்வதற்கு தொழில் சந்தைகளை நடத்துவதுடன் தனியார் துறையின் ஒத்துழைப்பை பெறுவதற்கு வியாபார தொடர்புகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கென முப்பத்தையாயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதற்கென உரிய அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மானியங்களுக்கு மேலதிகமாக பத்தாயிரம் மில்லியன் ரூபா கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமானவர்கள் ஆசிரியர்களாகவே இணைத்துக்கொள்ளப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கென காணப்படும் வழக்கு நிறைவுக்கு வந்ததன் பின்னர் கிடைக்கப்பெறும் தீர்ப்பிற்கமைய தொழில்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஏனைய ஆட்சேர்ப்பு செயற்பாடு உரிய ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைய இடம்பெறும்.

இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.

’நான் இந்த கேள்விக்கு ஏற்கனவே பதில் வழங்கிவிட்டேன். அரச கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கமைய நாம் ஆட்சேர்ப்புகளை மேற்கொள்கின்றோம். இதுவரைக் காலமும் இருந்த அரசாங்கங்களைப் போன்று நாம் நினைத்த நேரத்தில் விதிமுறைகள் இன்றி உயரமா, குள்ளமா என பார்த்து தொழில் வழங்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட செயன்முறை உள்ளது. அரச சேவை ஆணைக்குழு வழங்கும் தீர்மானங்கள் மற்றும் கொள்கைகளுக்கமையவே தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது. இடம்பெறும். பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகள் வைத்து உரிய செயன்முறைகளை பின்பற்றி இதுவரை சுமார் பத்தாயிரம் பேருக்கு நாம் தொழில்களைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். தொழில் வெற்றிடங்கள் தொடர்பில் பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்று இயங்குகிறது. இதனூடாக வெற்றிடங்களை அடையாளம் கண்டு தேவையான வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்’.

பிரதமர் ஊடக பிரிவு