கௌரவ தினேஷ் குணவர்தன

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர்

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 15வது பிரதமராக 2022.07.22 ஆந் திகதி பதவியேற்றார்.

அவர் தற்போது பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கூட்டணி கட்சியாகவிருக்கும் மக்கள் ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியாக, கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் 1968 இல் இளைஞர் தலைவராகவும் பின்னர் 1973 இல் மகஜன எக்சத் பெரமுனவின் (மக்கள் ஐக்கிய முன்னணி) தலைவராகவும் தனது அரசியல் வாழ்க்கையைத் ஆரம்பித்ததிலிருந்து அரசியல் மற்றும் ஆட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

கௌரவ தினேஷ் குணவர்தன 1983 ஆம் ஆண்டு முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி எம்.பியாக தெரிவு செய்யப்பட்டார், பின்னர் ஏழு தடவைகள் மக்களால் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தார். போக்குவரத்து அமைச்சராக (2000), போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைச்சராக (2001), நகர அபிவிருத்தி அமைச்சராக (2004-2010), உயர்கல்வி பிரதி அமைச்சராக (2004-2007 ஜனாதிபதியின் கீழ் நியமிக்கப்பட்டார்), புனித பிரதேச அபிவிருத்தி அமைச்சர் (2007–2010), நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் (2010–2015), பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் (2018), தொழில் உறவுகள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் விருத்தி அமைச்சர் (2019–2020), வெளியுறவு அமைச்சர் (2019–2021), மற்றும் கல்வி அமைச்சர் (2021-2022).

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் (2008-2015), கூட்டு எதிர்க்கட்சித் தலைவர் (2015-2018), மற்றும் சபைத் தலைவர் (2018, மற்றும் 2019-2022) ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் 1949 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி இலங்கையில் பிறந்தார். பொரலுகொட சிங்கம் என்று அன்புடன் நினைவுகூரப்படும் அவரது தந்தையான மறைந்த பிலிப் குணவர்தன இலங்கையின் தேசிய வீரரும் சுதந்திரப் போராளியும் தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். அவர் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், அரசியல் கட்சியின் ஸ்தாபகர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். அதே நேரத்தில் அவரது தாயாரான மறைந்த குசுமா குணவர்தன இலங்கையின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான கௌரவ தினேஷ் குணவர்தன நயன்ரோட் வர்த்தக பல்கலைக்கழகத்தில் (நெதர்லாந்தின் வர்த்தகக் கல்லூரி) வர்த்தக முகாமைத்துவத்துவப் பட்டத்தையும் அமெரிக்காவின் ஒரிகன் யூஜின் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சர்வதேச போக்குவரத்து ஆகியவற்றில் இளங்கலைமானிப் பட்டத்தையும் பெற்றார்.

கௌரவ பிரதமர் அவர்கள் இலங்கை மற்றும் உலகளாவிய சமூகத்திற்கு அவர் ஆற்றிய நிலையான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ஸ்பெயின் அரசர் (2012) வழங்கிய ஆர்டன் டி இசபெல் விருது (2012), ஸ்லம் ட்வெல்லர்ஸ் இன்டர்நேஷனல் (2009) வழங்கிய சர்வதேச ஏழைகளுக்கு ஆதரவான தலைவர் விருது மற்றும் கியூபா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கியூபா நட்புறவு ஆணை விருது (2006).

கௌரவ பிரதமர் அவர்கள் பாராளுமன்ற ஒன்றியம் பொதுநலவாய பாராளுமன்ற அமைப்பு ஆகியவற்றில் உறுப்புரிமையுடன் சுமார் 40 வருட பாராளுமன்ற அனுபவத்தைக் கொண்டவர். புதிய கலப்புத் தேர்தல் முறையைப் பரிந்துரைத்து, இலங்கையில் அனைத்து வகையான தேர்தல் சட்டங்களையும் வலுப்படுத்த முற்போக்கான சீர்திருத்தங்களைச் செய்த தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான (2002-2012 மற்றும் 2020-2022) பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக இருந்தார்.

கௌரவ தினேஷ் குணவர்தன 2001 இல் மொன்ட்ரியல் நெறிமுறை உச்சிமாநாட்டின் (ஓசோன் உச்சிமாநாடு என்றும் அழைக்கப்படும்) துணைத் தலைவராக இருந்தார். அவர் 2008 ஆம் ஆண்டில் ஏழைகளுக்கு வீடு வழங்குவதற்காக ஒரு விசேட சட்டத்தை கொண்டு உருவாக்கப்பட்ட நகர்ப்புற குடியேற்ற அபிவிருத்தி அதிகாரசபையின் (USDA) வடிவமைப்பாளர் ஆவார். 2013 இல் அவர் சமூக நீர் நம்பிக்கை நிதியத்தை நிறுவியதுடன், தேசிய சமூக நீர் திணைக்களத்தின் வடிவமைப்பாளரும் ஆவார். இது இலங்கையின் 18.5% மக்களுக்கு குழாய் மூலம் நீரை வழங்கும் சமூக அடிப்படையிலான நிறுவனங்கள் (CBOs) மூலம் நீர் திட்டங்களை உருவாக்கியது.

கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் 24 வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த 250,000 ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சரிசெய்து (2021), 1,000 தேசிய பாடசாலைகள் திட்டத்தை (2022) ஆரம்பித்து வைத்தார். அவர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் (2005) மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் (2021) ஆகிய இரண்டு தேசிய பல்கலைக்கழகங்களை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தேசிய பல்கலைக்கழக நுழைவை 10,000 மாணவர்களினால் (2021) அதிகரித்தார். அவர் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்த காலத்தில், 2020/21 தொற்றுநோய் காலப்பகுதியின் போது எந்தவொரு வேலை இழப்புமின்றி 3.5 மில்லியன் தனியார் துறை தொழில்களைப் பாதுகாப்பது தொடர்பாக தொழில்தருனர்கள் கூட்டமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையே ஒரு வரலாற்று முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.