மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளை விரிவுபடுத்த சீனாவின் உதவி...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கத்திற்கும் (CASMCE) இடையிலான சந்திப்பொன்று இன்று (2024.04.25) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளை விரிவுபடுத்தல் மற்றும் வர்த்தக முதலீடுகள் குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமரின் சீன விஜயம் குறித்து சீன மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த வருகைக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சீன சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் சங்கத்தின் (CASMCE) தலைவர் ரென் சிங்ளே (Ren XINGLEI) தெரிவித்தார்.

இலங்கையில் சூரிய சக்தி, காற்றாலை சக்திவளத்துடன் தொடர்புடைய கைத்தொழில் அபிவிருத்தியில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக CASMCE சங்கத்தின் உப தலைவர் சூ சியெங் (XU XIANG ) தெரிவித்தார்.

உயர்தர கறுவாவினை ஏற்றுமதி செய்வதற்கும் இலத்திரனியல் வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்குவதற்கும் உள்ள சாத்தியக்கூறுகளை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சீன சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் அதிகாரிகள் உட்பட பல சீன தொழில்முயற்சியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு