வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க அரபு இலங்கை வர்த்தக சபையை அமைக்க எகிப்து முன்மொழிவு

இலங்கைக்கான எகிப்திய தூதுவர் மாஜித் முஸ்லிஹ் நேற்று முன்தினம் (ஏப்ரல் 28) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக அரபு இலங்கை வர்த்தக சபையை நிறுவுவதற்கு அரபு தூதுவர்கள் மன்றத்துடன் இணைந்து எகிப்து செயற்பட்டு வருவதாக தூதுவர் முஸ்லிஹ் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கங்களுடன் கலந்துரையாடி இதற்கான ஆரம்ப வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதால் உபசரிப்பு துறையில் சாத்தியமான முதலீடுகளை ஆராயுமாறும் இலங்கையில் ஏற்றுமதி கைத்தொழில் வலயங்களில் ஏற்றுமதி கைத்தொழில்களை அமைப்பது குறித்தும் ஆராயுமாறு பிரதமர் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு பிரதமர் விளக்கினார்.

குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கிடைத்த விரைவான வெற்றிக்காக அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்த எகிப்திய தூதுவர், இதேபோன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மற்ற நாடுகளுக்கு பின்பற்றுவதற்கு இலங்கை ஒரு பெறுமதியான முன்மாதிரியை வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன மற்றும் இந்தோனேசிய தூதரக ஆலோசகர் மொஹமட் மாதி ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.