பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவிப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இதன்போது இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, கத்தோலிக்க சமூகத்தின் ஆன்மீகத் தலைவரான திருத்தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் அப்போஸ்தலிக் பிரதிநிதி மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எதிர்க்கட்சியினர் இன்று எங்கும் செல்ல முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கண்டிக்கு வரும் மக்கள் சூழலைப் பாதுகாத்து, தலதா மாளிகைக்குச் சென்று தூய்மையான முறையில் வழிபடுங்கள், மாற்றத்தை உங்களில் இருந்து ஆரம்பியுங்கள்.

எதிர்க்கட்சியினர் தமக்கு ஒரு இடம் இல்லாது போய்விடுமோ என்று அஞ்சுவதாகவும், தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, உடுதும்பர, ஹசலக, குண்டசாலை, மடவளை ஆகிய பகுதிகளில் இன்று (24) நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்ததாவது,

வேறு ஒரு யுகத்திற்கு இந்த நாட்டை கொண்டு செல்வதற்குத் தேவையான திட்டத்தை அரசாங்கம் தயாரித்து, முகாமைத்துவம் செய்து, செயற்படுத்தி வருகிறது.

நாடு எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டின் பொருளாதாரம் இன்று ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியுள்ளது. ஊழல் மற்றும் வீண்விரயம் ஒழிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாதவகையில் மிகவும் கவனமாக செயற்பட்டு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டுவருகிறோம்.

"இப்போது உங்களுக்கு ஜனாதிபதி பதவியும் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கத்தை நிறுவும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது, உங்களுக்கு இன்னும் என்ன தேவை?" என்று நீங்கள் நினைக்கலாம்.

உங்களுக்குத் தெரியும், ஒரு நாட்டை ஆட்சி செய்யும்போது, பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து மட்டங்களிலும் மக்களின் பிரதிநிதித்துவம் அவசியம்.

அந்த முக்கியத்துவத்தின் காரணமாகவே, முன்னைய அரசாங்கம் 2023 இல் நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவில்லை. ஏனென்றால், கிராமம் வளர்ச்சியடைந்தால், கிராமத் தலைமை மாற்றமடைந்தால், கிராமத்திலிருந்தே அரசியல் கலாசாரம் மாறத் தொடங்கினால், அந்த ஊழல் அரசியல்வாதிகளுக்க செல்வதற்கு எங்கும் இடம் கிடையாது என்பதை அவர்கள் அறிவார்கள்.

அந்தப் பயத்தில்தான் அன்றைய அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சாட்டியது. கிராமத்திலிருந்து ஆரம்பிக்கவிருந்த எங்கள் பயணத்தை அவர்கள் தடுக்க முயன்றனர்.

இவ்வளவு காலமாக, வரவுசெலவுத்திட்டம் என்பது வெறும் காகிதத் துண்டாகவே இருந்தது. அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதியின் விருப்பப்படி விடயங்கள் நடந்தன. பணம் செலவழிக்கப்பட்டது.

கொள்கை பிரகடனத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட திட்டத்தைப் பார்த்து, அந்தத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு செயற்படுத்த வேண்டிய விடயங்களை அடையாளம் கண்டு, அதன்படி, அடுத்த எட்டு மாதங்களுக்கான வரவுசெலவுத்திட்டத்தை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.

2024க்கு முன்பிருந்தே நாம் சொன்னோம். நாட்டை எம்மிடம் ஒப்படையுங்கள் என்று. அப்போதிருந்து, எங்கள் முன்னுரிமைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும். எமது முன்னுரிமைகள் என்ன? நாம் சுகாதார முறைமையை மேம்படுத்த வேண்டும். மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார சேவைகளை எளிதாக பெறக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் படிப்படியாக முன்னோக்கிச் செல்லும் ஒரு சுகாதார முறைமையை உருவாக்க வேண்டும். நாம் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஒவ்வொரு கிராமப் பிரிவிலிருந்தும் மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு முழுமையான வசதிகளுடன் கூடிய ஆரம்பப் பாடசாலையை அமைக்க வேண்டும்.

பிள்ளைகளுக்கு சுமையாக இல்லாத கல்வி முறையை அறிமுகப்படுத்த நாங்கள் ஏற்கனவே செயற்பட்டு வருகிறோம். போக்குவரத்து மற்றும் கிராமிய வீதி முறைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும், மேலும் கிராமத்திற்கு பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

அபிவிருத்தி என்பது நகரத்தை மையமாகக் கொண்ட, கொழும்பை மையமாகக் கொண்ட, ஒரு குழுவையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ மையமாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி அல்ல. அனைத்து மக்களும் பங்கேற்று பயனடையக்கூடிய, தங்கள் வாழ்க்கை எளிதாகி வருவதாக உணரக்கூடிய ஒரு முறையாக இது இருக்க வேண்டும்.

அனைவரும் அனுபவிக்கக்கூடிய பொதுவான வளங்களை நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது. இப்போது ஒதுக்கப்பட்ட அந்த நிதியை கிராமிய அபிவிருத்திக்குப் பயன்படுத்த தேவையான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.

கடந்த காலத்தில், தியவண்ணாவையிலிருந்து ஒதுக்கப்பட்டு, திறைசேரியூடாக கிராமத்திற்கு அனுப்பப்பட்ட பணத்தில் மிகக் குறைவான தொகையே கிராமங்களைச் சென்றடைந்ததது. ஏனைய அனைத்தும் தனிப்பட்டவர்களின் சட்டைப் பைகளையே சென்றடைந்தன. அந்த முறைமை மாற வேண்டும்.

நாம் தனிநபர்களாகவன்றி, ஒரு தலைமையின் கீழ் ஒரு குழுவாக முன்னேறிச் செல்லும் ஒரு குழு. அதைத்தான் நாங்கள் அரச நிறுவனங்களுக்கும் சொல்கிறோம். அந்த நிறுவனங்களில் திறமையான அதிகாரிகள் உள்ளனர். ஆனால் அரசியல் தலையீடு காரணமாக, முன்னேற முடியவில்லை. இன்று, அவர்கள் ஒரு குழுவாக நாட்டிற்காக உழைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மக்களுக்காக சேவை செய்ய முன்வாருங்கள்.

மக்கள் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்ததைப் போலவே, அரசாங்க சேவையும் மோசடி மற்றும் ஊழலிலிருந்து விடுபட்டு மக்களுக்கு சேவை செய்யும் இடமாக மாற வேண்டும். அரசாங்க சேவையில் அந்த மாற்றத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்கான ஊக்குவிப்பாகவே நாங்கள் சம்பளத்தை உயர்த்தினோம். மக்களுக்காக உழைக்கும் அரச ஊழியர்களை நாங்கள் பாதுகாப்போம்.

மேலும், தனியார் சேவை மற்றும் தொழில்முயற்சியாளர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியம். வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழிற் துறைகளை அமைக்கவும் வசதிகளை வழங்கவும், முதலீட்டாளர்களை ஈர்க்கவும், தேவையான வரிக் கொள்கைகளை மாற்றவும் அரசாங்கம் தயாராக உள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் மீது வர்த்தக சமூகத்தை கோபமூட்ட எதிர்க்கட்சி பல்வேறு கதைகளைச் சொன்னது. முதலீட்டாளர்கள் வரப்போவதில்லை என்றார்கள். ஆனால் இன்று, வர்த்தக சமூகம் எங்களுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் செயற்பட்டுவருகிறது.

உங்கள் கிராமத்தை கட்டியெழுப்பவே இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியமானது. இன்று, எதிர்க்கட்சிகள் தங்களுக்கு எங்கும் செல்ல முடியாது போகுமோ என்று பயப்படுகிறார்கள், மேலும் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சி மூன்று சதவீதத்திலிருந்து இவ்வளவு தூரம் வந்திருந்தால், இரண்டு சதவீதமாக இருக்கும் மொட்டுக் கட்சியாலும் வளர்ச்சியடைய முடியும் என்று மொட்டுக் கட்சியினர் கூறுகின்றனர். அப்படியானால், ஊழலையும் மோசடியையும் நிறுத்திக் காட்டுங்கள். எம்மை விட மக்களுக்கான அதிக அர்ப்பணிப்பை வெளிப்படுத்திக் காட்டுங்கள்.

அனைத்து விடயங்களையும் அரசாங்கத்தால் மட்டுமே செய்ய முடியாது, பாதுகாப்புத் தரப்பினாலும் முடியாது. கண்டிக்கு தினமும் சுமார் 3 இலட்சம் பேர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒரு பொலிதீன் பையை போட்டால் எமது சூழலுக்கு எமது நகரத்திற்கு எமது எதிர்காலத்திற்கு அதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும்? எனவே நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும், மாற்றத்தை எங்களில் இருந்தே ஆரம்பிப்போம்..

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு பொருத்தமான அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ற குழுவுடன் மக்கள் இருப்பதாக தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய பிக்கு முன்னணியின் கண்டி மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சங்கைக்குரிய தலவல சுஜாத தேரர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம். பஸ்நாயக்க உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரசியல்வாதிகள், அதிபர்கள் நன்மைகளை எதிர்பார்த்து பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்த்த காலம் முடிவடைந்துவிட்டது.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள், எவருக்கும் அரசாங்கத்திடமிருந்து விசேட கவனிப்பு கிடையாது

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தொடங்கொட பகுதியில் ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சமூகத்தை மேம்படுத்த நாம் பாடுபடுகையில், தவறுகளைச் சரிசெய்து முறைமையை மாற்ற மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தலையிடுகிறார்கள். இதுதான் நாம் எதிர்பார்த்த மாற்றம். இதுதான் ஜனநாயகம் என்பது. இப்போது, முன்னர் போன்று போலீசில் முறைப்பாடு அளிக்கச் சென்று திட்டுதல்களை நான் கேட்க வேண்டியதில்லை. கவனமாகக் கேட்டு, முறைப்பாடுகள் சரியாக பதிவுசெய்யப்படுகின்றன. சுமுகமாக உரையாடுகின்றார்கள், இதுதான் மக்கள் கேட்கும் மாற்றம்.

இந்த நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதுதான். சில காலமாகவே வழக்கத்தில் இருந்தது போல, மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்க்க அரசியல்வாதிகளிடமிருந்து கடிதங்களைப் பெற வரிசையில் நின்றார்கள். அப்படித் தான் பிள்ளைகள் பாடசாலையில் சேர்க்கப்பட்டனர், அந்த முறையை நாங்கள் மாற்றினோம். கடிதம் கேட்பது தவறு என்று இன்று மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தத் தவறு நடப்பதை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. இங்கு வருபவர்கள் கவலையில் அழுகிறார்கள், சில விடயங்களை கேட்கின்ற போது எனக்கும் அழுகை வருகின்றது. ஆனால் அவர்களில் யாரும் என்னிடம் எந்தத் தவறையும் செய்யச் சொல்லவில்லை. தனிப்பட்ட விடயங்களுக்காக அரசியல்வாதிகளிடமிருந்து நன்மைகளை எதிர்பார்ப்பது தவறு என்று மக்களே கூறுகிறார்கள். எங்களிடம் வந்து தங்கள் துக்கத்தையோ அல்லது அழுகையையோ வெளிப்படுத்தும்போது கூட, அரசியல்வாதிகளிடம் உதவி கேட்காமல் இருப்பதற்குப் பழக்கமாகிவிட்டார்கள் என்றால், நாங்கள் மாறவில்லையா? மக்கள் மாறவில்லையா? இதைத்தான் இந்த நாட்டு மக்கள் கேட்டார்கள்.

இந்தப் புதிய அரசியல் கலாசாரம் ஒவ்வொரு மட்டத்திலும் ஏற்பட வேண்டும். அந்த மாற்றம் ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிகழ வேண்டும். அப்படியில்லை என்றால், இதைச் செய்ய முடியாது.

சில உள்ளூராட்சி நிறுவனங்கள் இருப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களுக்குத் தெரியாது என்றும், அதற்கான காரணம், அத்தகைய நிறுவனம் இருப்பது குறித்தோ அல்லது ஏதேனும் சேவை வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தோ எந்த அறிவும் இல்லாததே என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட ஏராளமான மக்கள் பிரதிநிதிகள், வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பிரதேச மற்றும் நகர சபைகள் ஊழல் அரசியலின் பாலர் பாடசாலைகள் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க

ஒவ்வொரு அமைச்சுக்கும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மக்களின் நலனுக்காக திட்டமிட்ட முறையில் செலவிடும் சவாலை ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களுக்கும் ஒப்படைத்துள்ளதாகவும், கடந்த கால பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் ஊழல் அரசியலின் பாலர் பாடசாலைகளாக இருந்தன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

"பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது 159 பேரும் குடும்ப அதிகாரத்தினாலோ அல்லது பண பலத்தினாலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களும் உங்களைப் போன்ற சாதாரண மக்கள். உங்களிடையே வாழும் மக்கள். அவர்கள் முன்பு போல பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு சண்டையிடுவதில்லை." பாடசாலை பிள்ளைகள் பாராளுமன்றத்தைப் பார்க்க வரும்போது, பிள்ளைகளை அப்புறப்படுத்துமாறு சபாநாயகரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எமது அரசாங்க உறுப்பினர்கள் மிகவும் கண்ணியத்துடனும், சட்டத்தை மதிக்கும் தன்மையுடனும், அரசியல் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்கிறார்கள்.

இந்த மாதிரியான பாராளுமன்றத்தைத்தான் நாங்கள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்று அந்த மாற்றத்தைச் செய்துள்ளீர்கள். நன்கு செயற்படும், திறமையான உள்ளூராட்சி மன்றத்தின் பலன்களை நாங்கள் நீண்ட காலமாக உணரவில்லை. அதேபோல், உங்களுக்கு நெருக்கமான இந்த உள்ளூராட்சி நிறுவனத்தை மாற்ற, உங்களுக்கு சேவை செய்யும் ஒரு குழுவை தெரிவுசெய்யுங்கள். இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. " என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க,

"யாராவது நகர சபைக்குச் சென்று சிறிய சம்பளம் பெற்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு பெரிய வீட்டைக் கட்டி, ஒரு வாகனத்தை வாங்கினால், அவர்கள் அதை எப்படிச் செய்தார்கள் என்று நாங்கள் அவர்களிடம் கேட்போம். அவர்களிடம் அதற்கு பதில் இல்லையென்றால், நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அந்த சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்போம்."

எதிர்க்கட்சியினர் எப்போதும் எங்களை விமர்சித்து, குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் மக்களின் பணத்தை திருடவில்லை,பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்கக் கோரி கடிதங்கள் அனுப்பவில்லை, பொலீசாருக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. இவ்வளவு நல்ல அரசியல் கலாசாரத்தை செயற்படுத்துவதன் மூலம் நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம்.

"உங்கள் கிராமத்தை கட்டியெழுப்ப ஊழல் செய்யாத, உங்கள் பணத்தை திருடாத ஒரு குழுவை நியமிக்குமாறு நான் இச்சந்தரப்பத்தில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்."

இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை வேட்பாளர் அரோஷ் அத்தபத்து உட்பட பல வேட்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

நீங்கள் செலுத்தும் வரிகளுக்கு பெறுமதி இருக்க வேண்டும். அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப் பணத்திற்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

கொழும்பு ஹேவ்லொக் பிளேஸில் உள்ள மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள கேட்போர் கூடத்தில் ஏப்ரல் 21 ஆந் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆசீர்வாத பூஜையிலும் பிரதமர் பங்கேற்றார்.

இங்கு பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

"கொழும்பு நகரம் பல்வகைமை நிறைந்த ஒரு நகரம். இந்த சிறிய நிலப் பரப்பில் பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்." கொழும்பு நகரம், மிகவும் செல்வந்தர்கள் முதல் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் வாழும் ஒரு நகரமாகும். அதனால் இங்கு தேவைகள் அதிகம். கொழும்பு என்பது இலங்கையின் இதயம்.

ஆனால் இன்றும் கூட கொழும்பு நகரில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அதேபோல், கொழும்பு மாநகர சபைக்கு ஆண்டுதோறும் அதிக வருமானம் கிடைக்கிறது. நீங்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு என்ன நடக்கின்றது என்று நீங்கள் சிந்திக்க முடியும்.

அதனால்தான் கொழும்பு மாநகர சபை ஊழல் இல்லாத ஒரு குழுவின் கைகளில் ஏன் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். "தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள குழு அத்தகைய ஒரு குழு என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்," என்று பிரதமர் கூறினார்.

இந்த மக்கள் சந்திப்பில் கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தாசர் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உட்பட பல பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது

எதிர்க்கட்சிகளுக்கு, இந்தத் தேர்தல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான மற்றுமொரு போராட்டம் மட்டுமே என்றபோதிலும், கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஊழல் இல்லாமல் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தேர்தல் அரசாங்கத்திற்கு மிகவும் தீர்க்கமானது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

கொழும்பு மாவட்டத்தின் மத்திய கொழும்பு, மாளிகாவத்தை பிரிவில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

எமது அரசாங்கம் இப்போது பணிகளைத் தொடங்கியுள்ளது. நாங்கள் அரசாங்கத்தின் முதல் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தோம். அது அடுத்த எட்டு மாதங்களுக்கானது. பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில நன்மைகளை வழங்கும் அபிவிருத்தியை உருவாக்க, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்த நாங்கள் விரும்பினோம்..

நம் மீது குறை கூறும் யாரும் இந்த நாட்டின் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த பண விரயம் பற்றிப் பேசுவதில்லை.

நிதிகளை மிகவும் கவனமாக முகாமைத்துவம் செய்வதன் மூலம் நாங்கள் மக்களுக்காக உழைக்கிறோம். திட்டங்களை வகுக்கின்றோம். அந்தத் திட்டங்களை கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல, கீழ்மட்டத்தில் உள்ள தலைமையும் தூய்மையாக இருக்க வேண்டும்.

எனவே, இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. இது ஒரு பிற்போடப்பட்டிருந்த தேர்தல். நாம் முதலில் செய்ய வேண்டியது, முன்னைய அரசாங்கங்களால் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நிறைவுசெய்வதும், தவறுகளைச் சரிசெய்வதும்தான்.

அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு ரூபாயைப் பற்றியும் ஆயிரம் முறை சிந்திக்கிறது. அரசாங்கம் ஒதுக்கப்பட்ட பணத்தை கிராம மட்டத்திற்கு அனுப்பும்போது, அங்கு திருடர்கள் இருந்தால், நாம் எப்படி கிராமத்தை அபிவிருத்திசெய்ய முடியும்?. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான மக்களின் முடிவின் மூன்றாவது சவாலாகக் கருதி, மே 6 ஆம் திகதி நடைபெறும் தேர்தல்களில் முன்னைய தேர்தல்களைப் போன்ற ஒரு வெற்றியைப் பெறுவோம்.

ஆட்சியின் மேல் மட்டத்தில் ஒன்று, கீழ் மட்டத்தில் ஒன்று என இரண்டு அரசியல் கலாசாரங்கள் இருக்க முடியாது. மேல் மட்டங்கள் வீண்விரயம், ஊழல் மற்றும் மோசடி இல்லாமல் செயற்பட வேண்டுமென்றால், கிராம மட்டத்திலும் இதே போன்ற கட்டுப்பாடு இருக்க வேண்டும். அந்த நோக்கத்திற்காக தேசிய மக்கள் சக்தி மட்டுமே பொருத்தமான வேட்பாளர்களை முன்வைத்துள்ளது.

கொழும்பின் மேயர் வேட்பாளராக நாங்கள் முன்வைத்திருப்பது மேலிருந்து கொண்டுவரப்பட்ட ஒருவரையோ, சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்திலிருந்து வந்த ஒருவரையோ அல்ல, மாறாக கொழும்பில் வாழ்ந்து, கொழும்பைப் பற்றியும், மக்களைப் பற்றியும், கொழும்பு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் நன்கு புரிந்துகொண்ட ஒரு வேட்பாளரைத்தான். சகோதரி வ்ராய் எனது தனிப்பட்ட செயலாளராக இருந்தபோது, எந்தவொரு முக்கியமான பிரச்சினைக்கும் மிகத் துல்லியமாக பதிலளிக்கும் திறன் அவருக்கு இருப்பதை நான் உணர்ந்தேன். அப்படிப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேயர் பதவி வழங்கப்பட வேண்டும். ஒரு வர்க்கம், ஒரு பிரிவு அல்லது ஒரு பகுதியைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்ட ஒருவர் கொழும்பின் மேயராக முடியாது. முழு கொழும்பு பிராந்தியத்திற்கும் மேயராக பணியாற்றக்கூடிய ஒருவர், மக்களின் விவகாரங்கள் குறித்த உணர்திறன் கொண்ட ஒருவர் கொழும்பின் மேயராக வேண்டும். மக்களுக்கு சேவை செய்வதற்கும் மக்களுக்காக உழைப்பதற்கும் இதுபோன்ற ஒரு அரசியல் நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை முன்வைத்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் வருடாந்த வருமானம் 30 பில்லியன் ஆகும். அது மக்களுக்காக ஒதுக்கப்பட்டால், இன்று கொழும்பு இப்படி இருந்திருக்காது. கொழும்பில் ஆனந்தா, நாளந்தா, ரோயல் போன்று ஆசிரியர்கள் இல்லாத, தண்ணீர் இல்லாத, கழிப்பறை வசதிகள் இல்லாத பாடசாலைகள் உள்ளன. அது எப்படி நடந்தது?

பிரதேச மட்டத்திலான பிரச்சினைகளுக்கு உள்ளூராட்சி நிறுவனங்கள் அதிக பொறுப்பைக் கொண்டுள்ளன. அந்த நிறுவனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முடியாவிட்டால், நாம் எப்படி ஒரு புதிய நாட்டை உருவாக்க முடியும்?

இன்று, அரசின் திட்டங்களால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். நாட்டின் அபிவிருத்தி இப்போதுதான் தொடங்குகிறது, ஆனால் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. தேசியளவில் செய்யப்படும் திட்டங்களை கீழ்மட்டங்களில் யதார்த்தமாக்க, நகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சரியான தலைமை அவசியம்.

நாட்டை ஊழல் அரசியலிலிருந்து விடுவிப்பதற்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்கள் தங்கள் வாக்குகளை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், கொழும்பு மேயர் வேட்பாளர் வ்ராய் கெலீ பல்தசார், மா நகர சபை வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு