மே தினச் செய்தி

உழைக்கும் மக்களின் உதிரம், வியர்வை மற்றும் உயிர்த் தியாகங்கள் மீதான பயணத்தின் வரலாற்றுப் பதிவாக 138வது உலகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

இம்முறை அதனை எமது தொழிற் சூழல்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் முக்கியமானதொரு தருணத்திலேயே கொண்டாடுகிறோம்.

எனினும் எத்தகைய உடன்படிக்கைகளுக்கு மத்தியிலும் தொழிலாளர் உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் நாங்கள் செயற்படவில்லை. உழைக்கும் மக்களுடனான உரையாடல்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தொழிற்சூழலை முடிவு செய்கிறோம்.

இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட உலகில் உள்ள பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்தினாலேயே மீண்டெழுந்தன. இவ்வாறு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் தொடர்ந்து வழங்கிய அர்ப்பணிப்புகளுக்கும் பங்களிப்புகளுக்கும் நான் எனது விசேட மரியாதையை செலுத்துகிறேன். இதன் மூலம் எல்லாத் துறைகளிலும் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டது.

அரச துறை, தனியார் துறை மற்றும் சுயதொழில் போன்றவற்றை பொருளாதார சக்திகளாக வலுப்படுத்த பாடுபடுவோம். அவ்வாறே, எமது நாட்டிலும், விவசாய சமூகத்தினர் நாட்டை உணவில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக முன்னின்று ஏற்படுத்திய மறுமலர்ச்சியை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்.

உழைக்கும் மக்கள் அரசாங்கத்திற்கும், அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுத்த வெற்றிகள் ஏராளம். இந்த வெற்றிகளோடு இக்கட்டான சவால்களை முறியடிக்க உழைக்கும் மக்களின் உறுதியுடன் இன்று நாம் அடைந்துள்ள நிலையைப் பாதுகாக்க பாடுபடுவோம். இதன் மூலம், மிகவும் நிலைபேறானதும் நம்பகமானதுமான எதிர்காலத்தை அடைய நாங்கள் ஒன்றிணைவோம். அதற்கு உழைக்கும் மக்களும், முதலாளிமார் சம்மேளனங்களும், அரசும் முத்தரப்பு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.

வென்றெடுத்த உரிமைகளைப் பாதுகாத்து நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியுடன் ஒன்றிணைவோம்.

தினேஷ் குணவர்தன (பா.உ.),
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 மே மாதம் 01ஆந் திகதி