தற்போதைய பொருளாதார அபிவிருத்தி முயற்சிகளில் பங்கேற்று தாய்நாட்டிற்கு வளம் சேர்க்க முன்வாருங்கள். - புலம்பெயர் இலங்கையர்களிடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள்.

தமது தொழில்சார் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், அந்தந்த துறைகளில் உள்ள புதிய முறைமைகளைப் பின்பற்றுவதன் மூலமும் தாய்நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை புலம்பெயர் சமூகத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் 2024.03.25 ஆந் திகதி இடம்பெற்ற சீனாவில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அடைந்துள்ள உயர் தொழில்முறைத் தரம் குறித்து தாம் பெருமைப்படுவதாக கூறிய பிரதமர், “இலங்கையின் இலவசக் கல்வி முறை மற்றும் ஏனைய வசதிகள் மூலம் அறிவைப் பெற்ற நீங்கள் தாய்நாட்டுக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்றும் கூறினார். எனவே, உங்கள் தாய்நாட்டிற்கு உதவ உங்கள் தொழில் திறன்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள வழிமுறைகளையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் தாய்நாட்டின் சக குடிமக்களுக்கு உதவுவதன் மூலம் நீங்கள் இலங்கையின் அபிவிருத்தி பங்காளிகளாகவும் உங்கள் தொழிலை மேம்படுத்தவும் முடியும்" என்று பிரதமர் இங்கு கூறினார்.

நாம் வெவ்வேறு தலைநகரங்கள் மற்றும் நகரங்களுக்குச் செல்லும்போது, பலரையும் சந்திக்கின்றோம். எனினும் இலங்கையின் எதிர்காலத்திற்கு பங்களிக்கக்கூடிய மக்களை கண்டுகொள்வது சவாலானதாகவே உள்ளது. நாம் அனைவரும் இலங்கையர்கள். சீனாவில் நான் சந்தித்த சிரேஷ்ட நபர் ஒருவர், அரை நூற்றாண்டுக்கு முன்பு அவர்கள் எப்படி சீனாவுக்கு வந்தார்கள் என்பது குறித்து இலங்கை சீன சங்கத்தில் விரிவுரை ஆற்றுவதைக் கேட்டேன். அவரது முழு வாழ்க்கையும் சீனாவிற்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் மனித வரலாற்றிற்கும் பதிவு செய்யப்பட வேண்டிய கதை என்று நான் நினைக்கிறேன்.

சீனா இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. நான் ஏன் மனித வரலாற்றைச் சொன்னேன்? 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இல்லை. அனைத்து திட்டமிடுபவர்கள், அனைத்து ஆராய்ச்சியாளர்கள், அனைத்து பொருளாதார நிபுணர்கள் உலகம் இவ்வாறு மாறும் என்று நினைத்ததில்லை. சீனா இன்று உலகின் பாரிய சக்தியாக மாறி, உலக விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் உள்ளது. எனவே, சீனாவுடனான எமது உறவை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும்.

இலங்கையின் பிரதமராக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறேன். குறிப்பாக நீங்கள் அனைவரும், நான் ஆராய்ச்சி செய்கிறேன், நான் வியாபாரம் செய்கிறேன், பல்வேறு திட்டங்களை கையாளுகிறேன் என்று கூறும்போது, இத்துறைகள் எம் நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள். இலங்கையும் சீனப் பொருளாதாரத்துடன் பல வழிகளில் இணைந்துள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, ஆராய்ச்சி அல்லது சேவைகள் மற்றும் முடிவெடுத்தல், பொருளாதார முகாமைத்துவம், கல்விப் பணிகள் போன்ற புதிய துறைகள் திறக்கப்படுகின்றன.

உங்கள் அனைவர் மீதும் நாங்கள் எதிர்பார்ப்புகளை வைத்துள்ளோம், நீங்கள் எங்கள் தூதுவர்கள். இந்த வலையமைப்பு விரைவாக முன்னேறிச் செல்ல வேண்டும். தகவல் தொழில்நுட்பத் துறை இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வேகமாக முன்னேற வேண்டும். சர்வதேச ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் அரசுக்கு பிரத்தியேகமான புதிய அபிவிருத்தித் துறைகளுக்கு இடையூறாக இருக்கும் விதிமுறைகளை இலங்கை தொடர்ந்து தளர்த்திக் கொண்டிருக்கிறது.

தற்போது, எமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக பாதுகாப்புத் துறையை தவிர மற்ற துறைகளில் விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன. புதிய தகவல்தொடர்பாடல் துறைகளுக்கு நாட்டை வழிநடத்த உங்களை அழைக்க இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறேன். மற்ற நாடுகளை விட சீனா எப்படி வேகமாக முன்னேறியது என்பது கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். இந்த நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்பதால், ஆசிய நாடுகளாக மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு நாம் அனைவரும் பங்களிக்க வேண்டும்.

உங்களில் பலர் பல ஆண்டுகளாக சீனாவில் வாழ்ந்திருக்கலாம். ஆராய்ச்சித் துறை முக்கியமானது. இலங்கையின் பல இடங்களில் இருந்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க வருபவர்கள் அனைவரும் தாய் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக, ஒத்துழைப்பின் புதிய துறைகளில் பிரவேசித்து சீனாவின் புதிய வளர்ச்சித் துறைகளைப் பற்றி ஆராயுங்கள். சீனா தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. நாங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் பெரும் தேசமாக வளர்வார்கள். கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தியில் நாம் சீனாவுடன் மிகவும் முக்கியமான உறவைக் கொண்டுள்ளோம்.

இப்போது நாம் திட்டமிட்டுள்ளபடி இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தினால், இது சிங்கப்பூரையும் தாண்டி ஒட்டுமொத்த சமுத்திர மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் எம்மை அழைத்துச் செல்லும் சீன முதலீடு. இரண்டாவது முக்கியமான சீன முதலீடு அபிவிருத்திசெய்யப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகமாகும். ஹம்பாந்தோட்டை பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் ஒரு துறைமுகம். அடுத்த சில தசாப்தங்களில் அம்பாந்தோட்டை ஒரு பெரிய துறைமுகமாக சீனாவின் ஆதரவுடனும் ஏனைய நாடுகளின் ஆதரவுடனும் வளர்ச்சியடையும். மறுபுறம், கொழும்பு துறைமுகம் 500 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் கடந்த 50-60 ஆண்டுகளில் இது ஒரு பெரிய துறைமுகமாக வளர்ச்சியடைந்துள்ளது. எனவே ஒரு துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் பிற புதிய வளர்ச்சிப் பகுதிகளுடன் சேர்ந்து வளர்ச்சியடைய நிறைய காலம் தேவை.

எனவே, சவாலை ஏற்று அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், இதற்கு சீனா அண்மையில் முன்னெப்போதுமில்லாத ஆதரவை வழங்கியது. அரசாங்கம், தனியார் துறை மற்றும் ஏனைய அனைத்து துறைகளும் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும் கூட சர்வதேச வர்த்தகத்திலும் இலங்கையின் அபிவிருத்தியிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் அல்லது ஆராய்ச்சி திட்டங்கள் அல்லது வர்த்தக வட்டாரங்களில் எதுவாக இருந்தாலும், இன்று நீங்கள் பணிபுரியும் துறைகளில் முன்னோக்கிச் சென்று அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மேலும், ஒரு அரசாங்கமாக, நாங்கள் புதிதாகத் தொடங்கியுள்ள திட்டங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள எங்கள் குடிமக்களுடன் சேர்ந்து விரைவான பெறுபேறுகளைக் கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். இன்று, சுற்றுலாத் துறையில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி? அதிக வருமானம் இருந்தால், மக்கள் பயணம் செய்ய விரும்புகிறார்கள். உலகம் முழுவதும் ஓய்வெடுக்க விரும்பும் மக்கள் உள்ளனர். சீன சுற்றுலாப் பயணிகள் இன்று பல நாடுகளின் ஊடாக உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள், சீன சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய இடமாக இலங்கை இருக்க வேண்டும்.

சீனாவில் உள்ள நீங்கள், இளம் தலைமுறையினராக, பல்கலைக்கழகங்களில் உங்கள் நாட்டைப் பற்றி பேசுங்கள், அனைவரையும் நாட்டுக்கு அழையுங்கள், ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் கலந்துகொள்வார்கள். முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள், வர்த்தக வட்டாரங்கள் இந்த புதிய அபிவிருத்தி மையத்தை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய இந்தப் பெரிய சவாலுக்கு உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை அழைக்கிறோம். இது எமது தாய்நாட்டிற்கான ஒரு சவாலாகும். நாம் முன்னேற வேண்டும், இன்னும் நாம் பிரவேசிக்காக பல புதிய துறைகளில் முன்னேற வேண்டும்.

முதலீட்டாளர்கள் வருகைதந்து முன்னேற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பல புதிய துறைகளுக்கான வாயில்களைத் திறக்க முடியும் என்பதை உங்களில் பெரும்பாலோர் எற்றுக்கொள்வீர்கள். இன்று முழு நாடும் எங்களுடன் இணைந்திருக்கும் இந்த முக்கியமான சவாலுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

இந்நிகழ்வில் சீனாவிலுள்ள இலங்கை மாணவர்களும், இலங்கையின் முன்னோடி தொழில்முயற்சியாளர்களும், இலாபகரமான தொழில்களை நிறுவியுள்ள அந்தந்த துறைகளில் உயர் பதவிகளை வகிக்கும் நிபுணர்களும் கலந்துகொண்டனர். பல சீன அமைச்சர்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சினொபெக், ஹுவாவீ உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் தலைவர்கள், எக்சிம் வங்கி, விவசாய வங்கி, சீன துறைமுகம், சீன சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (CIDCA) மற்றும் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த ஆணைக்குழு (NDRC) ஆகியவற்றின் தலைவர்களும், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, பியல் நிஷாந்த, அசோக் பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் சீனத் தலைவர்கள் மற்றும் இலங்கை சமூகத்தினருடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு