சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பு...

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2024.03.27) பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹோலில் இடம்பெற்றது.

சர்வதேச விவகாரங்களில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் நட்புறவு, அமைதி, மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயற்பட இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது. இருதரப்பு உறவுகள், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்தக் கொள்கையின்படி செயற்படுவது இரு நாடுகளுக்கும் சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான திட்டங்களை முன்வைக்கும் பட்சத்தில் உடனடியாக அதற்கு சீனாவின் ஆதரவு வழங்கப்படும் என்றும் சீன ஜனாதிபதி உறுதியளித்தார்.

அரசியல் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா தொடந்தும் ஆதரளிக்கும் என்றும் சீன ஜனாதிபதி உறுதியளித்தார். இலங்கையின் சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமை ஆகியவற்றின் பாதுகாப்பிற்காக சீனா எப்போதும் முன்நிற்கும் என சீன ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இந்த கலந்துரையாடலின் போது சீனாவுக்கு ஆதரவளித்த பிரதமரின் தந்தையின் தலைமுறையினருக்கு சீன ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இலங்கையில் பிரதமரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடனும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சீன ஜனாதிபதி குறிப்பிட்டார்.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போது வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் கடன் மறுசீரமைப்பு வசதிகளை வழங்கியமைக்காக சீன ஜனாதிபதிக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் விளக்கமளித்தார். பாடசாலைக் கல்வி, விவசாயம், சுகாதாரம், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் சமயம் ஆகிய துறைகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வழங்கிய ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, சீனத் தூதுவர் கி சென்ஹொங் (Qi Zhenhong) பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு