’கொரிய மற்றும் இலங்கை பிரதமர்கள் சந்திப்பில் புதிய துறைகளில் கொரிய வேலைவாய்ப்புகள்.’

கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2024.04.04) சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கு பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் என கொரிய பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

விவசாயம், நிர்மாணத்துறை மற்றும் வேறு கைத்தொழில் துறைகளில் தனது நாட்டில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டிருக்கும் தொழிற்படைக்கு மேலதிகமாக, சுகாதார சேவைகள் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கொரியப் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த கால நிதி நெருக்கடியின் பின்னர் மீண்டும் எழுச்சி பெற்றுள்ள இலங்கைக்கு, பரிஸ் கழகத்தின் அங்கத்துவ நாடு என்ற வகையில் எதிர்கால செயற்பாடுகளின் வெற்றிக்காக தமது நாடு எப்போதும் துணை நிற்கும் என கொரிய பிரதமர் தெரிவித்தார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவை, கடற்றொழில் மற்றும் கூட்டு முதலீடு ஆகிய துறைகளில் தற்போது ஈடுபட்டுள்ள திட்டங்களை அவ்வாறே நடைமுறைப்படுத்தும் அதேவேளை, எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கான காலத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொரிய பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மிதக்கும் சூரிய சக்தி நிர்மாணங்களுக்கான இடப்பரப்பை மேலும் அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை கொரியப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கொரிய மக்களும் இலங்கைக்கு விஜயம் செய்வதை மிகவும் விரும்புவதாகவும், உலகின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு ஆதரவளிப்பதாகவும் கொரிய பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

பிரதமர் திணேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக இருந்தபோது கொரிய மொழியை ஒரு பாடமாக உள்ளடக்கிய நடவடிக்கை கொரியப் பிரதமரால் பாராட்டப்பட்டது.

கோவிட் பேரழிவை எதிர்கொள்ளும் வகையில் அளிக்கப்பட்ட ஆதரவு பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்த விடயங்கள் இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் கொரிய பிரதமர் தெரிவித்தார்.

தூதரக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இரு பிரதமர்களும் கலந்துரையாடினர்.

கொரிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களான பியால் நிஷாந்த, அனூப பஸ்குவேல், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் சாவித்ரி பானபொக்க, பிரதமரின் ஊடகச் செயலாளர் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு