கவர்ச்சிகரமான மொழி என்பது வற்றாது ஒடிக்கொண்டிருக்கும் நதி போன்றது... - பிரதமர் தினேஷ் குணவர்தன

உலகை வியக்க வைக்கும் பல்வேறு படைப்பாளிகள் நம்மிடையே உள்ளனர்...

அண்மைக் காலத்தில் அதிக வாசகர்களின் பங்கேற்புடனான ஒரு புத்தக வெளியீட்டினை காண்பதில் மகிழ்ச்சி...

அண்மையில் (2024.02.29) கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்ற பிரதமரின் ஊடகச் செயலாளர் லலித் ரோஹன லியனகே எழுதிய "தரு யதுர" என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்

கவிதையை வளப்படுத்தும் ஒரு படைப்பிலக்கியத்திற்கு தற்காலத்தில் இவ்வளவு அதிகமான வாசகர்கள் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசத்தை உயிர்ப்பிக்கக்கூடிய, தேசத்தை வாழவைக்கக்கூடிய, நமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய உயர்ந்த மனிதப் பண்புகள் நிறைந்த எங்களின் பாரம்பரியத்தைச் எடுத்துச்சொல்லவே இன்று நீங்கள் இங்கு ஒன்றுகூடியிருக்கிறீர்கள். இதுபோன்ற விடயங்களின் மூலம் வரலாற்றை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த முடியும். உலகையே வியக்க வைக்கும் பல படைப்பாளிகள் நம்மிடையே இருக்கிறார்கள். எமது மொழி அப்படியானது. நாட்டு மக்கள் அதை ஒரு உன்னத மொழியாக வளர்த்து, மேலும் சுவாரஸ்யமாக்கி, தொடர்ந்து பேண முடிந்தது. சிங்கள மொழி என்பது தங்கு தடையின்றி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியைப் போன்று அழியாது வாழும் ஒரு கவர்ச்சிமிக்க மொழியாகும்.

அன்று எமது படைப்பாளிகளுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்றவை இருக்கவில்லை. அறுவடை முடிந்ததும், கிராம மக்கள் அனைத்து சடங்குகளையும் செய்து முடித்த பின்னர், யாத்திரை சென்றனர். அந்தச் சமயங்களில் அவர்கள் நாட்டார் பாடல்கள் உள்ளிட்ட படைப்புகளை ரசித்தார்கள். இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக நம் படைப்புகளை நாட்டு மக்கள் வளர்த்து வந்தனர். கலாவெவ, சீகிரியா, யோத கால்வாயின் அற்புதமான நீர்ப்பாசனத் தொழில் போன்றவற்றின் கொடைகள் பற்றிய அற்புதங்கள் தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்டு வந்து, அவை இன்றும் மரியாதையுடன் நினைவுகூரக்கூடிய வகையில், எதிர்கால சந்ததியினருக்கு எழுத்து மூல வரலாறாக வழங்கப்பட்டிருக்கின்றது.

ரோஹனவின் அறிவு மற்றும் அனுபவம் போன்று படைப்பாற்றலும் இவ்வாறு நாட்டுக்கு வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். "தரு யதுர" கவிதைகளை நினைக்கும் போது, அன்று நம் கவிஞர்கள் கவிதை மூலம் ஏற்படுத்திய மாபெரும் சுதந்திர எழுச்சிப் போராட்டம் நினைவுக்கு வருகிறது. நம் கவிஞர்களை எழுச்சியூட்டிய மாபெரும் மொழிப்போர். ஒரு மொழி புள்ளிவிவரங்களில் தங்கியிருக்கும் ஒன்றல்ல. எமது முன்னோர்களின் தொடர்ச்சியான தேசியப் பொறுப்புகளினாலேயே சிங்கள மொழியின் இருப்பை பேண முடிந்தது. அந்தப் பெரிய தேசியப் பொறுப்பிற்கு மகாசங்கத்தினர் தலைமை தாங்கினர்.

“தரு யதுர” பற்றி கருத்துரைப்பதற்காக ஒரு தளம் அமைக்கப்பட்டிருந்ததுடன், பேராசிரியர் பாத்தேகம ஞானிஸ்ஸர தேரர், பேராசிரியர் கமல் வலேபொட, பேராசிரியர் காமினி ரணசிங்க, இலக்கியவாதி சுனில் சரத் பெரேரா, ஹெல ஹவுலே தலைவர் ஸ்ரீநாத் கனேவத்த, மேலதிக செயலாளர் அனுஷா கோகுல, சீனாவின் பீனின்ஸ் ஊடகக் குழுமத்தின் எமி யங், எழுத்தாளர் கே. எம். ஐ. சுவர்ணசிங்க, விரிவுரையாளர் மனிஷா துக்கன்னரால ஆகியோர் அங்கு சுருக்கமான கருத்துக்களை வழங்கினர்.

அவுகன ரஜமஹா விஹாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அரசாங்க அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு