பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு.

பொலிஸ் சிறப்புப் படையின் கட்டளை அதிகாரி, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (25) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

விசேட பணிக்குழுவின் 13வது கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர், மூத்த டிஐஜி வழக்கறிஞர் வருண ஜெயசுந்தரவுக்கும் பிரதமருக்கும் இடையிலான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும். சிறப்புப் பணிக்குழுவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்காக மூத்த டிஐஜி, வழக்கறிஞர் வர்ண ஜெயசுந்தரவுக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பிரதமரின் ஊடகப் பிரிவு

புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அழகியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது கணக்கியல் பாடங்கள் பாடசாலை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படமாட்டாது

பரீட்சை வினாத்தாள்கள் வெளியானதால் இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று (23) காலை பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் எதுவும் முன்வைக்கப்படவில்லை. எனவே, கல்வித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மீளாய்வின் ஊடாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு 2026 முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் சரியான முறையில் திருத்துவதைத் தவிர அவற்றை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்த எந்த எண்ணமும் எமக்கு இல்லை. இந்த பாடங்கள் கல்வித் துறையில் இருக்க வேண்டும் என்றே நாம் நினைக்கின்றோம்.

இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தயாராகி வருகின்றோம்.

ஆசிரியர் பயிற்சிக்கு அதிக கவனம் செலுத்த நாம் எதிர்பார்க்கிறோம். பாடசாலைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மூலம் பாடசாலைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கவும் மற்றும் பாடசாலை பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் குறித்தும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். பாடசாலைக்குள் நுழையும் ஒரு பிள்ளைக்கு உலகளாவிய கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.

கல்வி சீர்திருத்த முன்மொழிவுகள் மூலம் பாடத்திட்டம் திருத்தப்படுகிறது. அதற்கேற்ப, பாடசாலை மாணவர்கள் கற்கின்ற பாடங்களின் எண்ணிக்கையை மதிப்பீடு செய்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும் வகையிலேயே பாடத்திட்டத்தை திருத்தி வருகிறோம். பரீட்சையை மையப்படுத்திய முறையை விட பிள்ளைகளுக்கு பாரமாக இல்லாத நடைமுறைக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

உயர் கல்வியைப் பொறுத்தவரை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி ஆகிய துறைகளில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முயற்சிக்கிறோம். அங்கு, நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் தொழில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.

அளவுகோல்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 7 இலட்சம் பாடசாலை பிள்ளைகளுக்கு காலணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இடைநிறுத்தப்பட்டுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகளை விரைவில் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு

பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க தேவையான சட்ட நடவடிக்கைகள் அடுத்த மூன்று மாதங்களில்...

பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சட்ட வரைவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான தற்போதைய சட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் (22) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு வேடுவ இன மக்களின் வரலாற்றுப் பெறுமதியைப் பற்றி விளக்கிய பழங்குடியின தலைவர் ஊருவரிகே வன்னியளத்தா, அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி தயாரிக்கப்பட்ட பழங்குடியின உரிமைச் சட்டம் மற்றும் பழங்குடியினர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விளக்கிய பழங்குடியின தலைவர், கடந்த அரசுகள் சில நடவடிக்கைகளை எடுத்தாலும், தமது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

வேடுவ இன மக்கள் நாட்டின் வரலாற்றுச் சொத்து என்றும், அவர்களைப் பாதுகாப்பதும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் இன்றியமையாதது என்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.

பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை சுற்றாடல் அமைச்சு துரிதமாக முன்னெடுக்கும் என சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.

அது தொடர்வில் நடைமுறையில் உள்ள சட்ட நிலைமைகள் மற்றும் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சுற்றாடல் அமைச்சு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விளக்கினர்.

பழங்குடியினர் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், ஏனைய அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் பழங்குடியினருக்கும் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார். பழங்குடியின மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்திய பிரதமர், அடுத்த மூன்று மாதங்களில் பழங்குடியினரின் உரிமைகளை வென்றெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கூறினார்.

இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் சுகத் பலகல்ல, வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சூரியபண்டார ஆகியோர் உட்பட சுற்றாடல் அமைச்சு மற்றும் மாற்றுக் கொள்கை மையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்.

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது.

தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு TVET இனை பிரதான கல்வியுடன் இணைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

வேலைத்தளங்களில் பாலின சமத்துவம் என்ற சிக்கலுக்குரிய விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான தலையீடு மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்புகளின் தேவை குறித்தும் இரு தரப்பும் தமது அங்கீகாரத்தை சுட்டிக்காட்டியது.

கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இலங்கை மற்றும் உலக வங்கியின் பரஸ்பர உறுதிப்பாடு இந்த கலந்துரையாடலின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது.

நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் டேவிட் சிசிலன் உள்ளிட்ட உலக வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை அரசின் சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியக வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான (இரு தரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா, வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசியா மற்றும் மத்திய ஆசிய பிரிவிற்கான பணிப்பாளர் லஷின்கா தம்முலுகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இடம்பெறும் இரண்டு நாள் விவாதத்தின் முதல் நாளில் (21) கருத்து தெரிவித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

பாராளுமன்றம் கூடிய நாளிலிருந்து இந்த எதிர்க்கட்சியின் பொறுப்புக்கள் என்ன என்றும், இந்த எதிர்க்கட்சி எந்த நோக்கத்திற்காக பேசுகின்றது என்றும் நான் சிந்தித்தேன். அவர்களின் திட்டம் என்ன என்பதை புரிந்துகொள்ள முயற்சித்தேன். எதிர்க்கட்சி என்ற விடயத்தில் அவர்களுக்கு எந்தவொரு பாரதூரமும் தெரியவில்லை. எந்தவொரு காரணமும் இன்றி கூச்சலிடுகின்றார்கள். பாராளுமன்றத்திற்கு இருக்கும் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதம் எதற்காக என்பது குறித்தும் புரிந்துகொள்ள முடியாத ஒரு எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.

இந்த நாட்டிற்கு தேவையான பரிணாமத்திற்கு இந்த நாட்டு மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதே Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் ஊடான எமது பிரதான நோக்கமாகும். பரிணாம மாற்றத்தை மேற்கொள்வதை அரசாங்கத்திற்கோ, அரச அதிகாரிக்கோ தனியாக மேற்கொள்ள முடியாது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மக்களின் இணக்கப்பாடு அவசியமாகும். மேற்கொள்ளப்பட வேண்டிய பரிணாமம் எவை? அந்த பரிணாமம் எவ்வாறு அமைய வேண்டுமென்ற தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்குள் கருத்தாடல் அவசியமாகும். எமது அரசாங்கம் மக்கள் மயமான அரசாங்கமாகும். மக்கள் மயமான அரசாங்கம் செயற்படுவதில் ஒரு கலாசாரம் உள்ளது. அதில் மக்களும் பங்குகொள்வார்கள். மக்கள் எதிர்ப்பு அரசாங்கத்தினுள் இருந்தவர்களுக்கும், மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கும் அதனை புரிந்துகொள்ள முடியாமை குறித்து நான் ஆச்சரியப்படப் போவதில்லை. சட்டங்களை அமுல்படுத்தி கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் அல்ல Clean Sri Lanka வேலைத்திட்டம்.

இந்த நாட்டிற்காக நாட்டின் முதலாளிமார்கள், வர்த்தகர்கள் அர்ப்பணிப்புகளைச் செய்ய விருப்பத்துடன் உள்ளனர். இது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும். இதுவரைக் காலமும் இருந்த அரசாங்கங்கள் வர்த்தகர்கள் அல்லது முதலாளிமார்களை சமூகத்திற்காக பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமது பையை நிரப்பிக்கொள்ளவே பயன்படுத்தினர். அவ்வாறானவர்களுக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியாது.

எதிர்க்கட்சியில் சிலர் இந்த வேலைத்திட்டத்தை விமர்சித்துக்கொண்டு நல்லவற்றிற்காக முன்னிற்பதாக கூறுகின்றார்கள். அவ்வாறானவர்களுக்கு ஒரே நிலைப்பாட்டில் கூட இருக்க முடியவில்லை.

ஆசிரியர்களை மண்டியிடச் செய்த, தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களை தாம் விரும்பிய பாடசாலைகளுக்கு சேவையில் அமர்த்த முயற்சித்த, பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்ப்பதற்கு கடிதங்களை வழங்குவதை மாத்திரம் கடமையாகக் கொண்ட யுகத்தை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். தொடர்ந்தும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Clean Sri Lanka விவாதத்தின் போது தெரிவித்தார்.

பிரதமர் ஊடக பிரிவு

சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் கலாசார நிகழ்வு பிரதமர் தலைமையில் கொழும்பில்.

சீன மக்கள் குடியரசின் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன கலாசார மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விழா நிகழ்வில் முன்வைத்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்ததாக, Henan Art Troupe மற்றும் Sichuan Chef Team ஐ சேர்ந்த 34 பேர் கொண்ட தூதுக்குழுவும் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. ஜனவரி 20 முதல் 23 வரை "சீன உணவு விழா" மற்றும் "துறைமுக நகர சீன கலாசார இரவு" நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன கலாசார அம்சங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி உட்பட இலங்கையர்கள் மற்றும் சீனப் பிரஜைகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு.