’பலமான எதிர்காலத்திற்கான முன்னுரை - 2024’ நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்கேற்புடன் இன்று (15) கொழும்பிலுள்ள இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஐந்து முக்கிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, அஸ்வெசும வேலைத்திட்டம், ‘உரித்து’ காணி உறுதிகள் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், மலையக தசாப்தம் போன்ற வேலைத்திட்டங்கள் குறித்தும் அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் கலந்துகொண்ட அரச அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இங்கு உரையாற்றினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் நீங்கள் பல்வேறு அனுபவங்களின் மூலம் முன்னுக்கு வந்தவர்கள். இங்கு அனுபவம் வாய்ந்த அரச அதிகாரிகள் உள்ளனர். அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் தீர்மானங்களையும் திட்டங்களையும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துகின்ற ஒரு அணியினர் என்பதையும் கூற வேண்டும். ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவத்தின் ஊடாக இன்று நாடு முன்னோக்கி வந்துள்ளது. அரச அதிகாரிகள் என்ற வகையில், நாடு ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்பதில் பெருமை கொள்ளலாம்.

ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இன்று நாட்டிற்கு வருகின்றனர். முன்பைப் பார்க்கிலும் சுற்றுலா பயணிகள் கிராமப்புறங்களுக்கு அதிகளவில் செல்கின்றனர். அவர்களுக்கும் நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச இயந்திரத்தின் ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. கிராமத்தின் பிரச்சனைகளை தீர்க்க உங்கள் ஆதரவு தேவை. சுமுகமான முறையில் பொது நிர்வாகத்தை கொண்டுசெல்லும் பொறுப்பும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச நிர்வாகத்தில் பங்குதாரர்களாக இருப்பதால் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர். மோதல்கள் மற்றும் வன்முறைகள் இன்றி வன்முறையற்ற முறையில் நிர்வாக முறைமையை இயக்குவதற்கு பிரதேச செயலாளர்கள் கடமைப்பட்டுள்ளனர். 1971 கிளர்ச்சியின் போது, பிரதேச செயலாளர்கள் தங்களது கடமைகளை துறந்து செல்ல வேண்டியிருந்தது. அது தான் உண்மை. இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன் உயிரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அன்று சேருவில பிரதேச செயலாளர் படுகொலை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன.

அமைதியான பயணத்திற்கும் மோதல் பயணத்திற்கும் உள்ள வித்தியாசம் அரச உத்தியோகத்தர்களுக்கு தெரியும். இது ஒரு நாட்டின் சேவைகளைப் பேணுவதற்கும் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வதற்குமான பயணத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்நாட்டை படிப்படியாக கட்டியெழுப்புவதற்காக மாவட்ட, பிரதேச செயலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற வகையில் நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அந்த கலந்துரையாடல்களின் மூலம் படிப்படியாக தீர்த்து வைப்போம் என நம்புகிறோம். இந்த அரசாங்கப் பொறிமுறையில் உங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகளை நேர்மையாக நடைமுறைப்படுத்தும் வலிமையையும் உறுதியையும் வளர்த்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு