உத்தியோகபூர்வ விவகாரங்களில் முத்திரை பயன்படுத்தும் நடைமுறை நீக்கப்பட வேண்டும்... - பிரதமர் தினேஷ் குணவர்தன.

மஹரகம, பிரகதிபுரவில் 21.04.2024 அன்று இடம்பெற்ற குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்-

இன்று ஆரம்பிக்கப்படும் இந்த மானியத் திட்டத்தினூடாக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பல்வேறு பிரச்சினைகளால் அவதியுறும் குறைந்த வருமானம் பெறுவோருக்கும், பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு வேளையேனும் உணவுப் போசனையை வழங்குவதே அரசின் நோக்கம்.

நாங்கள் மிகவும் கடினமான ஒரு காலத்தை கடந்துவந்துள்ளோம். சில வீடுகளில் மண்ணெண்ணையைப் பெற்றுக்கொள்ள வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. அந்த நாட்களையும் வாரங்களையும் மிகுந்த சிரமத்துடன் கழித்ததன் பின்னர், அரசாங்கம் என்ற வகையில் எங்களால் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடிந்தது. அந்தச் சுமையை முதலில் தாங்கியவர்கள் விவசாயிகள்தான். அந்தச் சுமையை விவசாயிகள் சுமந்ததால் இலங்கைக்கு மேலதிக அறுவடை கிடைத்தது. நாம் உணவில் தன்னிறைவு அடைய முடிந்ததை உணர்ந்து, வெளிநாடுகள் மீண்டும் எமக்கு உதவி செய்ய முடிவு செய்தன.

முதலில் எமது நாட்டில் விளையும் அரிசியை எமது நாட்டின் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது முடியாத பட்சத்தில் தான் வெளி நாட்டிலிருந்து அரிசியை கொண்டுவந்து சந்தையில் வாங்க முடியும். சொந்தக் காலில் நிற்கக் கூடிய நாடாக, உணவில் தன்னிறைவு பெற்ற நாடாக, நாட்டின் அனைத்து மக்களுக்கும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய நம்பகமான பொருளாதார பலத்தை வழங்குவதே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த குடியிருப்பாளர்களை வெளியேற்ற அரசாங்க அதிகாரிகள் முடிவு செய்த காலம் இருந்தது. மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் நானும் இதில் தலையிட வேண்டியிருந்தது. பொலீஸாரை வெளியேறச் சொன்னோம். அது எளிதில் முடிந்துவிடவில்லை. மணிக்கணக்கில் வாக்குவாதம் செய்தனர். அங்கிருந்தவர்களில் அது பற்றி அறிந்த ஒரு சிலரே என்னைப்போல் வயதானவர்களாக இன்று எஞ்சியுள்ளனர். நாட்டின் சட்டம் எதுவாக இருந்தாலும், நிலத்தின் சட்டம் ஒரே மாதிரியாக இருந்ததால், அரச காணி, நகர அபிவிருத்தி அதிகாரசபை காணி, வீடமைப்பு அதிகாரசபை காணிகளில் நீண்ட காலம் உள்ள சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் மூலம் காணி உரிமையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய தொகையை கட்டம் கட்டமாக செலுத்தியேனும் இந்த பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நிலங்களின் மதிப்பு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய மதிப்பைப் போல நானூறு மடங்கு அதிகரித்துள்ளது. ரூபாயின் மதிப்பு உயர்கிறது. டொலரின் விலை சரிகிறது. அன்று எத்தனை முறை ஒரு கடிதத்திற்கு முத்திரை ஒட்டினோம் என்பது இங்குள்ள தாய்மார்களுக்குத் தெரியும். அப்போது பத்து சதம் முத்திரையுடன் தபால் அனுப்பினோம். இன்று எவ்வளவு மதிப்பு உயர்ந்துள்ளது என்று பார்த்தால் இன்று கடிதம் அனுப்ப அது போல பல மடங்கு பெறுமதியான முத்திரை ஒட்ட வேண்டும். கையொப்பம் இடுவதாயின் எத்தனை ரூபா பெறுமதியான முத்திரைகள் வேண்டும்? இந்த முத்திரைக் கட்டணத்தை இரத்து செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அனைவருக்கும் அடையாள அட்டை உள்ளது. ஏன் முத்திரைகள்? இக்குறைபாடுகளை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும். நிலத்தினது விலை பெருமளவு அதிகரித்துச் செல்லும் நிலையில், நில உரிமையை பெற்றுள்ள நீங்கள் அதை எதிர்கால பிள்ளைகளுக்காக பாதுகாக்க வேண்டும். எப்படியாவது அதைப் பாதுகாத்து, வளப்படுத்தி, புதிய வருமான ஆதாரங்களைச் சேர்க்கக்கூடிய தொழில்வாய்ப்புகளுக்கு எதிர்கால தலைமுறையை வழிநடத்துங்கள்.

கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜயசிறி, மஹரகம பிரதேச செயலாளர் தில்ருக்ஷி வல்பொல, முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு