வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான விசேட ஆணைக்குழுவொன்றை உள்ளடக்கிய மகளிர் உரிமைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில்... - பிரதமர் தினேஷ் குணவர்தன

கொழும்பு மாவட்ட மகளிர் தின நிகழ்வு இன்று (2024.03.21) கொழும்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மாவட்டத்தின் சிறந்த தொழில்முயற்சியாளருக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கிவைத்தல், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றன.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-

நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதே அரசாங்கம் என்ற வகையில் எமது முக்கிய முயற்சியாகும். ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், பெண்களுக்கான விசேட சட்டம் அடுத்த மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இலங்கை வரலாற்றில் பெண்களுக்கான முதலாவது ஆணைக்குழுவை உள்ளடக்கிய பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் பெண்கள் உரிமைகள் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பல விடயங்களை உருவாக்கக்கூடிய எதிர்காலத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று நாம் நம்புகிறோம்.

உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமைகள், பெண்களின் சாதனைகள், பெண்களின் எதர்பார்ப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச மகளிர் தினம் மிகவும் முக்கியமானது. இது எமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் புதிய தைரியத்தையும் புதிய நம்பிக்கையையும் தருகிறது. புதிய எதிர்காலத்தை எதிர்கொள்ள பெரும் நம்பிக்கையை உருவாக்குகிறது. எமது பெண் தலைமுறையினரின் திறமைகள் மற்றும் உற்பத்திகள் மூலம் புதிய வருமான வழிகளை உருவாக்குவது முக்கியம்.

புத்தாண்டு நெருங்குகிறது. சிங்கள தமிழ் புத்தாண்டில் எமது பெண்கள் எவ்வளவு தைரியமாக இணைந்து செயற்படுகின்றனர். உங்களில் பலரது வீடுகளிலும், எங்கள் பகுதிகளிலும், சந்தைகளிலும் நீங்கள் உற்பத்தி செய்யும் பெரும்பாலான உற்பத்திகளை நாங்கள் பார்க்கும் காலம் இது.

கடந்த காலங்களில் விடுபட்ட அபிவிருத்திப் பணிகளை புதிதாக ஆரம்பிக்க அனைவரிடமும் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தக்கூடிய ஆண்டாக புதிய வேலைத்திட்டத்திற்கு இந்த வருடம் ஜனாதிபதி நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார். ஒத்துழைப்போடும் ஒற்றுமையோடும் எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அரசு மட்டுமின்றி, அனைவரும் ஒன்றிணைந்து புதிய உற்பத்திகளை உருவாக்குவதற்கு, இந்த ‘லிய அபிமன்’ நிகழ்ச்சித்திட்டம் ஒரு உந்து சக்தியாக அமையும்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி மேஜர் பிரதீப் உடுகொட, பிரேமநாத் தொலவத்த, ஜகத் குமார, யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி, உத்தியோகத்தர்கள், கொழும்பு மாவட்ட மகளிர் அணி பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு