பிரதமரின் தென்கொரிய விஜயம் நாட்டின் பல துறைகளுக்கு பல்வேறு நன்மைகள்....

தென் கொரிய குடியரசின் கியோங்சங்புக்-டு (Gyeongsangbuk-du) மாகாண ஆளுநர் லீ சியோல் வூ அவர்கள் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை 2024.04.03 அன்று கியோங்சங்புக்-டு ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.

கல்வி மற்றும் உயர்கல்வி, விவசாயம், கடற்றொழில், பெண்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கு பெருமளவு உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன், மேலும் பல திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், உயர்கல்வி பெறாமல் பாடசாலைலை விலகிச் செல்லும் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான நுழைவு வாய்ப்புகளை அதிகரித்தல், புலமைப்பரிசில் வாய்ப்புகளை அதிகரித்து நாட்டில் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கடற்றொழில், நிர்மாணத்துறைகளில் முதலீடுகள், குறிப்பாக கடற்றொழில் துறைக்கு புதிய தொழில்நுட்பம், அறுவடைக்குப் பிந்தைய சேதத்தைத் தணிக்கும் ஆலோசனை, பெண்களை வலுவூட்டும் நடவடிக்கைகளுக்கான நேரடி மற்றும் மறைமுக ஏற்பாடுகள், அறுவடை காலத்துக்கு மட்டும் தேவையான மனித வளங்களை குறுகிய கால அளவில் வழங்குவது உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்,

பிரதமர் என்ற வகையில் இந்த மாகாணத்தின் புதிய பொருளாதார வளர்ச்சியின் மிக வெற்றிகரமான கதையைப் பார்க்க எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக ஆளுநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநரின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த முக்கியமான தன்னார்வ அமைப்பு மற்ற நாடுகளுக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பல வறிய பகுதிகளுக்கு, குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி மேம்பாடு, கிராமிய மக்களின் நலன்களுக்காக மிகவும் நெருங்கிய உறவை ஏற்படுத்திய சைமோல் மன்றம், மற்றும் ஆளுநர் அவர்களே இலங்கைக்கு வந்து இந்த முன்மொழிவுக்கு கையொப்பமிட்டதுடன், தற்போது அது நடைமுறைப்படுத்தும் கட்டத்தில் உள்ளது. நாங்கள் மீண்டும் ஒருமுறை இந்த விசேட துறைகளில் தலைமைத்துவத்தை வழங்கும் உங்களுக்கும் சைமோல் மன்றத்திற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல நாம் எதிர்பார்க்கிறோம். மேலும், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அன்பான வாழ்த்துக்களை நான் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று பல துறைகளில் தொடர்புடைய புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய முதலீடுகள் தொடர்பாக கொரியாவுடன் நெருங்கிப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று நாம் நம்புகிறோம். அதற்காக நான் பிரதமர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உங்கள் மாகாணத்திற்கு விஜயம் செய்திருக்கிறேன். எனவே இது இலங்கைக்கு மிக முக்கியமான விஜயம் மற்றும் வாய்ப்பு.

ஜியோங்சங்பக்-டுவின் முக்கிய அதிகாரிகள், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜாங்க அமைச்சர்களான பியால் நிஷாந்த, அனூப பஸ்குவேல், பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ஜகத் குமார, ராஜிகா விக்கிரமசிங்க, முதிதா சொய்சா, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் சாவித்ரி பானபொக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு