“கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கலாநிதி நந்தா மாலனியை கௌரவிக்கும் விதமாக, இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஆகஸ்ட் 22ஆம் திகதி வானொலி கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் நடைபெற்றது.
நம் நாட்டின் இசைத் துறைக்கும், இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்திற்கும் கலாநிதி நந்தா மாலனி அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக அளித்த பங்களிப்பை கௌரவிப்பதே இந்த நிகழ்வின் நோக்கம். அவரை கௌரவிக்கும் விதமாக, வானொலி கூட்டுத்தாபனத்தின் ஒரு கலையரங்கம் அவரது பெயரால் திறந்து வைக்கப்பட்டது.
அத்தோடு, வானொலி கூட்டுத்தாபன வளாகத்தில் கலாநிதி நந்தா மாலனியின் உருவப்படமும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. வானொலி கூட்டுத்தாபனத்தின் 9வது கலையரங்கமே "கலாநிதி நந்தா மாலனி கலையரங்கம்" எனப் பிரதமர் மற்றும் கலாநிதி நந்தா மாலனி அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
"அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சிறுமி "சிறுவர் மேடை" நிகழ்ச்சியில் பாடல்களைப் பாட இந்த வானொலி கூட்டுத்தாபனத்திற்கு வந்தார். அங்கு அவர் முதன்முதலாக ’துர பவனே மே குளு குவனே’ என்ற பாடலுக்கு குரல் கொடுத்தார். அவருடைய தனித்துவமான குரலின் திறமையைக் கண்டறிந்த கலாநிதி பண்டித் அமரதேவ அவர்கள், இலங்கையின் முதலாவது வர்ணத் திரைப்படமான ’ரன்முது தூவ’ திரைப்படத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். அந்தக் கிராமியச் சிறுமி, ’கலன கங்ககி ஜீவிதே தயாலு லோகயே’ என்ற அற்புதமான பாடல் வரிகளுக்கு இந்த வானொலி கூட்டுத்தாபன கலையரங்கத்தில் தனது குரலை இணைத்தார்.
"அன்று அந்தப் பாடலைப் பாடிய சிறுமியின் பெயரில் இன்று வானொலி கூட்டுத்தாபனத்தில் ஒரு கலையரங்கம் திறக்கப்படுவது ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகும். அவரே தேசத்தின் பெருமைக்குரிய பாடகி கலாநிதி நந்தா மாலனி.
"நந்தா மாலனி என்ற பாடகி நமது இசைத் துறையில் வெறுமனே ஒரு பெயர் மட்டுமல்ல. மாறாக, ’ரன்முது துவ’ திரைப்படத்தில் தொடங்கிய தனது இசைப் பயணத்தில், காதல், பிரிவின் துயரம் போன்ற வழக்கமான தலைப்புகளுக்கு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளாது, ஒடுக்குமுறை, ஊழல், வன்முறை, சமூக அநீதி போன்ற சமகாலப் பிரச்சினைகள் குறித்தும் தனது துணிச்சல்மிக்கக் குரலில் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் ஒருபோதும் தயங்கவில்லை.
"கலாநிதி நந்தா மாலனியின் குரல் இந்த நாட்டிற்கு ஒரு தனித்துவமான, அருவமான கலாச்சாரப் பொக்கிஷமாகும். நீங்கள் எங்களுக்கு வழங்கிய அந்த ரசனை, உங்கள் பாடல்கள் மூலம் சிந்திக்கத் தூண்டிய விதம், இந்த நாடு இக்கட்டான சூழலில் இருந்தபோதும் பாடல்கள் மூலம் எங்களை உற்சாகமூட்டிய உங்களின் உன்னத சேவைக்கு நன்றி கூற இந்த சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய பாதேகம ஞானேஸ்வர தேரர் உள்ளிட்ட மரியாதைக்குரிய மகா சங்கத்தினர், சமன் மாக்சிமஸ் அடிகளார், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில்சேனவி, சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, பேராசிரியர் சுனில் ஆரியரத்ன, இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேராசிரியர் உதித கயாஷான் குணசேகர உள்ளிட்ட பல மூத்த கலைஞர்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப்பிரிவு