உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளின் கல்வி தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பிள்ளைகளின் கல்வி தடைப்படாது, அதனை இடைவிடாது தொடர்வதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026 ஜூன் 12, கொழும்பில் இடம்பெற்ற ’ONE Tata Sri Lanka Cyclone Ditwah and Floods Response Programme’ நிகழ்வின் கீழ், ’திட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

Tata குழுமம், ChildFund மற்றும் DIMO ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த ’Hope in a Backpack’ நிகழ்ச்சியின் கீழ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா ஆகியோர் மாணவர்களுக்குப் பாடசாலைப் பைகளையும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.

இதன்போது உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா, இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவையும், இரு நாடுகளின் அபிவிருத்தி குறித்த பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இவ்வாறான வேலைத்திட்டங்கள் நெருக்கடியான காலங்களில் அரசாங்கங்கள், அபிவிருத்திப் பங்காளிகள், மனிதாபிமான அமைப்புகள், தனியார் துறை மற்றும் சமூகங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன எனக் குறிப்பிட்டார். ’திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டுத் தகுந்த ஆதரவை வழங்க வேண்டியது அவசியமென்றும், எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குச் சமூகங்களை பலப்படுத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் உரையாற்றிய பிரதமர் , "எத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டபோதிலும், பிள்ளைகளின் கல்வி தடையின்றித் தொடர்வதை உறுதிசெய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்" என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா, DIMO நிறுவனத்தின் தலைவர் திரு. ரஞ்சித் பண்டிதகே, DIMO, TATA மற்றும் ChildFund ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு