காலநிலை நடவடிக்கை கருத்தரங்கு 2025 நிறைவு விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை கருத்தரங்கின் நிறைவு விழா 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஒக்டோபர் 1ஆம் திகதி கலந்துகொண்டார்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இக் காலநிலை நடவடிக்கை கருத்தரங்கானது (CAS 2025), விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அனுசரணையில், காலநிலை-நெகிழ்தன்மை ஒருங்கமைக்கப்பட்ட நீர் மேலாண்மை திட்டம் (CRIWMP) மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து நடத்தியது.

"வெவ்கம் புபுதுவ" எனும் ஏழு வருடத் திட்டமானது, பசுமை காலநிலை நிதியத்தின் ஆதரவுடன், ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய வறண்ட வலயத்தைச் சேர்ந்த சிறுபோக விவசாயிகளின், காலநிலை மாற்றம் மற்றும் கடுமையான நிலைமைகளுக்குத் தாக்குப் பிடிக்கின்ற சக்தியைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டதாகும். CAS 2025 இன் தொனிப்பொருள், "காலநிலை மாற்றங்களைத் தாக்குப்பிடிப்பதற்கான ஒருங்கிணைந்த வள முகாமைத்துவம், சமூகங்களை மாற்றுதல் மற்றும் கொள்கைகளை வடிவமைத்தல்" என்பதாகும்.

இந்தக் கருத்தரங்கு, இலங்கை முழுவதிலும் உள்ள விவசாயம் (பயிர்கள், கால்நடைகள், கோழி வளர்ப்பு, மீன்வளர்ப்பு), குடிநீர், வானிலை, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து, நீர் மற்றும் காலநிலை ஆகியவற்றுக்குத் தாக்குப் பிடிக்கும் திறன் அபிவிருத்தி மற்றும் கல்வித் தகைமைகளை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டுத் தளத்தை உருவாக்கி இருக்கின்றது.

பேராதனைப் பல்கலைக்கழக கல்விமான்களின் பங்களிப்புடன், காலநிலைக்கு முகம் கொடுப்பதற்கான ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தின் (CRIWMP) மூலம் கண்டறியப்பட்ட முக்கியமான கற்கைகள், மற்றும் ஆய்வுகள் பற்றிய கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அபிவிருத்திப் பயிற்சியாளர்களுக்கு நேரடியான தொடர்புகளை வெளிப்படுத்தவும், பிரசுரிக்கவும் இது ஒரு சரியான வாய்ப்பை வழங்கியது.

இந்நிகழ்வில் முக்கிய உரையை ஆற்றிய பிரதமர், புதிய தேசிய காலநிலை நிதிக் கேந்திரோபாயத்தின் 2025–2030 கீழ் காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, கிராமப்புற அபிவிருத்தி, காலநிலை சார்ந்த மதிநுட்பம் மிக்க விவசாயம், சுற்றுச்சூழல் மீளமைப்பு, அனர்த்த முன்னேற்பாடு மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய துறைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். இக்கருத்தரங்கின் நுண்ணறிவுகளைத் தேசியக் கொள்கைகள் மற்றும் சமூக மட்டத் தீர்வுகளாக மாற்றி அமைப்பதற்கான கூட்டு நடவடிக்கைக்குப் பிரதமர் அழைப்பு விடுத்ததோடு, இலங்கையின் முயற்சிகள் உலகளாவிய காலநிலை தாங்குதிறனுக்கான ஒரு முன் மாதிரியாகச் செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் திரு. சுசில் ரணசிங்க, ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி திருமதி. Asuza Kubota, பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சப்புதந்திரி, தேசியத் திட்டப் பணிப்பாளர் திரு. சந்தன எதிரிசூரிய, உத்தியோகத்தர்கள், கல்விமான்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு