சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம்
அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட குழுவினருக்கும் விசேட சலுகையையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்காது என்றும், சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்று (ஒக்டோபர் 08) பாராளுமன்ற விவாதத்தின்போது LGBTQ+ குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
சமூகத்தின் உணர்வுப்பூர்வமான விடயங்களை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம். அத்தகைய விடயங்களை முன்வைக்கும்போது நாம் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். இதனால் சிரமப்படும் ஒரு சமூகம் இருக்கவே செய்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவானதாகும், நாம் எந்தவொரு குழுவிற்கும் விசேட சலுகையோ அல்லது விசேட ஊக்குவித்தலையோ பெற்றுக் கொடுக்கப்போவதில்லை, எனத் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,
சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துக் கௌரவ நீதி அமைச்சரும் அமைச்சும் ஆராய்ந்து வருகின்றன. அத்தோடு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குழந்தைகள் இத்தகைய இடங்களில் இருப்பதைத் தடுக்க வேண்டுமாயின், நீதித்துறைச் செயல்முறையை மாற்றி அமைக்க வேண்டும், என கூறினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரதமர் பின்வருமாறு தெரிவித்தார்:
கல்வியியற் கல்லூரிகள் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை. வளங்கள் மாத்திரமன்றி, அவை செயற்படும் விதம் குறித்தும் பெரிதாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்த ஆண்டில், காலத்திற்குப் பொருத்தமான அதே வேளை, உத்தேசக் கல்விச் சீர்திருத்தங்களுக்கும் பொருத்தமான வகையில் ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். நமக்குத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, கல்வியியற் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிபுணத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளித்து வருகின்றோம்," என்றார்.
எமது அரசாங்கத்தின் இலக்கு, அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற நிலையை அடைவதே ஆகும். கல்வியியற் கல்லூரிகளை பட்டத்தை வழங்கும் நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே எமது இலக்காகும். ஏற்கனவே குலியாப்பிட்டிய கல்வியியற் கல்லூரிகளில் பட்டம் வழங்கப்படுவதாகவும், எஞ்சியிருக்கும் 19 கல்வியியற் கல்லூரிகளையும் அந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு