ஒவ்வொரு பிள்ளைக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவது கல்விச் சீர்திருத்தத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்
சகல பிள்ளைகளுக்கும் தரமானதும் சமமானதுமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதே புதிய கல்விச் சீர்திருத்தங்களின் அடிப்படை நோக்கமாகும் எனவும், ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய உரிய மாணவர் எண்ணிக்கையை முறையாகப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நவம்பர் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் பின்வருமாறு கூறினார்:
ஐந்து பிரதான பிரிவுகளாகச் செயற்படுத்தப்படும் இச்சீர்திருத்தங்களின் மூலம், பாடசாலைகளுக்கிடையே பௌதிக, மனித மற்றும் தொழில்நுட்ப வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதிலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் அமைவிடம், மாணவர்களின் எண்ணிக்கை, சமூகப் பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் கல்வி வாய்ப்புகள் வேறுபடாத வகையில், தேவையின் அடிப்படையில் வளங்களைப் பகிர்ந்தளிக்கும் தேசியக் கொள்கையொன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது.
தேசியக் கல்வி ஆணைக்குழு, தேசியக் கல்வி நிறுவகம், கல்விச் சீர்திருத்தங்களுக்கான தேசிய வழிநடத்தல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு வகுப்பறையில் இருக்க வேண்டிய அதிகபட்ச மாணவர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அதற்கேற்ப, எதிர்வரும் வருடங்களில் அதிக நெரிசல் காணப்படும் பாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாகக் கட்டுப்படுத்தப்படும். அத்துடன், ஆரம்ப வகுப்பொன்றில் அதிகபட்ச மாணவர் எண்ணிக்கையை 30ஆகவும், 6ஆம் தரம் முதல் 11ஆம் தரம் வரை 35ஆகவும், உயர்தர வகுப்பொன்றில் 40ஆகவும் பேணுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆரம்ப வகுப்பொன்றிலுள்ள குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை பிரதேசத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடும் என்பதால், மாணவர்கள் குறைவாகவுள்ள பாடசாலைகளைத் தொடர்ந்து நடத்துவது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாகத் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
பாடசாலைகளுக்கிடையே நிலவும் இடைவெளியைக் குறைப்பதற்காகக் குறுங்கால, நடுத்தரகால, நீண்டகாலத் திட்டங்களை உள்ளடக்கிய ’2026 – 2033 பொதுக் கல்வித் துறைசார் உருமாற்றச் சட்டகம்’ தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. இதன் குறுங்கால நடவடிக்கைகளின் கீழ், பாடசாலைகளில் இனங்காணப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் ஊடாகப் பாடசாலை அடிப்படையிலான கொடுப்பனவுகளை வழங்குதல், சுகாதார வசதிகள் குறைவாகவுள்ள பாடசாலைகளை மேம்படுத்துதல், அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள கட்டடங்களைப் பூர்த்தி செய்தல் ஆகியவை ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு ஒரு பாடசாலை வீதம் நாடளாவிய ரீதியில் 335 ஆரம்பப் பாடசாலைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டமும் செயற்படுத்தப்படுகிறது.
நீண்டகாலத் திட்டங்களின் கீழ், கல்விப் பிரிவுகளையும் வலயங்களையும் தரப்படுத்துவதற்காக விசேட செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலைகளுக்கிடையே உட்கட்டமைப்பு வசதிகளையும் ஆசிரியர்களையும் முறையாகப் பரிமாறிக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் வரைபடமாக்கி, நிர்வாக எல்லைகளை நிர்ணயிப்பதற்காகத் தேசிய செயலணியொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் குறைவாகவுள்ள கிராமிய மற்றும் தோட்டப் பாடசாலைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முறையாக ஆராயப்படவுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையையும் மிகையையும் நிர்வகிப்பதற்காக, கல்வி அமைச்சின் 6/2021ஆம் இலக்கச் சுற்றறிக்கைக்கு அமைய, பாடசாலையிலுள்ள உண்மையான மாணவர் எண்ணிக்கையின் விகிதாசார அடிப்படையில் ஆசிரியர்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்புதிய சட்டகம் அமுல்படுத்தப்படுவதன் ஊடாக, வசதிகள் குறைவாகவுள்ள பாடசாலைகளின் பிள்ளைகளுக்கும் டிஜிட்டல் வசதிகள், விளையாட்டு, கலை, நவீன விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப (STEM) கற்றல் வாய்ப்புகள் விரிவடையும் என்றும், சகல பாடசாலைகளுக்கிடையிலும் சமமான கல்விச் சூழல் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.
பிரதமர் ஊடகப் பிரிவு