ஒக்டோபர் 25ஆம் திகதி இடம்பெற்ற, தெய்யந்தர, பெல்பாமுல்லயில் அமைந்துள்ள எச்.பி. பியசிறி அரச ஆயுர்வேத வைத்தியசாலைக்காகக் கட்டப்பட்ட புதிய மூன்று மாடி சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த புதிய மூன்று மாடிக் கட்டடத் தொகுதியானது, Phenomenal Trading நிறுவனத்தின் அதிபதி தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்களினதும், அவரது பிள்ளைகளினதும் முழுமையான நிதி நன்கொடையுடன் கட்டப்பட்டது.இந்த சிகிச்சைப் பிரிவுக் கட்டடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கும் பரிசுப் பத்திரத்தை தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்கள் பிரதமரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், அரசாங்கமும், தனியார் துறையும், பொதுமக்களும் இணைந்து முன்னெடுக்கக்கூடிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இந்த வைத்தியசாலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் எனத் தெரிவித்ததோடு. சமூகப் பொறுப்புடன் செயற்படும் வர்த்தகர்கள் பற்றிய முன்மாதிரியை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுக்கத்தக்க திறமையான வர்த்தகர்களின் தேவை இந்தக் காலகட்டத்தில் இருந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இந்த மூன்று மாடிக் கட்டடத் தொகுதியை முழுமையாக நிர்மாணித்து அதனை நன்கொடையாக வழங்கியதன் மூலம் ஆற்றிய சேவைக்காக தேசமான்ய எச்.பி. பியசிறி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள்,
"இன்று இந்த வைத்தியசாலையை நிர்மாணித்த எச்.பி. பியசிறி அவர்களின் கனவு, 2030ஆம் ஆண்டிற்குள் புரியாது இந்தக் கிராமப் பிரதேசத்தைச் சுற்றுலாத் துறையின் மூலம் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதே ஆகும். ஆயுர்வேதத்தை சுற்றுலாத் துறையுடன் இணைத்து, ஆரோக்கிய சுற்றுலாத் துறையாக (wellness tourism) அதனை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் இது ஒரு சிகிச்சையாகவும், பராமரிப்பாகவும் அமைகின்றது. இது நமது நாட்டை உலகளவில் மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய ஒரு தொழில்முயற்சி சார்ந்த கருப்பொருளாகும். அதற்கு பியசிறி அவர்களின் நோக்கு மிகவும் முக்கியமானதாகும். அத்தோடு ஆயுர்வேத வைத்தியசாலை என்பது அரசாங்க வைத்தியசாலையைப் போலவே மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அந்த வகையில் இந்த பெருமதிமிக்க வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு பியசிறி அவர்கள் தமது பங்கை நேர்த்தியாக நிறைவேற்றி இருக்கின்றார். அவரது பணியின் மிகுதியை நிறைவு செய்ய அரசாங்கம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கின்றோம்," என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ மகா சங்கத்தினர், தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஸ்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மேத்தகே உட்பட விருந்தினர்களும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு