சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது. - NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

இலங்கையின் பொருளாதார மாற்றத்தை சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அங்கீகரித்துள்ளன

இலங்கையில் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நல்ல சமூகத்தையும், தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புதல் மற்றும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஒக்டோபர் 17ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்ற NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

“நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் இந்த சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. “அறியப்படாதவற்றின் எல்லை: ஆபத்து, தீர்வு, புதுப்பிப்பு” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, துரிதமாக மாறிவரும் உலகின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடுவதற்காக உலகளாவிய தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் புத்தாக்குனர்களை ஒன்றிணைப்பதே இதன் நோக்கமாகும்.

பிரதமர் தனது உரையில், இலங்கையின் ஜனநாயக எழுச்சி, பொருளாதார மீட்சி மற்றும் இந்தியாவுடனான கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவித்தார். உலகளாவிய நிச்சயமற்ற தன்மையைக் கடந்து செல்வதில் பொறுப்பான தலைமைத்துவம், மீளாற்றல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கை அண்மையில முகம்கொடுத்த நெருக்கடியான சூழலில் இருந்து மீள்வதற்கு இலங்கை ஒரு சவாலான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான மக்களின் கோரிக்கையின் பேரில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றமை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு, சிறந்த நிதி முகாமைத்துவம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை எடுத்துக் காட்டிய பிரதமர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை இலங்கையின் நிதி ஒருங்கிணைப்பை அதன் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக அங்கீகரித்துள்ளன என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது - தற்போது இது சுமார் 10% ஆகும்- மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலையக சமூக உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரது குரல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

இலங்கை சவால்களை எதிர்கொண்ட போதெல்லாம், அண்டை நாடாக இந்தியா வழங்கிய ஆதரவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். இலங்கையின் 2022 பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் முக்கிய ஆதரவையும், எரிசக்தி, இணைப்பு, கல்வி, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் பாராட்டப்பட வேண்டியதாகும்.

இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியாவின் தொலைநோக்குடன் இணைந்து இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவை பெறுமான சங்கிலிகளுடன் இலங்கையின் உற்பத்திகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகிறோம்.

வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் GovPay, e-அடையாள முறைமைகள் (e-identity systems) மற்றும் திறந்த தரவு வாயில்கள் (open data portals) போன்ற முயற்சிகளை எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. எனினும் சட்டங்களால் மட்டும் நாடுகளை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது - பெறுமானங்களும் சமூக நெறிமுறைகளும் அவசியம் என்பதை எமது அரசாங்கம் கவனத்திற்கொண்டுள்ளது.

தெற்காசியா முழுவதும் உள்ள இளைஞர்களை விளித்துப் பேசிய கலாநிதி அமரசூரிய, புத்தாக்கங்களை தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்லாமல், நியாயமான, உள்ளடக்கிய மற்றும் மனிதாபிமான முறைமைகளை வடிவமைக்கும் தார்மீக அம்சமாகவும் பார்க்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

இலங்கையில் ஒரு நல்ல சமூகத்தையும், அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொலைநோக்குடைய ஜனநாயகத்தையும் கட்டியெழுப்புவதற்கும் சுபீட்சமான இலங்கைக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு