உயர் வகுப்புகளிலுள்ள பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயர்தர, சாதாரண தர மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது கட்டாயமானதெனவும், மாணவர்கள் 13 வருடங்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டுமெனவும், உயர் வகுப்புகளிலுள்ள பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்குப் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் தேசியப் பாடசாலையின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நவம்பர் 15ஆம் திகதி அப்பாடசாலையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, அகில இலங்கைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிப் பதக்கங்களை அணிவித்ததோடு, பாடசாலையின் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் பிரதமர் பார்வையிட்டார்.
அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
ஒரு பிள்ளையின் அடிப்படை உரிமை என்பது பாடசாலையொன்றில் சேர்வது, தொழிற்பயிற்சி வாய்ப்பைப் பெறுவது அல்லது பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவது மட்டுமல்ல. இந்நாட்டிலுள்ள அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியைப் பெறுவதற்கான உரிமை உண்டு. நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் தமது கனவுகளை நனவாக்கிக்கொள்ளக்கூடிய வகையிலான கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
அதனால்தான், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது கல்விக்காக 749 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். இது எமது வரலாற்றில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய நிதித் தொகையாகும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட தொகையில் 562.4 பில்லியன் ரூபாவைப் பாடசாலைக் கல்விக்காகவே ஒதுக்கியுள்ளோம்.
நாம் தற்போது கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். 2026ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினோம்; 2027ஆம் ஆண்டில் இரண்டாம் தரத்திற்கும் ஆறாம் தரத்திற்கும் அப்புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். அத்துடன், பிள்ளைகள் புதிய பாடங்களைக் கற்பதற்கும், தொழில்நுட்பத்தை அணுகுவதற்கும், தொழிற்பயிற்சிக் கல்வியைப் பாடசாலைக்குள்ளேயே பெறுவதற்குமான சூழலையும் இப்போது உருவாக்கி வருகிறோம்.
தொழில்நுட்பத்தின் காரணமாக இன்று உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். எனவே, அவ்வாறு மாறிவரும் உலகிற்கு எமது ஒவ்வொரு பிள்ளையும் தயாராக இருக்க வேண்டும். மருத்துவராயினும், சட்டத்தரணியாயினும், ஆசிரியராயினும், பொறியியலாளராயினும், ஊடகவியலாளராயினும், எத்தகைய தொழிலுக்குச் சென்றாலும் அந்த ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் பெருமளவில் தாக்கம் செலுத்துகிறது. ஆகையால், தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவதையும், தொழில்நுட்பத்தின் மூலம் கற்பதையும், அதனைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான அறிவைப் பெறுவதையும் நாம் ஒரு வாழ்க்கைத் திறனாகவே கருதுகிறோம்.
இப்புதிய கல்வி மறுசீரமைப்புகளின் மூலம் நாம் எதிர்பார்ப்பது அறிவை வழங்குவதையோ, பரீட்சைகளில் சித்தியடைவதையோ மட்டுமல்ல. நீங்கள் அனைவரும் பரீட்சைகளில் சித்தியடைவதில் மிகவும் திறமையானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பரீட்சைகளில் சித்தியடைவது மட்டும் போதாது. இன்றைய உலகை எதிர்கொள்ள வேண்டுமாயின், பரீட்சைகளில் சித்தியடைவதுடன் நல்ல வாழ்க்கைத் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூகத்துடன் இணைந்து வாழ்வது, சமூகத்திற்குத் தலைமை தாங்குவது, குழுவாக இணைந்து செயற்படுவது ஆகிய அனைத்தையும் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதேபோன்று, நல்ல, மேம்பட்ட மனப்பாங்குகளும் பிள்ளைகளிடம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் சிறப்பாக அமைந்தால், எம்மால் வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். இவை அனைத்தையும் வழங்கக்கூடிய கல்வியை உங்களிடம் கொண்டுவருவதற்காகவே நாம் இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்காகப் பெரும் முயற்சியையும் பெரும் முதலீட்டையும் கல்வித் துறையில் மேற்கொண்டுள்ளோம்.
குறிப்பாக, சாதாரண தர, உயர்தர வகுப்புகளுக்கு வரும்போது மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை நிறுத்திவிடுவதை நாம் அவதானிக்கிறோம். ஆயினும், அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு வருகை தருவது கட்டாயமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு பிள்ளை 13 வருடங்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும். எனவே, பெற்றோராகிய உங்களிடமும் நான் குறிப்பாகக் கூறுவது, உங்கள் பிள்ளையைக் கட்டாயமாகப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைவோம்; நமது அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான, தரமான கல்வியை வழங்குவதற்கு இணைந்து செயற்படுவோம் என அவர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே, அபூபக்கர் ஆதம்பாவா, மேயர் உள்ளிட்ட உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், அதிபர் அல் நசீபா, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பெருமளவிலான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு