இன்று, அக்டோபர் 02, கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற ஆர்.எம்.ஐ.டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூட்டு ஆய்வுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப விழாவில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பங்கேற்றார்.
இலங்கையின் இளம் கல்வியாளர்களின் அறிவைப் பாலப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குதல் ஆகிய துறைகளில் கலாநிதி பட்டப் படிப்பிற்கான பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஆஸ்திரேலியாவின் ஆர்.எம்.ஐ.டி (RMIT) பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் (UGC) இடையேயான கூட்டு மதிப்பு வடிவமைப்பாக இந்த உத்தியோகபூர்வ விழா அமைந்தது. இத்திட்டம் பேராதனைப் பல்கலைக்கழகம், மொரட்டுவப் பல்கலைக்கழகம், ருஹுணுப் பல்கலைக்கழகம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கலாநிதிப் பயிற்சிக்காக 30 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் அவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் திறனை வலுவூட்டுவதில் ஆர்.எம்.ஐ.டி உடனான இந்த கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தைப் பாராட்டினார். மேலும், நாடு தற்போது இனம் கண்டிருக்கும் முக்கிய துறைகளைத் திறம்படக் கையாள்வதற்கு ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்களின் தீவிர பங்களிப்பு அரசாங்கத்திற்குத் தேவைப்படுகின்றது என்பதையும் வலியுறுத்தினார்.
அத்தோடு, சம்பிரதாய அணுகுமுறைகளுக்கு அப்பால், அதிகமான பல்துறையசார் மற்றும் பல்வகைப்பட்ட உத்திகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நிலையான அதே நேரம் அனைவரையும் உள்வாங்கிய அபிவிருத்தியை நோக்கி நாட்டைக் கொண்டுசெல்லும் தலைமைப் பொறுப்பை இன்று புலமைப்பரிசில்களைப் பெற்ற கல்வியாளர்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஆஸ்திரேலியாவின் பதில் உயர்ஸ்தானிகர் Lalita Kapur, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சேனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர், ஆர்.எம்.ஐ.டி பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், உபவேந்தர்கள், பீடாதிபதிகள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு