சீனாவுடனான இலங்கையின் உறவினை மேலும் பலப்படுத்தும் வகையிலான விரிவான பேச்சுவார்த்தை சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) அவர்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையே இடம்பெற்றது 

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இன்று ஒக்டோபர் 14, 2025 பீஜிங்கில் அமைந்திருக்கும் மக்கள் மண்டபத்தில் (Great Hall of the People) சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) அவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

இலங்கையின் சீனாவுடனான ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பல்வகைப்பட்ட ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்துதல் ஆகியன குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. பெண்கள் பற்றிய உலகத் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே பிரதமர் சீன விஜயத்தினை மேற்கொண்டு இருக்கின்றார்.

பீஜிங்கில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்கள், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்ட அரச விஜயத்தின் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவைப் பற்றி நினைவு கூர்ந்த பிரதமர், ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் சீனாவின் நவீனமயமாக்கல் குறித்த தொலைநோக்குப் பார்வை, சீனாவிற்கு மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் பரந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார்.

இலங்கையின் முக்கியமான அபிவிருத்திப் பங்காளி நாடுகளில் ஒன்றாகச் சீனா இருப்பதால், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களில் அடைந்துள்ள உறுதியான முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர், உயர் தரமான ‘பட்டி மற்றும் பாதை முன்முயற்சியின்’ (Belt and Road Initiative) கீழ் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான உதவியை எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கலாநிதி அமரசூரிய எடுத்துரைத்தார்.

சமீபத்திய பொருளாதார மீட்சியில் இலங்கை அடைந்த வெற்றிகளுக்காக ஜனாதிபதி அவர்களுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சீன ஜனாதிபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அத்துடன், வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஆகியத் துறைகளில் இலங்கைக்குத் தொடர்ச்சியான ஆதரவை அளிப்பதாகவும் சீன ஜனாதிபதி அவர்கள் உறுதி அளித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் வேகத்தைத் தொடர்ந்தும் பேணுவதின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

சமகால உலகளாவிய நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் உலகளாவிய நிர்வாக முன்முயற்சிக்கு இலங்கையின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுத் தருவதாகப் பிரதமர் மீண்டும் உறுதி அளித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு