உலக சிறுவர் தினத்தில் சிறுவர்களின் குரல் பாராளுமன்றத்திற்கு - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிறுவர்கள் கனவு காணும் நாட்டை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்

சிறுவர்களின் எதிர்கால எதிர்பார்ப்புகள் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் கனவு காணும் அந்த நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இலங்கைப் பாராளுமன்றம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, யுனிசெப் (UNICEF) இலங்கை நிறுவனம் ஆகியன இணைந்து “Little Amaya & Friends – இலங்கைக்கான எமது பிரார்த்தனை” எனும் தொனிப்பொருளில் நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு சிறுவரின் வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்துவதால், சிறுவர்களின் கருத்துகளைப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வது மிகவும் முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், சிறுவர்களின் கருத்துகளுக்குச் செவிமடுக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

பெரியவர்கள் என்ற வகையிலும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையிலும், சிறுவர்களுக்குப் பொருத்தமான சமூகத்தை உருவாக்குவதற்காகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

“2036ஆம் ஆண்டில் இலங்கை தொடர்பான உங்கள் பார்வை என்ன?”, “உங்களுக்கு மிகவும் முக்கியமான, தீர்வுகள் தேவைப்படும் விடயங்கள் எவை?” ஆகிய இரண்டு கேள்விகளை யுனிசெப் அமைப்பு நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களிடம் முன்வைத்திருந்தது. அதற்குச் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் 1,200இற்கும் மேற்பட்ட சிறுவர்களிடமிருந்து பதில்கள் கிடைத்துள்ளன. அதற்கமைய, பாதுகாப்பானதும் அபிவிருத்தியடைந்ததும் சுபீட்சமானதுமான இலங்கையைக் கனவு காணும் சிறுவர்களின் பிரதான கவலையாக இருப்பது அவர்களது பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினையே ஆகும். அந்தக் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “2036ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கு” எனும் தலைப்பிலான அறிக்கை, நாடு முழுவதிலுமுள்ள சிறுவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ஏழு சிறுவர் பேச்சாளர்களால் இதன்போது முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, “சட்டமியற்றல், மேற்பார்வை, பிரதிநிதித்துவம், வரவு செலவுத் திட்டச் செயற்பாடுகள் ஆகியவற்றின் ஊடாகச் சிறுவர் உரிமைகளை வலுப்படுத்துவதில் பாராளுமன்றத்தின் வகிபாகம்” தொடர்பான விசேட அமர்வொன்றையும் யுனிசெப் இலங்கை நிறுவனம் நடத்தியது.

இந்நிகழ்வில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்றப் பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவியும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், யுனிசெப் இலங்கை நிறுவனத்தின் பதில் வதிவிடப் பிரதிநிதி பெகோனியா அரெயானோ, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோருடன், அரச அதிகாரிகளும் சிறுவர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு