எதிர்வரும் நூற்றாண்டில் அரச பல் மருத்துவச் சேவையானது சிகிச்சை அளிப்பதுடன் மட்டுப்படாமல், நோய்த் தடுப்பு, நோயை முன்கூட்டியே கண்டறிதல், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் அரச பல் மருத்துவச் சேவை நூறு ஆண்டுகளைப் பூர்த்திசெய்வதை முன்னிட்டு, நவம்பர் 22ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நினைவு விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
1926ஆம் ஆண்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அரச பல் மருத்துவச் சேவை, இன்று நாடு முழுவதும் பரந்துள்ள 600 சிகிச்சை நிலையங்களைக் கொண்ட வலுவான கட்டமைப்பாக வளர்ச்சியடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய பிரதமர், அங்கு 106 விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளடங்கலாக ஏறத்தாழ 1,350 பல் சத்திரசிகிச்சை வைத்தியர்கள் சேவையாற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
1943இல் பல் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டமையும், 1947இல் நாட்டிலேயே பயிற்சிபெற்ற முதலாவது பல் வைத்தியர்கள் குழு உருவாக்கப்பட்டமையும் இப்பயணத்தின் தனித்துவமான மைல்கற்களாகும் என நினைவுகூர்ந்த பிரதமர், பேராதனைப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுரப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பல் மருத்துவ பீடங்கள் நாட்டின் பல் மருத்துவக் கல்வியை வலுப்படுத்துவதற்குப் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.
இந்த நூற்றாண்டுப் பயணத்தை வெற்றிகரமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பல் சத்திரசிகிச்சை வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பாடசாலைப் பல் சிகிச்சையாளர்கள், பல் ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள், பல் உதவியாளர்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
வாய் ஆரோக்கியம் என்பது வெறுமனே பல் வலிக்குச் சிகிச்சை அளிப்பதோ பற்களை அகற்றுவதோ மட்டுமன்று என்று தெரிவித்த பிரதமர், அது ஒருவரின் போசாக்கு, பேசும் திறன், தன்னம்பிக்கை, ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் நேரடியாகத் தாக்கம் செலுத்தும் விடயம் என வலியுறுத்தினார்.
முன்னைய தேசியக் கணக்கெடுப்புகளில் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடையே சுமார் 67 சதவீதமாகக் காணப்பட்ட பல் சிதைவு வீதம், 2015–2016 கணக்கெடுப்பின்போது 30.4 சதவீதமாகக் குறைவடைந்தமை, பாடசாலைப் பல் சேவையினதும் நோய்த் தடுப்புத் திட்டங்களினதும் வெற்றியை வெளிப்படுத்துவதாகும் எனப் பிரதமர் கூறினார்.
எவ்வாறாயினும், வாய்ப் புற்றுநோய் அபாயம் குறித்து மக்களை மேலும் தெளிவூட்ட வேண்டும் எனவும், புகையிலை, வெற்றிலை, பாக்கு மற்றும் தீங்கு விளைவிக்கும் மதுப் பாவனையின் பின்விளைவுகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ள முறையில் புரியவைக்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
“பெரும்பாலானோருக்குப் பல் மருத்துவ ஆலோசனை பல் வலி ஏற்பட்ட பின்னரே நினைவுக்கு வருகிறது. நாம் மாற்ற வேண்டியது இந்த மனநிலையையே ஆகும். சுகாதாரப் பாதுகாப்பு என்பது நோய் ஏற்பட்ட பின்னர் அல்ல, அதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும்” என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஆரம்பச் சுகாதாரச் சேவைகளைச் சமூகத்துக்கு மேலும் அண்மையில் கொண்டுசெல்வதன் மூலம் இந்த நோய்த் தடுப்பு அணுகுமுறையை முன்னெடுக்க முடியும் எனக் கூறிய பிரதமர், ஒருவரின் வருமானம், வசிக்கும் பிரதேசம் அல்லது சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் தரமான பல் மருத்துவச் சேவையைப் பெறும் உரிமை தீர்மானிக்கப்படக் கூடாது எனவும், பொருளாதார ரீதியில் சிரமங்களை எதிர்நோக்கும் சமூகங்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், டிஜிட்டல் பல் மருத்துவம் போன்ற நவீனத் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பயன்கள் சமூகத்திலுள்ள அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.
அரச பல் மருத்துவச் சேவையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, பிரதமர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் நினைவு முத்திரையும் முதல்நாள் உறையும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதிப் பணிப்பாளர் நாயகம் (பல் சேவைகள்) வைத்தியர் சந்தன கஜநாயக்க ஆகியோர் உள்ளடங்கலாகப் பல வைத்திய, பல் மருத்துவ நிபுணர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு