டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு தேவையானது. - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது, தரவு பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறி ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில், கடந்த 22ம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற, eMHIC சர்வதேச டிஜிட்டல் மனநலம் குறித்த கலந்துரையாடலின் போது இதை அவர் தெரிவித்தார்.

இலங்கையில் டிஜிட்டல் மனநலம் தொடர்பான சவால்களைத் தீர்க்க புத்தாக்க தொழில்நுட்பத் தீர்வுகளை ஆராய்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கம் ஆகும்.

இக்கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்:

பரந்த அளவில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஓர் அங்கமாக, தற்போதைய மனநல சேவையை டிஜிட்டல் தளத்திற்கு மாற்ற தேவையான தீர்வுகள் குறித்து அரசின் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புத்தாக்கத்தை ஊக்குவிப்பது, டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையில் செயல் திறன், பாதுகாப்பு, தரவு தனியுரிமை மற்றும் ஒழுக்கநெறிகள் தொடர்பான விடயங்களை உறுதி செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

நன்கு பயிற்சிபெற்ற மனநல ஊழியர்களின் படையும், சமூக மட்டத்திலான ஒருங்கிணைந்த பல்துறை மற்றும் பல்வகைச் செயற்திட்டங்களும் இதற்கு மிக முக்கியமானவை. புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிட்டல் மயமாக்கலில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே தேவையான டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் பிள்ளைகளின் மனநலம் குறித்த போதுமான புரிதல் இல்லாமை போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இவ்வாறான விடயங்களை எடுத்துரைக்கும் விதமாக எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் குறிப்பிடினார்.

இந்த நிகழ்வில் கனடா செனட் உறுப்பினர் திருமதி Kathy Hay, eMHIC சர்வதேச ஒத்துழைப்பு நிர்வாக இயக்குனர் பேராசிரியர் Anil Thapliyal உள்ளிட்ட eMHIC பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், அறிவியலாளர்கள், தொழில்முறை நிறுவனங்களின் பிரதிநிதிகள், டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு