மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி, ’டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துங்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், அனர்த்தச் சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை மாகாண மட்டத்தில் ஆராய்ந்து பாருங்கள்

மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, ’டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாகாண மட்டத்தில் ஆராய்ந்து பார்க்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

’Rebuilding Sri Lanka’ திட்டத்தின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், இன்று (21) அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அனர்த்த நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கலைத் துரிதப்படுத்தி, உட்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை விரைவாக மறுசீரமைப்பதே இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கங்களாக அமைந்தன.

’டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களுக்காக 500 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் 2026ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நிறைவடைய வேண்டுமென்றும் குறிப்பிட்ட பிரதமர், இழப்பீடு வழங்கல் தாமதமாவதற்குப் பிரதேச மட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

இதன்போது, ’டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மறுசீரமைக்கும் பணிகளுக்குச் சுமார் 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு தெரிவித்தார். அதற்கேற்ப வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள், மீன்பிடித்துறை, தொழில் மற்றும் வாழ்வாதாரம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

25,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இதுவரை 99% நிறைவடைந்துள்ளதோடு, மீள்குடியேற்றத்திற்கான 50,000 ரூபா கொடுப்பனவு வழங்கல் 95% முடிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முழுமையாகச் சேதமடைந்த வீடுகள் மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ’சுரக்ஷா’ நிவாரண மையங்களை மூடும் பணி 99% வரை முடிவடைந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு மேலதிகமாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா வழங்குதல். அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒவ்வொருவரினது குடும்பத்திற்கும் 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குதல். பெற்றோர் எவரையாவது அல்லது இருவரையும் இழந்த சிறுவர்களுக்கான இழப்பீடு வழங்கல். விசேட தேவையுடைய பாதிக்கப்பட்ட நபர்களுக்கான இழப்பீடு வழங்கல். சேதமடைந்த விவசாயச் செயற்பாடுகளுக்கான இழப்பீடு வழங்கல். பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றும் பணிகளைத் துரிதப்படுத்துதல். புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்கான காணி ஒதுக்கீடு மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கைகளை விரைவாகப் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களை மறுசீரமைத்தல், பிரதேச மட்டத்தில் துல்லியமான புள்ளிவிவரங்களை விரைவில் சேகரித்தல் மற்றும் உட்கட்டமைப்புகளை விரைவாக அபிவிருத்தி செய்தல் தொடர்பிலும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன, கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், ஜனாதிபதி பணிக்குழாம் தலைவரும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமுமான பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதி மேலதிக செயலாளர் ஜயந்த பண்டார மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு