ஆசிரியர் நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் உடனடியாக அறிவிக்கவும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்

ஆசிரியர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சைகளின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாகத் தமக்கு அறிவிக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டார். ஆசிரிய வெற்றிடங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தில் இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவின் தலையீட்டின் பேரில், பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகளுடன் நவம்பர் 13ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தேசியப் பரீட்சைகள் மற்றும் நேர்முகப் பரீட்சைகளின்போது மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் பரீட்சையின் அடிப்படையில் 17,000 பேர் நேர்முகப் பரீட்சைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது முதற்கட்டம் மட்டுமே. நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்படும். ஆசிரியர்களை 2022ஆம் ஆண்டு சுற்றறிக்கைக்கு அமையவே ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டியுள்ளது. அதில் ஒரே வேட்பாளர் பல பாடங்களுக்கும், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கும், சாதாரண தரம், உயர் தரம் ஆகிய பிரிவுகளுக்கும் விண்ணப்பித்திருக்கக்கூடும். அதனால், அதற்கேற்பத் தெரிவுகளை மேற்கொள்வது சற்றுச் சவாலான செயல்முறையாகும். அத்தெரிவுகளுக்கு அமைவாக, வெற்றிடங்களைக் கருத்திற்கொண்டு இரண்டாம் கட்ட நேர்முகப் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் முறைகள் குறித்து நேர்முகப் பரீட்சைகளை நடத்துபவர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டுள்ளது. எனினும், ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து எமக்கு அறிவிக்கவும். ஆட்சேர்ப்புகள் வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதற்கு நாம் எமது உச்சக்கட்டத் தலையீட்டை மேற்கொள்கிறோம் என்றார்.

மேலும், பாடசாலை மட்டத்திலான தேசிய மதிப்பீட்டுச் செயல்முறையின்போது மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளை மதிப்பிடுவதற்கான முறையான பொறிமுறையொன்றைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கற்றலுக்கு உதவும் உபகரணங்களை வழங்குவதற்கும் தேவையான உபகரணங்களை உருவாக்குவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பார்வைக் குறைபாடுள்ள பட்டதாரிகள் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு