சுவிட்சர்லாந்து மற்றும் டாவோஸ் இலங்கை வர்த்தகச் சமூகத்தினருடன் பிரதமர் சந்திப்பு

டாவோஸில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் World Economic Forum வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தின் உறுப்பினர்களையும், அந்நாட்டில் வசிக்கும் இலங்கை வர்த்தகத் தலைவர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கூட்டுறவைப் பலப்படுத்துதல், நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒத்துழைப்புக்கான நடைமுறைச் சாத்தியமான வழிகளை ஆராய்தல் ஆகிய விடயங்கள் குறித்து இச்சந்திப்புகளின் போது கவனம் செலுத்தப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தக மற்றும் தொழில்சார் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, வர்த்தகத் தொடர்புகளை வளர்ப்பதிலும், முதலீட்டு வாய்ப்புகளை இலகுபடுத்துவதிலும், சந்தை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதிலும் அவர்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கினைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன், தொழில்முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சர்வதேச வர்த்தக வலையமைப்புடன் இலங்கையின் ஈடுபாட்டைப் பலப்படுத்துதல் ஆகியவற்றிலும் அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

அத்தோடு, சுவிட்சர்லாந்து வர்த்தகச் சமூகத்தினருடனான சந்திப்பில், இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்கு, மறுசீரமைப்பு முன்னுரிமைகள் மற்றும் முதலீட்டிற்கான முக்கிய துறைகள் குறித்துப் பிரதமர் விளக்கமளித்தார். பொருளாதார ஸ்திரத்தன்மை, முன்கூட்டியே கணிக்கக்கூடிய கொள்கைக் கட்டமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பற்றியும் இதன்போது அவர் எடுத்துரைத்தார்.

சேவைத் துறை வளர்ச்சி, மூலதனச் சந்தைகள், நிதித் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டது. அத்துடன், இந்த ஈடுபாடுகளை முதலீட்டு ஆர்வம், துறை சார்ந்த கூட்டுறவு மற்றும் நீண்டகால ஒத்துழைப்பு போன்ற உறுதியான பெறுபேறுகளாக மாற்றுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

மறுசீரமைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேசக் கூட்டுறவு ஆகியவற்றின் ஊடாகத் தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை வர்த்தகத் தரப்பினரின் தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு