தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டம் பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சம சலுகைகளைக் கொண்ட கல்வி முறையொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு, சரியான தரவு முகாமைத்துவத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிப் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கம் என்ற வகையில், எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய கல்வி முறையொன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்காகச் சரியான தரவுகள், கொள்கைகள் மற்றும் தொழில்நுட்பக் காரணிகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அலரி மாளிகையில் 2026.06.06 நடைபெற்ற தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் (NEMIS) மனிதவள முகாமைத்துவ மொடியுலின் முதலாம் கட்டம் மற்றும் ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் முன்னோடித் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தங்களின் ஐந்து பிரதான தூண்களின் கீழ் உள்ள மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளின் பணிகளை மிகுந்த வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக இந்தத் தகவல் முறைமை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் மாகாணங்கள் வெவ்வேறான தகவல் முறைமைகளைப் பயன்படுத்தி வந்தன, இந்த முறைமையின் மூலம் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் அனைத்துத் தகவல்களும் ஒரே கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. இதன் முதற்கட்டமாக மனிதவள மொடியுல் வெளியிட்டு வைக்கப்பட்டது, இந்த முதலாவது மொடியுலின் கீழ் சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் ஆகிய நான்கு மாகாணங்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் இந்த முறைமையின் கீழ் முன்னெடுக்கப்படுவதுடன், பின்னர் இது முழு நாட்டிற்கும் விரிவுபடுத்தப்படும்.

எதிர்வரும் காலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்ற மொடியுல்கள் மூலம் பாடசாலைகளின் சகல கல்விசார் பணியாளர்களின் மனிதவள முகாமைத்துவத்தினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது

இத்திட்டமானது பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, கல்வித் துறையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணி, மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய சகல தரப்பினர்களும் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.

இதற்குச் சமாந்தரமாக ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS), பற்றிய முன்னோடி திட்டமும் வெளியிடப்பட்டதோடு, இது டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்தி மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டுச் செயன்முறைகளை மேம்படுத்த வழிவகுக்கும்.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

கல்விக் கட்டமைப்பின் ஒவ்வொரு பிரிவும் வெவ்வேறாக தனிமையில் இயங்குவதற்கு பதிலாக நாம்,"கல்வி நிர்வாகம், கற்பித்தல் செயன்முறை மற்றும் கல்வி உள்ளடக்கங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, கல்விக் கட்டமைப்பின் பிரிவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கின்றோம். நாம் ஆரம்பித்த அந்த செயலானது எளிதான ஒன்று அல்ல.

எமது அரசாங்கத்தைப் பொறுத்தவரை டிஜிட்டல் மயமாக்கல் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாறிவரும் உலகிற்கு ஏற்ப நாமும் மாற்றம் பெற்று முன்னோக்கிச் செல்ல வேண்டும். அரச சேவைகளை மிகவும் வினைத்திறனாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களுக்கு வழங்க டிஜிட்டல் மயமாக்கல் அவசியம் என நாம் நம்புகிறோம். குறிப்பாக, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தங்களுக்குத் துல்லியமான தரவுகள் அவசியமாகின்றன. இந்தத் தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் (NEMIS) ஊடாகத் துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்வதுடன், கல்வியின் வெளிப்படைத்தன்மையையும் தரத்தையும் உறுதிப்படுத்த முடியும்.

அனைத்துத் தேசிய பாடசாலைகளும் மிக விரைவில் இந்த முறைமைக்குள் உள்வாங்கப்படும். ஏற்கனவே சில மாகாணங்களின் ஆசிரியர்களின் தகவல்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளை மிகவும் வெளிப்படையாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம்.

அரச சேவைகளை இவ்வாறு டிஜிட்டல் முறைமைக்கு மாற்றும்போது, அவற்றைப் பயன்படுத்தக்கூடிய அறிவுள்ள பிரஜைகளை நாம் உருவாக்க வேண்டும். அதன் பிரதான பொறுப்பு கல்வித் துறையையே சாரும். அதனாலேயே, ’ஈ-தக்சலாவ’ கற்றல் முகாமைத்துவ முறைமையின் மூலமாக மனிதவளத்தை மேம்படுத்தும் செயன்முறையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

டிஜிட்டல் மயமாக்கல் என்பது ஆசிரியருக்கு மாற்றீடு அல்ல. கல்வி என்பது ஒன்றோடொன்று தொடர்புடையதாகும். வகுப்பறைகளில் எவ்வளவு தொழில்நுட்பக் கருவிகள் இருந்தபோதிலும், கற்றல் நடவடிக்கைகள் தானாகவே நிகழ்ந்துவிடாது. மாணவர்களுடன் அன்யோன்யமாகச் செயல்படுவது ஆசிரியர்களே ஆகையினால் ஆசிரியர்கள் இந்தத் டிஜிட்டல் மயமாக்கல் தொழில்நுட்பத்தைத் தமக்கு ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும். இது ஆசிரியரின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும்.

டிஜிட்டல் மயமாக்கலை பயன்படுத்தி குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு உயர்ந்த தரத்திலான கல்வியைப் பெற்றுக்கொடுப்பது எவ்வாறு, அனைத்துப் பாடசாலைக்கும் சிறந்த ஆசிரியர்களின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது மற்றும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கல்வித் துறையில் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது எவ்வாறு போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். தீர்வுகாண டிஜிட்டல் மயமாக்கலைப் பயன்படுத்துகிறோம். மனிதநேயமிக்க, நாகரிகமான, எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குள்ள பிரஜைகளை உருவாக்கும் பயணத்தை டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம், எனத் தெரிவித்தார்.

அத்தோடு,இதன்போது, தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் முறைமையின் முதலாம் கட்டத்தை வடிவமைக்கப் பங்களிப்பை வழங்கிய சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாண அதிகாரிகளுக்கும், இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கும் பிரதமர் நினைவுச் சின்னங்களை வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார விவகாரப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, மாகாண பிரதம செயலாளர்கள், விமானப்படைத் தளபதி, மாகாண கல்வி செயலாளர்கள், கல்வி அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கலுக்கான செயலணியின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு