உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய, போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் இணங்கியுள்ளதாகவும், ஆட்சேர்ப்பின் இரண்டாவது கட்டத்தின்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சையில் பாடசாலைகளில் சேவை செய்யும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அனுகூலமான விசேட வாய்ப்பு ஒன்று கிட்டவுள்ளதாகவும் பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது மேலும் விடயங்களைத் தெளிவுபடுத்திய பிரதமர்,
நீதிமன்றச் சட்டச் செயற்பாட்டின் இறுதிக் கட்டளையின்படி, இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமையவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளின் அதிகபட்ச வயது எல்லையான 40, இந்தச் சந்தர்ப்பத்திற்காக மாத்திரம் 45 வயது வரை மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்களுக்கமைய, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக வயது எல்லையைத் திருத்தியமைத்து, தனித்தனியாகப் பரீட்சைகளை நடத்தி, ஆசிரியர் சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவையின் 3.1.அ தரத்திற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு