உலகளாவிய கண் நல மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

2026 பொதுநலவாய அரசத் தலைவர்களின் மாநாட்டில் (CHOGM) கலந்துகொள்வதற்காக அன்டிகுவா மற்றும் பார்புடா சென்றிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நவம்பர் 02ஆம் திகதி நடைபெற்ற “The Value of Vision” உலகளாவிய கண் நல மாநாட்டிலும் கண்காட்சியிலும் கலந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற உயர்மட்டப் பிரதிநிதிகள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் பின்வருமாறு கூறினார்:

இலங்கையின் இலவசச் சுகாதார சேவையில் கண் நலத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பை வழங்கும் வேலைத்திட்டத்துக்காக இலங்கை தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றது.

இலங்கையில் இலவசக் கல்வியும் இலவசச் சுகாதார வசதிகளும் வழங்கப்பட்டு வருவது, நீண்டகாலமாக நிலவிவரும் மக்கள் இறைமையிலும் அர்ப்பணிப்பிலுமே தங்கியுள்ளது. இலங்கையின் கண் நலச் சேவையும் அதற்கேற்பவே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

கண் நலம் என்பது வெறும் சமூகச் செலவு அல்ல; அது மனித வளத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு முதலீடு என்பதை நாம் உணர வேண்டும்.

அதிலும் குழந்தைகள் மற்றும் இளந்தலைமுறையினர் மீது எமது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைச் சுகாதாரக் கொள்கையின் கீழ், சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து 1, 4, 7, 10ஆம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் பார்வைக் குறைபாடுகளை அடையாளம் காணும் பரிசோதனைகளை நடத்துவதுடன், தேவையான மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடிகளையும் விசேட வைத்தியச் சிகிச்சைகளையும் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகக் கண்ணாடிகள் தேவைப்படும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அவற்றை வழங்கும் புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முதலாம் கட்டம் 2026 ஒக்டோபர் 17ஆம் திகதி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

தடுக்கக்கூடிய பார்வைக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணுதல், கண் நலச் சேவைகளை மேலும் விரிவுபடுத்துதல், அதற்கான உலகளாவிய கூட்டுழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இம்மாநாட்டில், சர்வதேசத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

உலகளாவிய கண் நல மாநாட்டைத் தொடர்ந்து, பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான உறவுகளையும் கூட்டுழைப்பையும் மேலும் வளர்த்துக்கொள்ளும் நோக்கில் நடைபெற்ற பொதுநலவாயத் தலைவர்கள் மற்றும் வர்த்தக நிறைவேற்று அதிகாரிகளின் மாநாட்டிலும் (Commonwealth Leaders and CEOs’ Summit) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

பொதுநலவாயக் காலநிலை நிதி அணுகல் நிலையத்தின் ஆதரவுடன் இலங்கையில் முதலீடு செய்வதற்குத் தயார்ப்படுத்தப்பட்டுள்ள "காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய விவசாய முறைமைகள் திட்டம்", "பச்சை ஹைட்ரஜனால் இயக்கப்படும் சுழியக் காபன் உமிழ்வுத் துறைமுக வழங்கல் திட்டம்" ஆகிய சிறப்பான திட்டங்களில் முதலீடு செய்யுமாறு பொதுநலவாய வர்த்தகத் தலைவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு