சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலத்தைக் குறிக்கும் கோட்டே, கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

“கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பணம்" (LAUNCH OF THE KINGDOM OF KOTTE TOURISM INITIATIVE) மற்றும் ’கோட்டே பசுமை சுற்றுலா’ (Kotte Green Tourism) என்ற கருப்பொருளின் கீழ் ஜூலை 27 ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர் இங்கு மேலும் உரையாற்றுகையில், “இது இலங்கைக்கு ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் ஒரு முக்கியமான முயற்சி. இந்த திட்டம் ஒரு சுற்றுலாப் பாதை என்பதைப் பார்க்கிலும் இது வரலாறு, இயற்கை மற்றும் பாரம்பரியம் வழியான ஒரு பயணமாகும். இலங்கையின் நிர்வாக மையமாக மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க வரலாற்றுத் தொன்மை, கலாசார செழுமை மற்றும் சூழல் மதிப்பு கொண்ட இடமாகவும், நமது தலைநகரை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் உள்ளது.

இது மக்களுக்கு ஒரு நல்ல கலாசார வாழ்க்கையையும் அதே போல் இந்த நகரம் வழங்கும் ஏனைய அனைத்து விடயங்களையும் அனுபவிக்கக்கூடிய ஒரு சிறந்த நகரத்தை உருவாக்குவதற்கு சந்தர்ப்பத்தை அளிக்கும். மேலும் ஒரு நகர்ப்புற ஈரநிலம் என்ற வகையிலும் இது ஒரு தனித்துவமான ஈரநிலம். உலகில் ஒரு சில தலைநகரப் பகுதிகள் மட்டுமே இத்தகைய சூழல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளன என்று நான் நம்புகிறேன். அதன் காரணமாகவும் நாம் இதை ஊக்குவிக்க முடியும்.

14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட கோட்டே நகரம், சீனர்கள், போர்த்துகீசர்கள், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு அழுத்தங்களுக்கு முகம்கொடுத்த ஒரு வரலாற்று நகரமாகும் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கையை ஒரு இறைமை கொண்ட நாடாக ஒன்றிணைத்து ஆட்சி செய்த ஆறாம் பராக்கிரமபாகு மன்னரின் வசிப்பிடமாக இந்த கோட்டே நகரம் இருந்தது.

இந்த நகரம் சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலம் என்பதையும் நாம் அறிவோம். இன்றும் கூட, இந்த வளமான வரலாற்றின் அம்சங்கள் எஞ்சியுள்ளன. "பண்டைய சுவர்கள், கால்வாய்கள், மதத் தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் என்பன ஒரு கீர்த்திமிக்க மற்றும் வலுவான இராச்சியத்தின் கதையை அமைதியாகச் சொல்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று பிரதமர் கோட்டே நகரத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து கருத்துக்களை வெளியிட்ட பிரதமர், ஆனால் கோட்டே வெறும் கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். உலகின் முதல் ஈரநில தலைநகரான கோட்டே, சிறந்த திட்டமிடல் மற்றும் சூழலுக்கான ஆழ்ந்த கௌரவத்துடன் வழிநடத்தப்பட்டால், நகர்ப்புற வாழ்க்கையும் உயிர் பல்வகைமையும் எவ்வாறு இணைந்து வாழ முடியும் என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாக திகழும்.

வரலாறு, கலாசாரம் மற்றும் இயற்கையின் இந்த தனித்துவமான பரிமாணங்களை ஒரே அனுபவமாக இணைக்க கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை எங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இலங்கையர்களுக்கும் சர்வதேச விருந்தினர்களுக்கும் நீண்ட காலமாக மறைந்து கிடக்கும் கோட்டே இராச்சியத்தை ஆராய்வதற்கான ஒரு இடமாக சுற்றுலாத் துறையின் கவனத்தை அதன் மீது செலுத்துமாறு நான் உங்களை வலியுறுத்த விரும்புகிறேன். ஏனென்றால் கோட்டேவைப் பற்றி பலருக்குத் தெரியாத அல்லது புரிந்துகொள்ளாத நிறைய விடயங்கள் உள்ளன. ஈரநிலங்கள் முதல் வரலாற்று அம்சங்கள் வரை, கோட்டேவில் நிறைய விடயங்கள் மறைந்துள்ளன. கோட்டே பசுமை சுற்றுலா வலையமைப்பின் நெறிப்படுத்தலில், மேல் மாகாண சுற்றுலா சபை மற்றும் ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுபின் ஆதரவுடன், பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட இந்த முயற்சி, சமூக அடிப்படையிலான மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான ஒரு சிறந்த அர்ப்பணிப்பு, அத்துடன் பிரதேச தலைமை, குடிமக்கள் மற்றும் தேசிய பாரம்பரியம் ஒரு பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைவதற்கான ஒரு வாய்ப்பாகும். அனைத்து இலங்கையர்களின் சார்பாக, இந்த திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்காளர்களை நான் பாராட்டுகிறேன்.

உங்களது இந்தப் பணி, நமது தலைநகரை ஒரு நிர்வாக நகரமாக மட்டுமல்லாமல், ஒரு வாழும் அருங்காட்சியகமாகவும், திறந்த வகுப்பறையாகவும் திரும்பிப் பார்க்கவும் சிந்திக்கவும் உதவுகிறது. இதன் ஒவ்வொரு தெரு மூலையிலும், ஈரநிலத்திலும், சமய ஸ்தாபனங்களிலும் ஒரு கதை மறைந்திருப்பதாக நான் நினைக்கிறேன். இந்தப் புதிய பயணத்தில் நாம் ஈடுபடும்போது, கோட்டே சுற்றுலா உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு மட்டுமன்றி, இந்த நகரத்தை தாயகமாகக் கொண்ட சமூகங்களுக்கும் கட்டமைக்கப்படுவதை உறுதிசெய்கிறோம். நம் அனைவருக்கும் சொந்தமான பாரம்பரியத்தை கொண்டாடுவோம், பாதுகாப்போம், எதிர்கால சந்ததியினரிடம் மிகவும் பாதுகாப்பாக ஒப்படைப்போம் என்று பிரதமர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் சுற்றுலா சேவைகள் பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க ஆகியோர், தேசிய மக்கள் சக்தி ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்பே பேசியும், செயற்பட்டும், திட்டமிட்டும் வந்த இந்த திட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் மற்றொரு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கோட்டே நகரபிதா அரோஷ அத்தபத்து, உலகெங்கிலும் உள்ள பல தலைநகரங்களில் உள்ளது போல, நாடு மற்றும் அதன் தலைநகரம் பற்றிய தகவல்களை வழங்கும் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் போன்ற வசதிகளை கோட்டே நகரில் நிறுவ அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அந்த நோக்கத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் கோட்டே மாநகர சபை எப்போதும் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கோட்டே பசுமை சுற்றுலா வலையமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, சுற்றுலா சேவைகள் பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, கோட்டே நகரபிதா அரோஷ அதபத்து, நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், சுற்றுலாத் துறையைச் சேர்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு