பாராளுமன்றத்தின் உண்மையான மக்கள் சேவை செயற்குழு கூட்டங்களிலேயே இடம்பெறுகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாராளுமன்ற விவாத மண்டபத்தினுள் கடந்த காலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் குறித்து மக்களிடையே ஒருவித விரக்தி நிலவியபோதிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்து பாரிய மற்றும் முக்கிய பங்காற்றல் பாராளுமன்ற செயற்குழு முறைமையினூடாக இடம்பெற்று வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூலை 21, பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் வேளையிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

விவாத மண்டபத்தினுள் தரவுகள் அல்லது தகவல்கள் அற்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுமத்துவதால், பாராளுமன்றம் குறித்து மக்களிடையே ஒருவித அருவருப்பான உணர்வே ஏற்படுகின்றது. ஆயினும், நிதிக்கட்டுப்பாடு, நிதி துஷ்பிரயோகங்களைத் தடுத்தல் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்பவற்றுக்காகப் பாராளுமன்றக் குழுக்கள் மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, பொதுமக்கள் மனுக்களின் புகார்கள் பற்றிய செயற்குழு மூலம் வேறு எவ்விடத்திலிருந்தும் நீதி கிடைக்கப்பெறாத நாட்டின் சாதாரண பிரஜைகள், மக்கள் பிரதிநிதிகள் ஊடாகத் தமது பிரச்சினைகளைச் சமர்ப்பித்துத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முக்கிய இடமாக அது மாறியிருக்கின்றது. அதேபோன்று, செயற்குழுவினால் வழங்கப்படும் பரிந்துரைகள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் வழங்கப்படுவதும், அவை சரிவர நடைமுறைப்படுத்தப்படாவிடின் அது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அழைத்துப் பிற்செயற்பாட்டுக் கண்காணிப்பை மேற்கொள்வதும் அவசியமாகும். இந்த விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன், செயற்குழுவின் முன்னால் சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்கள் இதனை ஒரு சிரமமாகவோ அல்லது தொல்லையாகவோ கருதக்கூடாது. மக்களின் வாக்குகள் மற்றும் வரிப் பணத்தின் பெறுமதியைப் பாதுகாக்கும் பொறுப்பை அவ்வதிகாரிகள் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் வரிப் பணத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பாராளுமன்றம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பங்காற்றல் குறித்து மக்கள் மத்தியில் சரியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஜனநாயக நடைமுறையில் செயற்படும் விதம் குறித்த உரையாடலை உருவாக்குவதும் இத்தகைய செயற்குழுக்களின் விவாதங்கள் ஊடாக ஏற்படுகின்றது எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு