தற்போதைய கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்து, கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய பிரதமரின் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள செயலணியினால், தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் அமைப்புடன் (NEMIS) மாகாணக் கல்வித் தகவல் அமைப்புகளை ஒருங்கிணைப்பது மற்றும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்ற ஆகஸ்ட் (12) அலரிமாளிகை வளாகத்தில், பிரதமர் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், இத்திட்டத்தின் முக்கிய நோக்கமான தூரப்பிரதேசப் பாடசாலைகளுக்கு டிஜிட்டல்மயமாக்கல் மூலம் கல்விக்குச் சமமான அணுகலை வழங்குதல், கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாட்டில் வளங்கள் விநியோகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைப்பதன் மூலம் கல்விக்குச் சமமான வாய்ப்புகளை வழங்குதல், கல்வியை டிஜிட்டல்மயமாக்குவதற்கு மாகாண மட்டத்தில் தற்போது பயன்படுத்தப்படும் முறைமைகள் மற்றும் அவை தொடர்பாக அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்களை அடையாளம் கண்டு, தேசிய மட்டத்தில் வினைத்திறனான முறைமை ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,
டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மாகாண மட்டத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்காகப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், டிஜிட்டல் தீர்வுகள் கொள்முதலில் முறையான நடைமுறைகள் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்ட கல்விச் செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்களினால் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பாடசாலைகள் மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களில் டிஜிட்டல் தீர்வுகளின் பயன்பாடு குறித்த தரவுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் கல்விச் செயற்பாடு தொடர்பாக தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை மிகவும் துல்லியமாக மேற்கொள்ள முடியும் என்றும் பிரதமரின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண தனபால, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, பிரதமரின் மேலதிக செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப், செயலணி உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் NEMIS திட்டத்துடன் இணைக்கப்பட்ட விமானப்படை அதிகாரிகள், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்விச் செயலாளர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு