புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முதலாம் தரத்திற்குப் பிரவேசிக்கும் பிள்ளைகளை நாம் அன்புடன் வரவேற்கின்றோம்.
எவ்வித அரசியல் செல்வாக்கோ அல்லது தலையீடோ இன்றி, முறையான தகுதிவகை அளவுகோல்களின் அடிப்படையில் தேவையுள்ளவர்களுக்கு வீட்டு வசதி உதவிகள் வழங்கப்படும் என்றும்; புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் முதலாம் தரத்திற்குப் பிரவேசிக்கும் பிள்ளைகளை நாம் அன்புடன் வரவேற்போம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
“தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், காலி மாவட்டத்திற்கான 2026ஆம் ஆண்டின் முதலாவது வீட்டு வசதி உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனவரி 28ஆம் திகதி காலி ‘ஹோல் டி கோல்’ (Hall de Galle) மண்டபத்தில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வீடமைப்பு, நிர்மாணத்துறை, நீர்வழங்கல் அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NHDA) ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் தேசிய வீடமைப்புத் திட்டத்திற்கு அமைய, காலி மாவட்டத்தின் 250 பயனாளிகளுக்குத் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் பாரிய எதிர்பார்ப்பாகும். ஒரு வருடத்திற்குள் மக்களுக்காகக் கட்டப்படும் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் என்ற இலக்கை அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் அடைவார்கள் என நான் நம்புகிறேன். சிறுவர்கள், முதியவர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் சுதந்திரமான, சுகாதார வசதிகளுடன் கூடிய சொந்த வீடு இருப்பது அவர்களது வாழ்க்கையின் உறுதித்தன்மைக்கும் சுயகௌரவத்திற்கும் மிக முக்கியமானது. எவ்வித அழுத்தமோ அல்லது தலையீடோ இன்றி, முறையான தகுதிவகை அளவுகோல்களின் அடிப்படையில் தேவை இருக்கின்ற மக்களே இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வீட்டு வசதி உதவியைப் பெற்றவுடன், முறையான தொழில்நுட்பத் தரங்களுக்கு அமைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்குமாறும்; வீடு கட்டி முடிக்கப்பட்டதும் வீட்டுத் தோட்டத்தில் பயிர்ச்செய்கைகளை ஆரம்பித்துத் தன்னிறைவு மிக்க அழகான சூழலை உருவாக்குமாறும் பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
புதிய கல்வி மறுசீரமைப்பிற்குள் உள்வாங்கப்படுகின்ற முதலாம் தரப் பிள்ளைகளை மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம். இவ்வருடம் 6ஆம் தரத்திற்குத் தெரிவாகும் பிள்ளைகளுக்குப் புதிய கல்வி மறுசீரமைப்புகள் எக்காரணம் கொண்டும் கிடைக்காமல் போவதற்கு இடமளிக்க மாட்டோம். அப்பிள்ளைகளுக்கும் இச்செயல்முறையின் கீழ் எவ்வித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. புதிய சீர்திருத்தங்களுக்காக மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட மேலதிக பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, எனக் கூறினார்.
நிகழ்வில் உரையாற்றிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் மருத்துவர் எச். எம். சுசில் ரணசிங்க,
எமது மக்களுக்கு இருந்த வாழ்க்கையை விட ஒரு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம். ’டிட்வா’ சூறாவளி முடிந்து ஒரு மாதத்திற்குள்ளேயே நாம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்து விட்டோம். இதன்போது நாம் நிதி உதவிகளை வழங்கியது மக்களுக்கு இருந்த வீட்டை விடச் சிறந்ததொரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கு வழிவகுப்பதற்கே ஆகும். அதேபோல், மக்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்தப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் என நாம் எதிர்க்கட்சியினரிடம் கேட்டுக்கொள்கிறோம். ’தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ வீடமைப்புத் திட்டத்தினூடாகப் பல மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வருடத்தில் 31,000 வீடுகளை முழுமையாகக் கட்டி முடிப்பதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்கான அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் மருத்துவர் எச். எம். சுசில் ரணசிங்க, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி. பி. சரத், தொழிற்கல்வி பிரதி அமைச்சரும் காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நலின் ஹேவகே, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே உள்ளிட்ட காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர், பிரதேச சபை மற்றும் நகர சபை தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு