புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு பங்ஙிய மீளாய்வு

யுனிசெஃப் (UNICEF) நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, புதிய டிஜிட்டல்மயமாக்கல் கொள்கை வரைவு குறித்து முதற்கட்ட மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், தற்போது நடைமுறையில் உள்ள கல்விச் சீர்திருத்தங்களுடன் இணைந்ததாக புதிய டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் குறிப்பாக வலியுறுத்தப்பட்டது.

கல்விச் சீர்திருத்தங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கும் பாடத்திட்டச் சீர்திருத்தம், உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, நிர்வாகக் கட்டமைப்புச் சீர்திருத்தம் உள்ளிட்ட ஐந்து அடிப்படை அம்சங்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்தக் டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.

தற்போதைய வரைவு பிரதானமாகப் பாடத்திட்டம் சார்ந்த விடயங்களிலேயே கவனம் செலுத்தியுள்ளதாகவும், முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, டிஜிட்டல் எழுத்தறிவு, NEMIS (National Education Management Information System) மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், டிஜிட்டல்மயமாக்கலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதன் முக்கியத்துவம் ஆகியன குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி முறைமையில் உள்ள குறைபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதோடு, காகிதப் பயன்பாட்டைக் குறைப்பதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

யுனிசெஃப் நிறுவனப் பிரதிநிதிகளான டாக்டர் எம்மா பிரிகாம் (Dr. Emma Brigham), டெபோரா வைபர்ன் (Deborah Wyburn), பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிகச் செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரப் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு