இலங்கை பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒக்டோபர் 23 ஆம் திகதி அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, பெண்கள் கிரிக்கெட் அணியின் உறுப்பினர்களுடன் நட்பு ரீதியாகக் கலந்துரையாடிய பிரதமர், தற்போது நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தயார்படுத்தல்கள் குறித்து கேட்டறிந்தார்.
அத்தோடு, பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக அரசாங்கத் தரப்பில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் பற்றி வீராங்கனைகளின் கருத்துக்களைப் கேட்டறிந்த பிரதமர்,
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கான ஆர்வம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து விசாரித்ததோடு, விளையாட்டின் மேம்பாட்டிற்காக கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஊடாக அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் விளையாட்டுக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மாகாண மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரதமரின் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், விளையாட்டின் மூலம் முழு நாட்டையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்த அவர், ஒவ்வொரு மாகாணத்திலும் சமமான வசதிகளுடன் ஒவ்வொரு விளையாட்டுத் துறையினையும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், வீராங்கனைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது தொடர்பான விடயங்கள் குறித்தும் கவனத்தில் கொண்ட பிரதமர், பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை நாட்டில் பிரபலமான விளையாட்டாக மேலோங்கச் செய்வதற்கு பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி வழங்கிய பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நன்றி தெரிவித்தார். ஒக்டோபர் 24ஆம் திகதி இன்று நடைபெறவுள்ள இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியில் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், 2025 பெண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண சுற்றுப் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ள தேசிய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன, பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து, உப தலைவி அனுஷ்கா சஞ்சீவனி கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா, செயலாளர் பந்துல திசாநாயக்க, பொருளாளர் சுஜீவ கொடலியத்த மற்றும் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு