எமது சிறார்களுக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருக்கின்றது - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களாகிய நமது கடமையாகும்

நமது சிறார்களுக்கு நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருப்பதாகவும், அதற்குத் தேவையான பாதைகளைத் திறந்து விடுவதுதான் பெரியவர்களின் கடமையாகும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

"Sri Lanka Skills Expo 2025" கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் ஒக்டோபர் 10 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் இளைஞர்களிடையே நிலவும் தொழில்வாய்ப்பின்மை வீதத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தக் கண்காட்சி மூன்றாவது முறையாகவும் ஒக்டோபர் மாதம் 10, 11 ஆகிய இரு தினங்களில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடத்தப்படுகின்றது. கைத்தொழில் துறை திறன் சபையும் (Industry Sector Skills Councils - ISSC), கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சும் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர்:

நாம் ஆரம்பித்துள்ள கல்விச் சீர்திருத்தத்தில் இதுவொரு சிறப்பான சந்தர்ப்பமாகும். இதன் மூலம் நாம் எதிர்பார்ப்பது, குறிப்பாக எமது பிள்ளைகளுக்குக் கல்வித் துறையில் காணப்படுகின்ற வாய்ப்புகளை விரிவுபடுத்துவதை மாத்திரமல்ல, அந்த வாய்ப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான பாதையைத் திறந்து விடுவதோடு, இந்த அனுபவங்களை கல்வி மூலம் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே இந்த நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்கின்றோம்.

இந்தக் கண்காட்சி மூலம் உங்கள் எதிர்காலப் பயணத்திற்கான வழிகாட்டல்களை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். உங்களதும் பெற்றோரினதும் விருப்பம், உங்களது திறமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இன்றைய உலகில் உருவாகும் வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள இது ஒரு மிகச்சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நினைக்கிறேன்.

உண்மையில், இந்தக் காலகட்டத்தில் கல்வி கற்று சமூகத்தில் இணைந்து கொள்ளவிருக்கும் உங்களது தலைமுறையினர் முகம் கொடுக்க வேண்டிய பல சவால்கள் காணப்படுகின்றன. தொழில்நுட்பத்தின் காரணமாக உலகம் மிக வேகமாக மாறி வருகிறது. குறிப்பாக, எவராலும் நினைத்துப் பார்க்க இயலாத வகையில் சமூகம் மாற்றம் பெரும்போது, மாறிவரும் அந்தச் சமூகத்தில் தொழில்களும் மாற்றமடைகின்றன. நாம் சிந்திக்கப் பழகியிருக்கும் பாரம்பரியப் பாதையில் பயணிப்பதன் மூலம் இந்தச் சமூகத்தில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள இயலாது. ஆகையினால், மாறிவரும் சமூகத்தைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொண்டு எமது கல்விப் பயணத்தைத் தொடர வேண்டும்.

இதன் மூலமே எமது தேசிய அபிவிருத்தித் திட்டத்தில் உங்களை இணைத்துக்கொள்வது சாத்தியமாகும். நாம் நமது பொருளாதாரத்தை மேம்படுத்தச் பயணிக்கும் பாதைகள் எவை என்பதை இந்த நிகழ்ச்சிகள் மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். இந்த அபிவிருத்திப் பொருளாதாரத் திட்டத்தில் நீங்கள் எங்கு இணைந்து கொள்ளலாம், எங்குப் பங்காளியாக இருக்கலாம், எந்தப் பாதையில் செல்லலாம் என்பதைப் பற்றி உங்களுக்கு மாத்திரமின்றி, உங்களது ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் ஒரு புரிதலைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இந்தக் கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு புதிய உலகத்திற்கான, சமூகத்திற்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. உலகத்தின் புதிய போக்குகள் என்ன என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. நீங்கள் நினைப்பதை விடச் சமூகத்தில் உங்களுக்கான வாய்ப்புகள் இருக்கின்றன, உங்களுக்கென ஓர் இடம் இருக்கின்றது. அந்த இடத்திற்கு நீங்கள் வரும்வரை நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதனுடன் இணைந்து முன்னோக்கிச் செல்லுங்கள். நீங்கள் முன்னோக்கிச் செல்லும் அந்தப் பயணத்தில் நாட்டை அபிவிருத்தி செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.

எம்மால் செய்யக்கூடியது, உங்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தை வழங்குவதும், புதிய வாய்ப்புகளுக்கான பாதையை அமைத்துக் கொடுப்பதுமே ஆகும். அந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்வதே உங்கள் பொறுப்பாகும்.

இங்கு கூடியிருக்கும் சிறார்களாகிய உங்களுக்கு இந்தச் சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான சக்தி, திறமை மற்றும் மனப்பான்மை இருக்கின்றது என நான் நம்புகிறேன். நீங்களே அடுத்த தலைமுறையின் தலைமையை ஏற்கப் போகிறீர்கள். இது எல்லோரும் உங்களுக்குச் சொல்லும் விடயம் என்று நான் நினைக்கிறேன். ஆயினும், நாம் அதைச் சொல்வதோடு நின்றுவிடாது, அந்தச் சந்தர்ப்பங்களை, அந்தத் தலைமையைப் பெறக்கூடிய கல்விப் பின்னணி, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான பாதைகளை உங்களுக்காகத் திறந்து விடுகிறோம். பெரியவர்களாகிய எமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது, இதை எப்படியாவது உங்களுக்குச் செய்துகொடுப்போம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் இந்த நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், எனப் பிரதமர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, தொழில் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுத்தந்திரீ, கல்வி அமைச்சின் செயலாளர் நாளக களுவெவ உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு