தனித்தனியாகத் தத்தம் பங்கை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, கூட்டுத் தீர்மானங்களை எடுத்துக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுங்கள்
குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதில் தனித்தனியாகத் தத்தம் பங்கை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, கூட்டுத் தீர்மானங்களை எடுத்துக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக நவம்பர் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உக்கிப்போகும் கழிவுகளை முறையாக அகற்றுதல், அதற்கான காணிகளைக் கையகப்படுத்துதல், மழைநீரால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட, கொழும்பு மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் இவ்வாறு கூறினார்:
“ஒவ்வொரு நிறுவனமும் பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் மாத்திரம் பொறுப்பிலிருந்து விலகிச் செல்ல முடியாது.
ஒரு திட்டத்தை ஆரம்பித்தால், அதன் நிறைவுக்கும் தொடர்புடைய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும். தனித்தனியாகத் தத்தம் பங்கை மாத்திரம் நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கூட்டுத் தீர்மானங்களை எடுத்து, செயன்முறைகளைத் தயாரித்து, நிலவும் பிரச்சினைகளைக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
குழுக்களில் கலந்துரையாடி எடுக்கப்படும் தீர்மானங்களை அந்தந்த நிறுவனங்கள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த அரசாங்கத்தினால் அதிகாரிகள்மீது அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை. எனவே, நீங்கள் ஆரம்பிக்கும் திட்டங்களைச் சீராகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நிறைவு செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். திட்டங்களை இடைநடுவில் நிறுத்திவிடாமல் இறுதிவரை நடைமுறைப்படுத்துவதுடன், உரிய கண்காணிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.”
சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி, பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணஆரச்சி, சமன்மலி குணசிங்க, அசித நீரோஷன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதிப் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார ஆகியோருடன் மக்கள் பிரதிநிதிகளும் பல அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு