2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கை தயாரித்தல், திட்டம் வகுத்தல், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை எம்மால் சிறப்பாக முன்னெடுக்க முடிந்துள்ளது.
நிதி ஒதுக்கீட்டில் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது. நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயல்படுத்தப்பட வேண்டும்.
கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கும், திட்டங்களைத் தயாரிப்பதற்கும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த அரசாங்கத்தினால் முடிந்திருக்கிறது என்றும், நிதி ஒதுக்குவதால் மாத்திரம் அனைத்தும் நடந்துவிடாது என்பதால் நிறுவனங்களைப் பலப்படுத்தி, கொள்கைத் திட்டத்திற்கு ஏற்ப செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் அவர்கள்,
"கல்வி பற்றிப் பேசும்போது, ஒரு நாட்டில் தரமான கல்வியை உருவாக்க வேண்டுமானால், கல்வி தொடர்பான முடிவுகள் கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும். இரண்டாவது, கொள்கைகளை நடைமுறைப்படுத்த வலுவான நிறுவனக் கட்டமைப்பு அவசியம். இவை இரண்டையும் செய்யப் பணம் இருக்க வேண்டும். நம் நாட்டின் வரலாற்றில் இந்த மூன்று அம்சங்களும் சரியாகச் செய்யப்படாததால்தான் இன்று நாம் கல்வித் துறையில் பல பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதிலும், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் கல்விக்காகச் செய்யும் சேவை காரணமாக கல்வியின் தரத்தைப் பேண முடிந்துள்ளது.
2025ஆம் ஆண்டில் நாம் மேற்கொண்ட மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நமது கல்வித்துறை சார்ந்த தீர்மானங்களை இயற்றுதல், நிறுவனங்களை இனம் கண்டு, நிலவுகின்ற பிரச்சினைகளை முறையாகத் தீர்த்து, நிறுவனக் கட்டமைப்புகளைச் சரிசெய்து, கொள்கைத் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, கொள்கை திட்டங்களுக்கு அமைய பணத்தை உரிய முறையில் பயன்படுத்தி, 2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்ற கல்விச் சீர்திருத்தங்களுக்காகச் செயற்பட்டமையே ஆகும்.
கொள்கைகளை உருவாக்குவதால் மாத்திரம் தரமான கல்வியை நடைமுறைப்படுத்திவிட இயலாது. அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சிறந்த திட்டம் இருத்தல் வேண்டும். அதிகாரிகளுக்குச் சரியான இலக்குகளைக் கொடுக்க வேண்டும். பொறுப்புகள் சரியாகப் பகிரப்பட வேண்டும். கடந்த காலங்களில் இருந்த கல்விக் கொள்கைகளைப் பார்க்கும்போது, பாடசாலைகளில் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான பரிந்துரைகளில் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆயினும், கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான திட்டமிடல், நிறுவனக் கட்டமைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைச் சீராகச் செய்யப்படாததாலேயே அந்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு காரணமாக இருந்திருக்கின்றன.
2025இல் அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குப் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எம்மால் எடுக்க முடிந்தது. அதற்கான நிறுவன அமைப்பை உருவாக்க எம்மால் முடிந்தது. கல்வி அமைச்சு முடிவுகளை எடுக்கும்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய நான்கு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. அவை: சமத்துவத்தின் மூலம் கல்வித் துறையின் வேற்றுமைகளைத் தளர்த்துதல், தரத்தை அதிகரித்தல், ஆளுகை (Governance) மற்றும் தரவு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றின் ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கைகளைத் தயாரித்தல் ஆகியனவாகும். இந்த நான்கு அம்சங்களின் அடிப்படையில் கொள்கைகளைத் தயாரிக்கவும், திட்டங்களைத் தயாரிக்கவும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்கவும் எம்மால் முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் பிரச்சினையை ஆராய நாம் நியமித்த குழு வெளியிட்ட அறிக்கையில், கடந்த காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் செயல்முறை எந்த அளவிற்குச் சீர்குலைந்திருந்தது என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. செயலில் இருக்க வேண்டிய கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்குப் பதிலாக, மிகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் முடிவுகள் எடுக்கப்பட்டதால், அந்தப் பல்கலைக்கழகத்தின் தரம் சீர்குலைந்தது இருப்பதோடு அதனால் அந்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமையினாலும், நிறுவனக் கட்டமைப்புகளில் பலவீனங்கள் இருந்ததாலும், கல்வி தொடர்பான அனைத்து நிறுவனங்களும் இவ்வாறு வீழ்ச்சியடைந்தே இருந்தன. 2025ஆம் ஆண்டில் அந்த நிலைமையைச் சரியான இடத்திற்குக் கொண்டு வர எம்மால் முடிந்திருக்கின்றது.
பல வருடங்களின் பின்னர் கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது 7.04 பில்லியன் ரூபா. அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.04% ஆகும். முதல் வருடத்திலேயே கல்விக்காக 6% விகிதத்தை ஒதுக்குவோம் என நாம் கூறவில்லை. கொள்கைகளை உருவாக்கி, நிறுவனங்களை பலப்படுத்துவதன் மூலமே அந்த இலக்கை அடைய முடியும் என்பதை நாம் அறிவோம். பணத்தை ஒதுக்கிக் கொடுப்பதால் மாத்திரம் அனைத்தும் நடந்தேறிவிடாது. நிறுவனங்களைப் பலப்படுத்தி, கொள்கைகளை நடைமுறைப்படுத்திப் பணத்தை ஒதுக்குவோம்.
கல்விச் சீர்திருத்தங்களுக்காக 3,000 மில்லியன் ரூபா கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமையவே நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். 2025இல் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட செலவினம் குறித்தும் இங்கு பேசப்பட்டது. ஆயினும் எமது வரவுசெலவுத் திட்டம் ஏப்ரல் மாத இறுதியிலேயே நிறைவேற்றப்பட்டது. மே மாதத்திலிருந்தே பண ஒதுக்கீடு ஆரம்பமானது. அதன்படி, எமது நிதித் துறையின் முன்னேற்றம் 18% ஆகும். டிசம்பர் மாதத்திற்குள் எமது அந்த முன்னேற்றம் 69% ஆக வந்துபடும். இதற்கு முன் கல்விக்காக இந்த அளவு திறமையான செயல் திறன் வெளிப்பட்டதில்லை. செயலாளர்கள் உட்பட அதிகாரிகளுக்கு இலக்குகளைப் பெற்றுக் கொடுத்து, கண்காணிக்கப்பட்டே இந்த முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது. 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளில் இதைவிட அதிக முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியும்.
சவால்கள் இருக்கவே செய்கின்றன. பலவிதமான பலவீனங்கள் இருந்து வருகின்ற ஒரு துறையையே நாம் மேம்படுத்தி வருகிறோம். இதற்கு மேலும் இத்துறையின் செயல்திறன் அதிகரிக்கப்பட வேண்டும். பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் பிரச்சினை எழும்போது அதன் மீது திறமையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். இருந்து வருகின்ற வரையறைகளைக் குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் எல்லா சவால்களையும் ஏற்றுக்கொண்டு, கொள்கைகளை உருவாக்கி, திட்டங்களைத் தயாரித்து, படிப்படியாக எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம்," எனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு