அதற்கு, தொழிற்கல்வியை மேம்படுத்துவது அவசியம்.
தொழிற்கல்வியை முன்னேற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற "Sri Lanka Skills Expo 2025" கண்காட்சி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் நிலவிவரும் இளைஞர்களின் வேலையின்மையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கண்காட்சியை, மூன்றாவது முறையாகவும் ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை கைத்தொழில்துறை திறன்கள் பேரவையும் (ISSC) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
பிரதமர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்:
"தற்போதைய கல்வி முறையின் கீழ், மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் மற்றும் வணிகப் பாடங்களைத் தேர்வு செய்கின்றனர். அந்தப் பாடங்களைப் கற்பதற்கு போதுமான தகைமைகள் இல்லாத பிள்ளைகள் கலைத்துறை பாடங்களைத் தேர்வு செய்கிறார்கள்." அவர்களில், சித்தியடையத் தவறும் மாணவர்கள்தான் தொழிற்கல்வியை நோக்கித் திரும்புகிறார்கள். தொழிற்கல்வி என்பது அத்தகைய தோல்விகளுக்குப் பின்னர் திரும்ப வேண்டிய ஒரு துறை அல்ல. அது மாணவர்கள் தேர்வாக இருக்க வேண்டும்.
எமது கல்வி சீர்திருத்தங்களில் நாம் அடைய எதிர்பார்க்கும் நோக்கம், மாணவர்கள் 10 ஆம் வகுப்பை அடையும் போது அவர்கள் எந்தத் தொழிலைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவை அவர்களுக்கு வழங்குவதும், அந்தப் பாதையை நோக்கி அவர்களை வழிப்படுத்துவதும் ஆகும்.
தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது, எமக்குப் பல்வேறு தொழில்முறை அறிவு கொண்ட மனித வளம் தேவை. எனவே, அந்த மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனையும், நெகிழ்வுத்தன்மையையும், அறிவையும் எமது பிள்ளைகளுக்கு நாம் தொடர்ந்து வழங்க வேண்டும். பிள்ளைகளுக்கு அறிவை வழங்குவதைப் போலவே, அவர்களை மனித நற்பண்புகள் நிறைந்தவர்களாக மாற்றுவதும் அவசியம்.
புதிய உலகிற்குள் பிரவேசிப்பதற்கு தொழிற்கல்வி அவசியம் என்பதால், எமது கல்வி சீர்திருத்தங்களில் தொழிற்கல்விக்கு விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
"இந்த கண்காட்சியின் மூலம் பிள்ளைகள் பல்வேறு தொழில்களைப் பற்றிய சிறந்த விளக்கங்களைப் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்." என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, கல்வி அமைச்சு மற்றும் கைத்தொழில்துறை துறை திறன்கள் பேரவை (ISSC) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு