அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை இன்றைய தினங்களில் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
ஊழல் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள் இப்பொழுது நன்கு குழப்படைந்துள்ளதுடன் அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களின் இறுதி தஞ்சம் இனவாதம் என்பதை இன்றைய தினங்களில் உறுதிப்படுத்தி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்டத்தின் நெடுங்கேணி கலாசார மண்டபத்தில் ஏப்ரல் 20ம் திகதி இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
எமது நாட்டில் முன்னர் இருந்த அரசியல் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மலையகத்திற்கென வெவ்வேறாக இருந்தது. அவர்கள் பிரதேசங்களுக்கு, இனங்களுக்கு என வெவ்வேறாகவே தமது அரசியல் கலாசாரத்தை முன்னெடுத்து வந்தனர். இதனூடாகவே ஊழல் நிறைந்த அரசியல் உருவானது. ஒரு கதை உள்ளது தானே, அரசியல் ரீதியாக நிர்க்கத்தியானவர்களின் தஞ்சம் இனவாதம் என்று. எனினும் நீங்கள் இன, மத பேதங்களை பின்தள்ளி எமது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தது, குறித்த கலாசாரத்தை மாற்றுவதற்கே என எமக்கு தெரியும். இந்த நாட்டு மக்கள் முதற்தடவையாக கொள்கை மற்றும் நோக்கத்தை பார்த்து வாக்களித்துள்ளனர்.
நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பொதுக் கூட்டங்களில் நான் பங்கேற்றிருந்தேன். அத்துடன் அங்கிருந்த சில வீடுகளுக்கும் சென்றிருந்தேன். குறித்த வீடுகளில் குறைந்தது ஒருவராவது வெளிநாடுகளுக்குச் சென்று குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளனர். தமது நாட்டில், தமக்குரிய ஊரில் இருந்துகொண்டு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு வழி இல்லாமையே இதற்கு காரணமாகும்.
இவ்வளவு காலமும் கிராமங்கள் அபிவிருத்தியடையாமல் இருந்தமைக்கு காரணம் பிரதேச சபைகளுக்கு போதுமான நிதி கிடைக்காமை அல்ல. மாறாக, ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக செயற்படாமையே இதற்கு காரணமாகும்.
தமது கிராமத்திற்குரிய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கே பிரதேச சபைகள் உள்ளன. கிராமிய வீதிகள், வடிகான் கட்டமைப்பு, முன்பள்ளிகள், பஸ் தரிப்பிடங்கள் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கே பிரதேச சபைகள் உள்ளன. இவை மக்களின் அன்றாட வாழ்வியலுக்கு தேவையானவை. நாம் தேவைக்கு அதிகமாக துன்பங்களை அனுபவித்துள்ளோம். இவை அனைத்தும் இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வர வேண்டும். அடுத்த பரம்பரையினருக்கு அழகிய வளமான நாட்டை சொந்தமாக்கிக் கொடுப்பதே எமது இலக்காகுமென பிரதமர் தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் உள்ளிட்டவர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு