பிள்ளைகள் தமது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு
பாடசாலை மீளமைப்பு நடவடிக்கைகளின் கீழ் பாடசாலைகளை ஒன்றிணைக்கும்போது போக்குவரத்து வசதிகளை வழங்குவது கட்டாயமாகையால், சம்பந்தப்பட்ட பிரதேசத்துக்கும் பிரச்சினைக்கும் பொருத்தமான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நவம்பர் 23ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு மாவட்டக் கல்வி உபகுழுக் கூட்டத்தில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் போஷாக்குத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களின் பாடசாலை வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்தது.
பாடசாலை வளங்களைப் பாதுகாப்பதற்காக மாகாண சபையினூடாகத் தேவையான அனுமதியைப் பெற்று, பாடசாலை மட்டத்திலோ பிரதேச ரீதியிலோ பாதுகாவலர்களை ஆட்சேர்க்கும் பொறிமுறையொன்றைத் தயாரிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதற்காக, அந்தந்தப் பாடசாலைகளின் தேவைக்கேற்பத் தினசரிக் கொடுப்பனவு முறையின் கீழ் அல்லது வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டினூடாக நிதியை ஒதுக்கிக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பிலும், சில சந்தர்ப்பங்களில் வெளித்தரப்பினரிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ளும்போது பொருத்தமான அளவுகோல்களுக்கு அமையச் செயற்படுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் குறைவாக இருப்பது, மாணவர்கள் இடைவிலகுவதற்கும் வருகை குறைவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. எனவே, இப்பிரச்சினை நிலவும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழ் மொழி மூல வகுப்புகளை ஆரம்பிக்கவும், எதிர்காலத்தில் மும்மொழிப் பாடசாலையொன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. எந்தவொரு பிள்ளையும் தமது தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனப் பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.
பிறப்புச் சான்றிதழ்கள் இன்றிப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்குரிய ஆவணங்களைத் தயாரிக்கும்போது நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, பாடசாலை மட்டத்தில் மாத்திரமன்றிப் பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து நடமாடும் சேவைகளையோ ஒருங்கிணைப்பு வேலைத்திட்டங்களையோ நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
மேல் மாகாணத்தில் அதிபர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் திட்டவட்டமான கொள்கையொன்று காணப்படவில்லை என்றும், அண்மைக் காலத்தில் கொள்கையொன்றைத் தயாரித்து, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்து அதன் அனுமதியைப் பெற்றுள்ளமையால், அடுத்த வருடம் முதல் இடமாற்ற நடைமுறையை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்னெடுக்க முடியும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக, வசதிகள் குறைந்த அல்லது கடினமான சூழலிலுள்ள பாடசாலைகளை நடத்திச் செல்வதில் அதிபர்களின் அர்ப்பணிப்பு முக்கியமானது என்றும், பாடசாலைகளின் நிலைமையைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்கள் தமது கடமைகளின்போது செயன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால், அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளுக்கு மேலதிகமாகப் பயிற்சித் தொகுதிகளை வழங்குவதும் பொருத்தமானது எனக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அடுத்த வருடப் பயிற்சி வேலைத்திட்டங்களின்போது ‘மாணவர் மையம்’ என்பதன் உண்மையான அர்த்தம் மற்றும் அதனைச் செயற்படுத்தும் விதம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வெகுஜன ஊடகப் பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, நகர அபிவிருத்திப் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, கைத்தொழில் பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க, கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க, கொழும்பு மேலதிக மாவட்டச் செயலாளர் காஞ்சனா குணவர்தன ஆகியோருடன் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு