மிட்சுபிஷி நிறுவனத்தின் அனுசரணையில், இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ’மிட்சுபிஷி ஆசிய சிறுவர் எனிக்கி ஃபெஸ்டா’ சித்திர நாட்குறிப்புப் போட்டியின் வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும் விழா ஆகஸ்ட் 28 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுவின் தலைவரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாட்டா அகியோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
"Enikki Festa" இந்தப் போட்டியானது, ஆசியச் சிறார்களிடையே பல்வேறு கலாசாரங்கள் குறித்த புரிதலை வளர்ப்பதையும், அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற 300 சிறார்கள் பாராட்டப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இந்தப் போட்டி கற்பனைத்திறன், படைப்பாற்றல் மற்றும் நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான கொண்டாட்டம் என்று குறிப்பிட்டார்.
இதன் மூலம் இலங்கையின் பண்புகள், மரபுகள் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையை உலகிற்குப் பகிர்ந்துகொள்ளவும், சிறார்களின் படைப்புகளின் மூலம் நாட்டின் பெருமையை சர்வதேச அளவில் எடுத்துச்செல்லவும் வாய்ப்பு கிடைப்பதாக அவர் கூறினார்.
மேலும், நாட்டின் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ஜப்பான் அரசு அளித்துவரும் ஆதரவுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மேலும் கூறுகையில், "கல்வியில் சிறந்து விளங்குவதுபோலவே படைப்பாற்றலையும் வளர்க்கும் கல்வி முறைக்கு எங்கள் அரசாங்கம் முழுமையாக உறுதியளித்துள்ளது. எங்கள் எதிர்கால கல்விக்கொள்கைகள் கலை, கலாசாரம் மற்றும் தொழில்முறைத் திறன்களுக்குச் சமமான முக்கியத்துவம் அளிக்கும். அதே நேரத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவையும் வழங்கும் வகையில் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்டிருக்கும்.
எங்கள் சிறார்களை வெற்றிகரமான தொழில் வல்லுநர்களாக உருவாக்குவது மட்டுமல்லாமல், அவர்களைச் சமநிலையான, படைப்பாற்றல் மிக்க, மற்றும் இரக்க குணமிக்க குடிமக்களாகத் தயார்படுத்துவதும் எங்கள் நோக்கம்" என்றார்.
இந்த விழாவில் உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாட்டா அகியோ, வெற்றிபெற்ற சிறார்களைப் பாராட்டினார். இந்தப் போட்டிக்காக இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுவின் அர்ப்பணிப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
வெவ்வேறு நாடுகளின் கலாசாரங்களைப் பற்றிச் சிறார்கள் அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் இந்தப் போட்டி எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுவின் செயலாளர் நாயகம் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க, இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் நலக ரத்நாயக்க உள்ளிட்ட அதிதிகள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு