பெண்களின் உழைப்பை மதிக்கும் நியாயமான சமூகத்தையும், தேசிய பராமரிப்புக் கொள்கையையும் நிறுவுவது அவசியமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் (National Care Policy) நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட, ’தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும்’ என்ற பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இன்று (05) பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கையொன்றைப் பரிந்துரைத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணை குறித்து உரையாற்றக் கிடைத்தமை இட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக, ஆறு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் எனது கன்னி உரையை நிகழ்த்திய போது, ’பராமரிப்பு பொருளாதாரம்’ (Care Economy) பற்றி நான் பேசிய வேளையில், இச்சபையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களே இருந்தனர். அன்று அந்தத் தலைப்பைப் பற்றிப் பேசுவதே ஒரு புதிய விடயமாகக் கருதப்பட்டது.

ஆனால், ஆறு வருடங்களின் பின்னர் இன்று இத்தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் ஒரு பலமான குழு எமக்கு இருப்பையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த உரையாடல் இன்று எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்றால், எமது தேசியக் கொள்கை வரைவுக்கான ஒரு முன்மொழிவை முன்வைக்கும் அளவுக்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இக்கருத்தாடல் வலுவடைந்திருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவம், சமூக நிறுவனங்கள், அரச சேவை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ள ஒரு சூழலில், இவ்வாறானதொரு தீர்க்கமான அதே நேரத்தில் மிக முக்கியமான தலைப்பு குறித்து உரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.

பொதுவாக இத்துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தி வலுப்படுத்த வேண்டுமாயின், பெண்களின் உழைப்பை அங்கீகரித்து, ஒரு பிரஜையாக அனைத்துத் துறைகளிலும் சமமாகவும் கௌரவமாகவும் தனது விருப்பத்திற்கமைய பங்கெடுப்பதற்கான அவரது உரிமையை ஏற்றுக்கொண்டு, அதற்கான பிரதான தடைகளை நீக்குவதற்கு நாம் செயற்பட வேண்டும்.

பெண்களின் அரசியல் பங்களிப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இக்காலக்கட்டத்தில், பெண்கள் பிரஜைகளாக சமூகம், அரசியல் மற்றும் கலாசார ரீதியில் அச்சமின்றி கௌரவமான முறையில் செயற்பட வேண்டுமாயின், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பரப்புகளிலும் அவர்களின் கௌரவம் பேணப்படும் வகையிலும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வகையிலும் அந்தத் தளங்கள் ஒழுங்கமைக்கப்படுவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோன்று, இது சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரமன்றி, ஒரு சமூக மாற்றத்தின் ஊடாகவே நிகழ வேண்டும். அந்தச் சமூக மாற்றத்தினூடாக பெண்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்பதுடன், அனைத்துப் பிரஜைகளும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சம வாய்ப்புகளுடனும் வாழக்கூடிய ஒரு சமூகத்தையே நாம் எதிர்பார்க்கின்றோம், எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு