அனைத்து உயிரினங்களினதும் இருப்பை உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதே எமது தேசிய நோக்கமாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறுவர்களையும் உருவாக்குவதே எமது இலக்காகும்.

அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்கி, கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறுவர்களையும் உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் தேசிய இலக்காகுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் இன்று (28) புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட மூன் நினைவு அருங்காட்சியகத்தை (Moon Memorial Museum) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பேராதனை அரச தாவரவியல் பூங்காவின் 200 வருட பாரம்பரியம் மிக்க தாவரவியல் வரலாற்றை நினைவுகூரும் வகையில், புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட இந்த மூன் நினைவுத் தாவரவியல் அருங்காட்சியகம், பூங்காவின் ஸ்தாபகரான அலெக்சாண்டர் மூன் அவர்களை நினைவுகூரும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும் இந்தத் தாவரவியல் அருங்காட்சியகத்தின் மூலம், விசேட தாவரங்கள், தாவர மாதிரிகள், பொருளாதாரப் பயிர்கள், தாவர வரலாறு மற்றும் அதன் பயணப் பாதை உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு தாவரவியல் அருங்காட்சியகங்களுக்கு இணையாக உள்நாட்டு மக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு அறிவைப் பெற்றுக்கொடுப்பதும், இயல்நிலை பாதுகாப்பு (In-situ Conservation) உட்பட தாவர அமைப்பைப் பற்றிய பரந்த அறிவை மக்கள் மத்தியில் சமூகமயமாக்குவதுமே பிரதான நோக்கமாகும்.

அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த பிரதமர் அவர்கள் பூங்காவில் "பிணி பெரலிய" (Pini Beraliya) மரக்கன்று ஒன்றினை அடையாளச் சின்னமாக நாட்டினார்.

அத்தோடு, மூன் அருங்காட்சியகம் மூலம் மேற்கொள்ளப்படும் தாவரங்கள் பற்றிய விஞ்ஞான அறிவைச் சமூகமயமாக்குதல் மற்றும் அந்தச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் உள்ள முக்கியமான பங்கு, மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இவ் அருங்காட்சியகம் வழங்கும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். மேலும், சுற்றுலாத் துறைக்கு இதன் மூலம் பெறக்கூடிய பங்களிப்பையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் அவர்கள்,

"தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் எமது தேசிய நோக்கு, அனைத்து உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தும் நிலையான சுற்றுச்சூழலை உருவாக்குவதாகும். அது சாத்தியமாவதற்கு எமது நாட்டிற்கு வித்தியாசமான தலைவர்களும் வித்தியாசமான நாட்டு மக்களும் தேவைப்படுகின்றனர். அந்த மக்கள் இந்த நாட்டின் சுற்றுச்சூழல், விலங்குகள், கடல்கள் மீது மிகுந்த அன்பைக் காட்டும் உணர்வு மிக்க மனிதர்களாக இருக்க வேண்டும். அந்த வித்தியாசமான அல்லது மாற்றம் கண்ட மக்களை உருவாக்க, தேசிய மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்ட கலை மற்றும் கலாசாரத் துறையில் பலமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் முடியும் என நாம் நம்புகிறோம். எமது நாட்டில் பல்வேறு கலாசாரங்களை ஏற்றுக்கொள்ளும், சுதந்திரமான, விமர்சன சிந்தனையுள்ள, மானிட மகத்துவம் மிக்க புதிய கலாசார மனிதனை நாம் உருவாக்கினால், அந்த மனிதன் நிச்சயமாக தனது உரிமைச் சொத்தான இயற்கைச் சூழலைத் தமது உயிருக்கும் மேலாகப் பாதுகாப்பான்.

எமது நாட்டின் தாவர மரபுகளைப் பார்வையிடுவதற்கும், ஆய்வு செய்வதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் அத்தோடு எமது எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாப்பதற்கும் மிகச் சிறந்ததோர் வாய்ப்பாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அலெக்சாண்டர் மூன் அருங்காட்சியகம் அமையுமெனக் கூறலாம்.

அதேபோல், இந்த அருங்காட்சியகம் முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறி, அதன் மூலம் பேராதனை தாவரவியல் பூங்காவின் சுற்றுலா மதிப்பு மேலும் வளர்ச்சி பெற வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்" எனத் தெரிவித்த பிரதமர், எதிர்காலக் கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் சூழல்நேயப் பாடசாலைகளையும், சூழல்நேயச் சிறார்களையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் விசேட இலக்காகும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி அவர்கள்,

பிரதான ஐந்து தாவரவியல் பூங்காக்களுக்கு அப்பால் அதை விரிவுபடுத்துவதற்கும், விசேட காலநிலைப் பகுதிகளுக்கு ஏற்ப இந்தத் தாவரவியல் பூங்காக்களை அமைப்பதற்கும் தாவரவியல் பூங்கா திணைக்களமும் சுற்றுச்சூழல் அமைச்சும் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி, சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, மற்றும் தாவரவியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் திருமதி எச்.சி.பி. ஜயவீர, பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு